திருவள்ளூர்

மது அருந்தி வாகனம் ஓட்டியதாக 10 நாள்களில் ரூ. 5 லட்சம் அபராதம்: மாவட்ட எஸ்.பி அரவிந்தன்

7th Sep 2019 02:12 AM

ADVERTISEMENT

மது அருந்தி வாகனம் ஓட்டியதாக ரூ. 5 லட்சம் வரை அபராதம் விதித்து நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், இ-சலான் மூலம் அபராதம் செலுத்தாவிட்டால் வாகன ஓட்டுநர் உரிமம் புதுப்பிக்க முடியாது என்றும் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பி.அரவிந்தன் தெரிவித்தார். 
திருவள்ளூர் ஜி.என். சாலை காமராஜர் சிலை அருகே சாலைப் பாதுகாப்பு வார விழாவை முன்னிட்டு, காவல் துறை, ரோட்டரி சங்கம், பள்ளி மாணவ, மாணவர்கள், திருநங்கைகள் பங்கேற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. 
மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பி.அரவிந்தன் தலைமை வகித்தார். வட்டாரப் போக்குவரத்து அலுவலர் ஜெயபாஸ்கரன் முன்னிலை வகித்தார். மாணவ, மாணவிகள், திருநங்கைகள் பங்கேற்று, விபத்துகளில் இருந்து பாதுகாத்துக் கொள்வது தொடர்பாக நாடகம் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். 
இதுகுறித்து மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பி.அரவிந்தன் கூறியது: 
திருவள்ளூர் மாவட்டத்தில் அதிகரித்து வரும் வாகன விபத்துகளைக் குறைப்பதற்கு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குறிப்பாக தலைக்கவசம் மற்றும் சீட் பெல்ட் அணிய வலியுறுத்தி பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளின் பேரணி மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
பெரும்பாலும் மது அருந்தி வாகனம் இயக்குவதாலும், சாலை விதிமுறைகளைப் பின்பற்றாததாலும்தான் விபத்துகள் ஏற்படுகின்றன. 
திருவள்ளூர் மாவட்டத்தில் சீட் பெல்ட், தலைக்கவசம் அணியாமல் செல்வோர் மீது நாள்தோறும் 2 ஆயிரம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு வருகின்றன. 
கடந்த 10 நாள்களில் மது அருந்தி வாகனம் ஓட்டியதாக ரூ. 5 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இ-சலான் மூலம் விதிக்கப்பட்ட அபராதத்தைக் கட்டத் தவறினால் வாகன ஓட்டுநர் உரிமம் புதுப்பிக்க முடியாது உள்ளிட்ட விதிமுறைகள் கடுமையாக்கப்பட்டுள்ளன.
எனவே, வாகன ஓட்டுநர்கள் கட்டாயம் சாலை விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என்றார். 
இதைத் தொடர்ந்து வாகன ஓட்டுநர்களுக்கு இலவசமாக தலைக்கவசம் வழங்கி, விழிப்புணர்வுத் துண்டுப் பிரசுரங்களை விநியோகித்தார். 
காவல் துணைக் கண்காணிப்பாளர் கங்காதரன், ரோட்டரி சங்கச் செயலர் குமரன், காவல் ஆய்வாளர்கள் மகேஸ்வரி, கண்ணபிரான், சார்பு ஆய்வாளர் சக்திவேல், வட்டாரப் போக்குவரத்து அலுவலர்கள்,  விடிவெள்ளி திருநங்கைகள் நலவாழ்வு மையச் செயலர் விஜி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT