திருவள்ளூர்

ஜிஎஸ்டியால் தேவைப்படும் கூடுதல் நிதி: சுற்றுச்சுவர் இல்லாததால் திறப்பு விழாவுக்கு காத்திருக்கும் வணிக வரித்துறை அலுவலகம்

7th Sep 2019 11:06 PM | து.ரமேஷ்

ADVERTISEMENT

திருப்பத்தூரில் புதிதாக வணிக வரித்துறை அலுவலகம் கட்டி முடித்து நான்கு மாதங்களாகியும், சுற்றுச்சுவர் இல்லாததால் புதிய அலுவலகம் திறக்கப்படாமல் உள்ளது. 

திருப்பத்தூர் சாமநகர் பகுதியில் வணிகவரித்துறை அலுவலகம் செயல்பட்டு வருகிறது. 

கடந்த 40 ஆண்டுகளாக தனியார் வாடகைக் கட்டடத்தில் இயங்கி வரும் திருப்பத்தூர் வரி விதிப்பு வட்டத்தின் உதவி ஆணையர் வணிகவரி அலுவலகம் மற்றும் மாநில வரி அலுவலர் அலுவலகம் இடம் பற்றாக்குறையாலும்,கோப்புகளை பராமரிக்கப் போதுமான இடப் பற்றாக்குறையாலும், கட்டிடம் பாழடைந்த நிலையில் உள்ளதாலும் புதிய அலுவலகம் கட்டித்தருமாறு கோரிக்கை எழுப்பப்பட்டது.

புதிய கட்டடம்

ADVERTISEMENT

இதைத்தொடர்ந்து, திருப்பத்தூர்}புதுப்பேட்டை பிரதான சாலையில், 2018}ஆம் ஆண்டு மார்ச் மாதம் புதிய கட்டடப் பணி தொடங்கப்பட்டு, 2019}ஆம் ஆண்டு மே மாதம் நிறைவு பெற்றது. 824 சதுர மீட்டர் அளவில் ரூ. 1.24 கோடி செலவில் கட்டி முடிக்கப்பட்டது.

2 அடுக்கு மாடியாக கட்டி முடிக்கப்பட்டுள்ள இந்த கட்டடத்தின் தரைத் தளத்தில் வணிக வரி அலுவலகமும், முதல் தளத்தில் வணிக வரி அலுவலகத்தின் செயலாக்கப் பிரிவும், இரண்டாவது தளத்தில் பதிவறையும் கொண்டதாக கட்டடம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. 

திருப்பத்தூர் வணிகவரி அலுவலகத்தில், உதவி ஆணையரின் கீழ் 13 ஊழியர்களும், செயலாக்கப் பிரிவில் 5 அதிகாரிகளும் பணிபுரிந்து வரும் நிலையில், புதிய கட்டடத்தில் வணிக வரி ஊழியர்களின் வாகனங்களை நிறுத்துவதற்குப் போதுமான இடமும் இல்லை. மேலும், சுற்றுச்சுவரும் இல்லை. 
புதிய கட்டடம் கட்டி முடித்ததும், அங்கு வணிகவரித்துறை அலுவலகம் இடமாற்றம் செய்யப்பட்டு விடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அந்த கட்டடம் தொடர்ந்து பூட்டப்பட்டுள்ளதால், இந்த அலுவலகத்தின் முன்புறம் இருசக்கர வாகனங்கள் மற்றும் ஷேர் ஆட்டோக்களை நிறுத்தி விட்டு செல்கின்றனர். 

மேலும், இரவு நேரத்தில் அந்த இடத்தை மது அருந்தும் கூடமாக பயன்படுத்தி வருகின்றனர் என்றும் சமூகஆர்வலர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். 

இதுகுறித்து, வணிகவரித்துறை அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, திட்ட அறிக்கையில் சுற்றுச்சுவருடன் கூடிய கட்டடம் எழுப்பப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், ஜிஎஸ்டி பிரச்னையால் சுற்றுச்சுவருக்கான போதிய நிதி இல்லாததால் சுற்றுச்சுவர் எழுப்பவில்லை. இருப்பினும், அலுவலகத்தில் பணிபுரிபவர்களின் வாகனங்களின் பாதுகாப்புக் கருதியும், இரவு காவலாளி பணி காலியிடமாக உள்ளதாலும் கோப்புகளை பாதுகாப்புடன் வைக்கவும் கட்டாயம் சுற்றுச்சுவர் தேவைப்படுகிறது. இதுகுறித்து, எங்கள் துறை ரீதியான உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. விரைவில் நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவித்துள்ளனர் என்றார்.

வணிகவரித்துறைக்காக பிரதான சாலையில் கட்டி முடிக்கப்பட்டும், சுற்றுச்சுவர் பிரச்னையால் மூடியே கிடப்பதாக சமூக ஆர்வலர்கள் ஆதங்கம் தெரிவிக்கின்றனர்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT