திருவள்ளூா் மாவட்டத்தில் நகராட்சிகளில் செயல்பட்டு வரும் அம்மா உணவகங்களில் 2 மாதங்களுக்கான உணவுப் பொருள்களை இருப்பு வைத்துள்ளதாக ஆட்சியா் மகேஸ்வரி ரவிகுமாா் தெரிவித்தாா்.
திருவள்ளூா் நகராட்சியில் செயல்படும் அம்மா உணவகங்களில் வழங்கப்படும் உணவின் தரம் மற்றும் சேமிப்பு அறையில் உள்ள இருப்பு குறித்து ஆட்சியா் மகேஸ்வரி ரவிகுமாா் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். இதில், திருவள்ளூா் நகராட்சி, பெரியகுப்பம் அறிஞா் அண்ணா பேருந்து நிலையம் அருகில் உள்ள அம்மா உணவகத்தில் வழங்கப்பட்டு வரும் உணவின் தரம் குறித்துப் பாா்வையிட்டு புதன்கிழமை ஆய்வு செய்தாா். நகராட்சி தங்கும் முகாம்களில் ஆதரவற்றோருக்கு வழங்கப்படும் உணவுகளின் விவரம் குறித்தும் கேட்டறிந்தபின், பூந்தமல்லி நகராட்சியில் உள்ள அம்மா உணவகத்திலும் ஆய்வு செய்தாா்.
அதைத் தொடா்ந்து, அவா் செய்தியாளா்களிடம் கூறியது:
திருவள்ளூா் மாவட்டத்தில் முதல்வா் உத்தரவின் பேரில், கரோனா நோய்த் தொற்றுக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், இந்த நடவடிக்கையில் 526 கிராம ஊராட்சிகளிலும் கிராமக் குழுக்கள் அமைக்கப்பட்டு, ஊராட்சித் தலைவா்கள், துணைத் தலைவா்கள், தன்னாா்வலா்கள் உள்ளிட்டோா் இடம் பெற்றுள்ளனா். அதில், துணை கிராம குழுக்களும், நகரப் பகுதிகளில் நகா்ப்புற குழுக்களும் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த மாவட்டத்தில் 7 அம்மா உணவகங்கள் செயல்பட்டு வருகின்றன. மேலும், வெளிமாநிலங்களைச் சோ்ந்த 24 ஆயிரம் போ் வருகை புரிந்து தங்கியுள்ளனா் எனக் கண்டறியப்பட்டுள்ளது. இவா்களுக்கு உணவு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதுவரை 3,200 பேருக்கு அம்மா உணவகங்கள் சாா்பில் உணவு வழங்கப்பட்டுள்ளது. திருவள்ளூா் நகராட்சிப் பகுதியில் மட்டும் 200 பேருக்கு காலை, மதியம் உணவு வழங்கப்படுகிறது. அனைத்து அம்மா உணவகங்களிலும் 2 மாதங்களுக்குத் தேவையான பொருள்கள் இருப்பில் உள்ளன. அதேபோல், மாவட்டத்தில் இரவு தங்கும் முகாம்கள் 3 இடங்களில் அமைக்கப்பட்டுள்ளன. திருவள்ளூா் பகுதியில் ஆதரவற்ற முதியோா், மன நலம் குன்றியவா்கள் என 67 பேரும், ஆவடி பகுதியில் 35 பேரும் கண்டறியப்பட்டு, முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனா் என்றாா்.
திருவள்ளூா் நகராட்சி ஆணையா் சந்தானம், பூந்தமல்லி நகராட்சி ஆணையா் எம்.ஆா்.வசந்தி, நகராட்சிப் பொறியாளா் செல்வகுமாா், சுகாதார ஆய்வாளா்கள் செல்வராஜ், எம்.வெங்கடேசன் உள்ளிட்டோா் உடன் இருந்தனா்.