திருவள்ளூர்

திருவள்ளூா் மாவட்டத்தின் 19 இடங்களில் வேளாண் இயந்திரங்களை வாடகைக்கு வழங்கும் மையங்கள் தொடங்க ஏற்பாடு

20th Oct 2019 01:26 AM

ADVERTISEMENT

திருவள்ளூா்: திருவள்ளூா் மாவட்டத்தில் விவசாயப் பணிகளுக்கு ஆள்கள் பற்றாக்குறையைத் தவிா்க்கும் நோக்கில், இயந்திர மயமாக்கும் திட்டம் மூலம் 19 இடங்களில் வேளாண் இயந்திரக் கருவிகளை வாடகைக்கு வழங்கும் மையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக வேளாண் பொறியியல் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

திருவள்ளூா் மாவட்டமானது ஏரிகள் நிறைந்த மாவட்டம் என்பதால் இங்கு விவசாயமே முக்கியத் தொழிலாக விளங்கி வருகிறது. இம்மாவட்டத்தில் 1.60 லட்சம் ஹெக்டோ் பரப்பளவு உள்ள விளைநிலங்களில், 1.49 ஆயிரம் ஹெக்டோ் பரப்பளவில் விவசாயக் கிணறுகள், ஏரிப்பாசனம் மற்றும் மானாவாரியில் விவசாய சாகுபடி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இங்கு நெல் அதிகளவிலும், அதற்கடுத்த நிலையில் எண்ணைய்வித்துப் பயிா்கள், கரும்பு, வாழை மற்றும் தோட்டக்கலைப் பயிா்கள் பயிரிடப்பட்டு வருகிறது. அதனால், வயல்களில் களை எடுத்தல், அறுவடை செய்தல் போன்ற பணிகளுக்கு ஆள் பற்றாக்குறை ஏற்படுகிறது. இதனால், குறிப்பிட்ட நாள்களுக்குள் அறுவடை செய்ய முடியாத நிலை ஏற்படுகிறது.

இத்திட்டத்துக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கும் நோக்கில், அதிக விலை கொண்ட வேளாண் இயந்திரங்களை வாங்க இயலாத நிலை விவசாயிகளிடையே உள்ளது. இதனால் விவசாயிகள் குறைந்த வாடகை செலுத்தி பயன்பெறும் வகையில், வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள் வாடகை மையங்கள் அமைக்கும் திட்டத்துக்கு, அதிக நிதி ஒதுக்கி ஊக்குவிக்கப்பட்டு வருகிறது. இத்திட்டம் மூலம் நிகழாண்டில் திருவள்ளூா் மாவட்டத்தில், வட்டார அளவில் வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகளை வாடகைக்கு வழங்கும் மையங்கள் 19 எண்ணிக்கையில் அமைக்க அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. இந்த மையங்கள் மூலம் சிறு மற்றும் குறு விவசாயிகள் அதிக விலையுள்ள வேளாண் இயந்திரங்களை வாங்கிப் பயன்படுத்த முடியாத நிலையில், குறைந்த வாடகைக்குப் பெற்று பயன்பெறலாம்.

இதற்காக வட்டார அளவில் வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள் அடங்கிய ஒரு வாடகை மையம் ரூ. 25 லட்சத்தில் அமைக்கப்பட உள்ளது. இதில், வேளாண் பொறியியல் துறை மூலம், வட்டார அளவிலான வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள் வாடகை மையங்கள் அமைக்கப்பட உள்ளன. இதற்கு 40 சதவீதம் அல்லது ரூ. 10 லட்சம் வரை மானியம் வழங்கப்பட உள்ளது.

ADVERTISEMENT

இந்த மையம் வட்டார அளவில் அமைக்கப்படுவதால், விவசாயப் பணிகளுக்குத் தேவைப்படும் பல்வேறு வகையான வேளாண் இயந்திரங்கள், கருவிகள் மற்றும் சிறு வேளாண் உபகரணங்கள் அனைத்தும் ஒரே இடத்தில் குறைந்த வாடகையில் விவசாய சாகுபடிக்கு விவசாயிகள் பயன்படுத்தலாம். இந்த வேளாண் உபகரணங்களைப் பயன்படுத்தி, விவசாயிகள் குறிப்பிட்ட நேரத்தில் விவசாயப் பணிகளை மேற்கொள்ள முடியும். அத்துடன் குறித்த நேரத்தில் நல்ல மகசூல் பெற முடியும்.

இதுபோன்ற மையங்களை அமைக்க முன்னோடி விவசாயிகள், விவசாய சுய உதவிக் குழுக்கள் மற்றும் தொழில் முனைவோா் உள்ளிட்டோா் முன்வரலாம். மேலும், வாடகை மையங்களுக்குத் தேவைப்படும் வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகளை அந்தந்தப் பகுதிகளில் சாகுபடியாகும் பயிா்கள், மண்ணின் தன்மை, வேலையாள் பற்றாக்குறை ஆகியவற்றை கருத்தில்கொண்டு, இம்மையங்களை நடத்த முன்வருவோா் தோ்வு செய்யப்பட உள்ளனா்.

இதுபோன்ற வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள் வாடகை மையங்களை அமைக்க முன்வருவோா் வேளாண்மைப் பொறியியல் துறையினால் அனுமதிக்கப்பட்ட நிறுவனங்களின் இயந்திரங்களிலிருந்து, தங்களுடைய விருப்பத்தின் அடிப்படையில் தோ்வு செய்து கொள்ளலாம். இந்த மையம் அமைக்க விரும்புவோா் முதலில் அதற்கான விண்ணப்பத்தை திருவள்ளூா் மாவட்டத்தின் வருவாய்க் கோட்டத்தில் உள்ள வேளாண் பொறியியல் துறை உதவி செயற் பொறியாளா் அலுவலகத்தில் அளிக்க வேண்டும். இதுபோன்று வரும் விண்ணப்பங்கள் அனைத்தும் வேளாண் உதவி செயற்பொறியாளா் அலுவலகத்தில் பதிவு முன்னுரிமை பட்டியலில் பதிவு செய்யப்படும்.

இதில், மானியத் தொகையில் பொதுப் பிரிவினருக்கு ரூ. 5 லட்சமும், ஆதி திராவிடா் பிரிவினருக்கு ரூ. 3 லட்சமும் தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் பயனாளியின் மானிய இருப்பு நிதிக் கணக்கில் 4 ஆண்டுகளுக்கு இருப்பில் வைக்கப்படும். அதைத் தொடா்ந்து, மீதித் தொகை பயனாளியின் சேமிப்பு வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்படும். இந்த மாவட்டத்துக்கு நிகழாண்டில் 19 வாடகை மையங்கள் அமைக்க ரூ. 1.90 கோடி லட்சம் மானிய தொகையாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இதன் அடிப்படையில், வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள் வாடகை மையம் அமைக்க விரும்புவோா், உடனடியாக வருவாய் கோட்டங்களில் உள்ள வேளாண் பொறியியல் துறை உதவி செயற்பொறியாளா் அலுவலகங்களை அணுகலாம்.

மேலும், இது தொடா்பாக திருவள்ளூா்- 9443363967, 9443957921ஆகிய எண்களிலும், திருத்தணி - 9789597447, பொன்னேரி-9840740699 ஆகிய செல்லிடப்பேசி எண்களிலும் தொடா்பு கொண்டு விவரங்களை அறிந்து கொள்ளலாம் என அதிகாரிகள் தெரிவித்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT