மாற்றுத் திறனாளிகள் 157 பேருக்கு நலத்திட்ட உதவிகள்

திருவள்ளூர் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் 157 பேருக்கு ரூ. 48.93 லட்சத்தில் நலத்திட்ட உதவிகளை ஆட்சியர் மகேஸ்வரி ரவிகுமார் திங்கள்கிழமை வழங்கினார். 

திருவள்ளூர் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் 157 பேருக்கு ரூ. 48.93 லட்சத்தில் நலத்திட்ட உதவிகளை ஆட்சியர் மகேஸ்வரி ரவிகுமார் திங்கள்கிழமை வழங்கினார். 
திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மற்றும் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித்துறை சார்பில் ஊட்டச்சத்து போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு தலைமை வகித்த ஆட்சியர் மகேஸ்வரி ரவிகுமார், மாற்றுத் திறனாளிகள் 157 பேருக்கு ரூ. 48.93 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கிப் பேசியது:
குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து மிகுந்த உணவுப் பொருள்களை வழங்க வலியுறுத்தி, விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், தேசிய ஊட்டச்சத்து மாதம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. இதன்படி, குழந்தைகளுக்கு அனைத்து வகையான துரித உணவுகள் உள்ளிட்ட, பாக்கெட்டுகளில் அடைத்து விற்கப்படும் பொருள்களைத் தவிர்த்து, சத்தான கீரை, காய்கறிகள் மற்றும் பழங்கள் ஆகியவற்றை குழந்தைகளுக்கு வழங்கி ஊட்டச் சத்துடன் ஆரோக்கியமாக இருப்பதற்கான வழிமுறை மேற்கொள்ள வேண்டும்.
திருவள்ளூர் மாவட்டத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கான மருத்துவச் சான்று, இதுவரை 57,314 பேருக்கு நல வாரியம் மூலம் பதிவு செய்து 39,411 பேருக்கு வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் மனவளர்ச்சி குன்றியோருக்கான பராமரிப்பு உதவித்தொகை, பாதிக்கப்பட்டோருக்கான உதவித்தொகை, தொழுநோயால் பாதித்தோருக்கான உதவித்தொகை, தசைச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்டோருக்கான உதவித்தொகை என மாதந்தோறும் ரூ. 1,500- வீதம் 6,199 பேருக்கு ஏப்ரல் மாதம் முதல் செப்டம்பர் வரையில் ரூ. 5 கோடியே 57 லட்சத்து 91 ஆயிரம் வழங்கப்பட்டுள்ளது. 
 திருவள்ளூர் மாவட்டத்துக்குள்பட்ட, கால்கள் பாதித்த நிலையில், கைகள் நல்ல நிலையில் உள்ள 66 பயனாளிகளுக்கு ரூ. 34 லட்சத்து 88 ஆயிரத்து 892 மதிப்பிலான இணைப்புச் சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் வாகனங்களும், மாற்றுத் திறனாளிகள் தமிழ்நாடு நல வாரியம் மூலம் சமூகப் பாதுகாப்புத் திட்டம் (இயற்கை மரணம், விபத்து மரணம், கல்வி உதவித் தொகை) 45 பேருக்கு ரூ. 4.05 லட்சம் மதிப்பிலான நிதியுதவி மற்றும் மாற்றுத் திறனாளிகளை திருமணம் செய்து கொண்டு நல்ல நிலையில் உள்ளவர்களுக்கு திருமண உதவித்தொகை வழங்கும் திட்டம் மூலம் 46 பேருக்கு ரூ. 10 லட்சம் மதிப்பிலான திருமண நிதியுதவி மற்றும் தலா 8 கிராம் தங்க நாணயம் என மொத்தம் 157 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ. 48.93 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் தற்போது வழங்கப்பட்டுள்ளது என்றார். அதைத் தொடர்ந்து ஊட்டச்சத்து விழிப்புணர்வுப் போட்டிகளில் சிறப்பிடம் பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சியில் சட்டப்பேரவை உறுப்பினர்கள் பி.பலராமன் (பொன்னேரி), பி.எம்.நரசிம்மன் (திருத்தணி), மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் பாலாஜி, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலர் ராஜராஜேஸ்வரி மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com