திருவள்ளூர்

மாவட்ட உரக் கிடங்குகளில் அதிகாரிகள் திடீர் ஆய்வு

17th Sep 2019 07:07 AM

ADVERTISEMENT

திருவள்ளூர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் உர விற்பனைக் கிடங்குகளில் வேளாண் அதிகாரிகள் திங்கள்கிழமை திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.    
திருவள்ளூர் மாவட்டத்தில் செயல்படும் தனியார் மற்றும் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு சங்கங்களில் உள்ள உரக் கிடங்குகள், சில்லறை விற்பனை நிலையங்கள் மற்றும் மொத்த விற்பனை நிலையங்களில் உரம் இருப்பு மற்றும் விற்பனையைக் கண்காணிக்க சிறப்பு கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. இக் குழுவினரால் மாவட்டம் முழுவதும் சோதனை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது.  
இதன் அடிப்படையில் திருவள்ளூர் உர விற்பனை நிலையங்களில் வேளாண் இணை இயக்குநர் பத்மாவதி தலைமையில், வேளாண் உதவி இயக்குநர் (தரக்கட்டுப்பாடு) ரேவதி, வேளாண் உதவி இயக்குநர் (அம்பத்தூர்) விஜயபிரியா ஆகியோர் திங்கள்கிழமை திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.  
இதுகுறித்து திருவள்ளூர் மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் பத்மாவதி கூறியது:
கடந்த சில நாள்களாக திருவள்ளூர் மாவட்ட, வட்டாரப் பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் விவசாயப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதையொட்டி, மாவட்டத்தில் உள்ள அனைத்து உரக் கிடங்குகள் மற்றும் விற்பனை நிலையங்களில் உர இருப்பு மற்றும் விற்பனை விவரங்களைக் கண்காணிக்கத் தொடங்கியுள்ளனர். 
மேலும், சில்லறை விற்பனை நிலையங்களில் விற்பனை முனையக் கருவி மூலம் விற்பனை செய்யப்படுகிறதா என்பது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. உர விற்பனை நிலையங்களில் உரங்களை அரசு நிர்ணயித்த விலைக்கு அதிகமாக விற்பனை செய்தால் உரக்கட்டுப்பாட்டுச் சட்டத்தின்படி, நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT