திருவள்ளூர்

பண்ணைக்குட்டை, மழைநீர் அமைப்பு மூலம் தண்ணீரைச் சேமிக்க வேண்டும்: அமைச்சர் பென்ஜமின்

4th Sep 2019 07:44 AM

ADVERTISEMENT

விவசாயத்துக்கான நீர் ஆதாரம் கிடைக்கச் செய்யும் வகையில் பண்ணைக்குட்டைகள் மற்றும் மழை நீர் அமைப்பு மூலம் மழைநீரைச் சேமிக்க விவசாயிகள் முன் வரவேண்டும் என ஊரக தொழில் துறை அமைச்சர் பா.பென்ஜமின் தெரிவித்தார்.      
திருவள்ளூர் அருகே திருவூர் வேளாண்மை அறிவியல் நிலையம் மற்றும் நெல் ஆராய்ச்சி நிலையம் சார்பில் நீர் மேலாண்மை குறித்த விவசாயிகளுக்கான விழிப்புணர்வு முகாம் திருவள்ளூரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு, மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிகுமார் தலைமை வகித்தார். தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் விரிவாக்கக் கல்வி அலுவலர் ஜவஹர்லால், வேளாண்மை அறிவியல் நிலையத்தின் ஒருங்கிணைப்பாளர் மணிமேகலை ஆகியோர் முன்னிலை வகித்தனர்.   
இதில் ஊரகத் தொழில் துறை அமைச்சர் பா.பென்ஜமின் பேசியது: விவசாயிகள் பயன்பெறும் வகையில் பல்வேறு வகையான நலத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. வேளாண்மைக்கு தண்ணீர் அவசியம்  என்பதால் ஏரிகளில் நீர் ஆதாரத்தை மேம்படுத்தும் நோக்கில், கடந்த மாதம் குடிமராமத்துப் பணிகளை முதல்வர் தொடங்கி வைத்தார். அதேபோல் விவசாயிகளும் நீர் மேலாண்மைக்கு முக்கியத்துவம் அளித்து பண்ணைக் குட்டைகள் மற்றும் மழைநீரை ஒரு சொட்டு கூட வீணாகாமல் நீரைச் சேமிக்க வேண்டும். தஞ்சை மாவட்டத்துக்கு அடுத்தபடியாக திருவள்ளூர் மாவட்டத்தில் தான் ஏரிகளில் நீரைத் தேக்கியும், ஆழ்குழாய் கிணற்று நீரைக் கொண்டும் அதிகளவில்  விவசாயம் நடைபெறுகிறது. அதனால், இந்த மாவட்டத்தில் நீர் மேலாண்மைத் திட்டத்தை பெருக்குவதற்கு விவசாயிகள் அனைவருக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்த முன்வரவேண்டும். அதற்கு குடிமராமத்து திட்டத்தை மக்கள் இயக்கமாக மாற்ற வேண்டும் என்றார். 
தமிழ் வளர்ச்சி, கலை பண்பாடு மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் க.பாண்டியராஜன் பேசியது:
 தற்போதைய நிலையில் விவசாயிகள் குறைந்த நீரைக் கொண்டு துல்லிய பாசனத் திட்டம், திருந்திய நெல் சாகுபடியை மேற்கொள்ள வேண்டும். ஆனால், விவசாயிகள் விளைவிக்கும் சாகுபடிப் பொருள்களுக்கு உரிய விலை கிடைப்பதில்லை. இதைத் தவிர்க்கும் வகையில் சாகுபடிப் பொருள்களை சேமித்து வைத்து, தேவையின் அடிப்படையில் கூடுதல் விலைக்கு விற்பனை செய்ய முடியும். இதற்காக விவசாயிகளை முதலாளிகளாக உருவாக்கும் வகையில் கூட்டுப்பண்ணையம், ஒருங்கிணைந்த பண்ணையம், கிராமப்புற மறுமலர்ச்சி திட்டம் ஆகியவற்றுக்கு ரூ. 660 கோடி ஒதுக்கீடு செய்ய உள்ளதாக முதல்வரால் அறிவிக்கப்பட்டுள்ளது. சிறுவிவசாயிகள், பெருவிவசாயிகள் ஆகியோரை ஒருங்கிணைத்து விவசாய சாகுபடி மேற்கொள்ள வேண்டும். இதற்காக மாநில அளவில் 140 உழவர் குழுக்கள் தொடங்கப்பட்டுள்ளது என்றார். அதைத் தொடர்ந்து, விவசாயிகளுக்கு காப்பீட்டுத் திட்டத்துக்கான அடையாள அட்டைகள், இடுபொருள்கள், வேளாண்மை பொறியியல் இயந்திரங்கள் உள்ளிட்ட பல்வேறு வகையான நலத் திட்டங்களை அவர்கள் வழங்கினர். மேலும் விவசாயிகளுக்கான நீர் மேலாண்மை விழிப்புணர்வு கையேடுகளை வெளியிட்டனர்.   
இதையொட்டி விவசாயத்துக்கு பயன்படுத்தும் வேளாண்மை இயந்திரப் பொருள்கள், மின்மோட்டார், நீர் தெளிப்பான், உழவு சாதனங்கள் உள்ளிட்டவை அடங்கிய கண்காட்சியை விவசாயிகள் ஆர்வத்துடன் பார்வையிட்டனர். 
நிகழ்ச்சியில், மத்திய நிலத்தடி நீர் வாரியம், தென்கிழக்கு மண்டல விஞ்ஞானி சையத்துல் ஹக், சட்டப்பேரவை உறுப்பினர்கள் பலராமன்(பொன்னேரி), விஜயகுமார்(கும்மிடிப்பூண்டி), வேளாண்மை துறை இணை இயக்குநர் பாண்டியன், தோட்டக்கலைத்துறை துணை இயக்குநர் கருப்பசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT