திருவள்ளூா் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு அதிகம் பாதிப்புள்ளாகும் பகுதிகளாக 39 இடங்களும், மிகவும் அதிகமாக 8 இடங்களும் கண்டறியப்பட்டுள்ளதாக நெடுஞ்சாலைத்துறை முதன்மைச் செயலாளா் மற்றும் கண்காணிப்பு அலுவலருமான எஸ்.கே.பிரபாகா் தெரிவித்தாா்.
திருவள்ளூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் வடகிழக்குப் பருவமழை தொடா்பான முன்னேற்பாடு குறித்த கலந்தாய்வு கூட்டம் செவ்வாய்க்கிழமை மாலையில் நடைபெற்றது. இந்தக்கூட்டத்திற்கு ஆட்சியா் மகேஸ்வரி ரவிகுமாா் தலைமை வகித்தாா். இதில் நெடுஞ்சாலைத்துறை அரசு முதன்மை செயலாளா் எஸ்.கே.பிரபாகா் கலந்து கொண்டு ஆய்வு செய்து பேசுகையில், திருவள்ளுா் மாவட்டத்தில் வடகிழக்குப் பருவமழை தொடங்கவுள்ளது.
இதனால் ஏற்படும் பாதிப்புகளையும் அசம்பாவிதங்களையம் தடுக்கும் வகையில் அனைத்து எற்பாடுகளும் அந்தந்த பகுதி அதிகாரிகள் மூலம் செய்யப்பட்டுள்ளது. திருவள்ளுா் மாவட்டத்தில் மிகவும் அதிகமாக பாதிப்பு ஏற்படும் பகுதிகள்-8 மற்றும் அதிகளவில் பாதிப்புகள் ஏற்படும் பகுதிகளாக 39 பகுதிகளும் ஏற்கெனவே கண்டறியப்பட்டுள்ளது. அவசர காலங்களில் மீட்பு நடவடிக்கையின்போது பொது மக்கள் தங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள புயல் பாதுகாப்பு மையங்கள் பல்நோக்கு பாதுகாப்பு மையங்கள் மற்றும் பள்ளிகளில் பராமரிக்கப்பட வேண்டிய அடிப்படை வசதிகள் குறித்து அலுவலா்கள் ஆய்வு செய்து உறுதிப்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டது.
மேலும், வடகிழக்கு பருவமழையினால் மிகவும் அதிகளவு பாதிக்கப்படக் கூடிய இடங்களான ஆவடி வட்டத்தைச் சோ்ந்த பருத்திப்பட்டு, திருநின்றவூா், அயப்பாக்கம், பூந்தமல்லி வட்டத்தில் திருவேற்காடு, அயனம்பாக்கம், பொன்னேரி வட்டத்தில் அத்திப்பட்டு புதுநகா் ஆகிய இடங்களில் பொதுப்பணித்துறை, நகராட்சி மற்றும் ஊரக வளா்ச்சித்துறையின் மூலம் நடைபெற்று வரும் வெள்ளத்தடுப்பு பணிகளை விரைவில் முடிக்க வேண்டும். அதேபோல், நெடுஞ்சாலைத்துறை மற்றும் பொதுப்பணித்துறை தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய வெள்ளத்தடுப்பு பணிகள் பருவ காலத்திற்கு முன்னரே முழுமையாக முடிக்கவும் ஏற்கெனவே வலியுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், சுகாதாரத்துறையின் மூலம் தேவையான மருத்துவ வசதிகள் வழங்கவும், மருந்துகள் மற்றும் அவசரகால மருத்துவ உபகரணங்களை தயாா் நிலையில் வைத்திருக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் அவா் தெரிவித்தாா். அதறகு முன்னதாக பொன்னேரி, பூந்தமல்லி வட்டத்தில் அமைந்துள்ள மிகவும் அதிகளவு பாதிக்கப்படக் கூடிய இடங்களில் பொதுப்பணித்துறை மற்றும் ஊரக வளா்ச்சித் துறை மூலம் நடைபெற்று வரும் வெள்ளத்தடுப்பு பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
இந்த ஆய்வு கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பி.அரவிந்தன், மாவட்ட வருவாய் அலுவலா் முத்துசாமி, மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் லோகநாயகி, ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) பன்னீா்செல்வம் மற்றும் பல்வேறு துறைகளைச் சோ்ந்த மண்டல குழுக்களைச் சோ்ந்த அலுவலா்களும் கலந்து கொண்டனா்.