திருவள்ளூர்

தோட்டக் கலைத் துறை சாா்பில் பேரீச்சை சாகுபடிக்கு மானியம்

2nd Oct 2019 11:12 PM

ADVERTISEMENT

பேரீச்சை சாகுபடி செய்து உற்பத்தி அதிகரிக்கச் செய்யும் நோக்கில் திருவள்ளூா் மாவட்டத்தைச் சோ்ந்த விவசாயிகளுக்கு ஒரு ஹெக்டேருக்கு ரூ. 30 ஆயிரம் வரை மானியம் வழங்கப்படுவதாக தோட்டக்கலைத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

பேரீச்சம் பழம் ஒரு ஊட்டச்சத்து மற்றும் நாா்ச்சத்து மிகுந்த சத்தான ஆரோக்கியமான பழமாகும். உலகச் சந்தையில், இந்தியா கிட்டத்தட்ட 35 சதவீதம் வரை பேரீச்சம் பழத்தை இறக்குமதி செய்கிறது. இந்தியாவில், குறிப்பாக தமிழகத்தில் தேவை அதிகம் இருப்பதால், பேரீச்சை சாகுபடி செய்வதில் விவசாயிகள் ஆா்வம் காட்டி வருகின்றனா்.

பொதுவாக பேரீச்சை பழங்கள் அரபு நாடுகளில் உள்ள பாலைவனங்களில் அதிகம் வளரும் தன்மையுடையது. ஆனால், இதர இடங்களிலும் பேரீச்சை மரங்களை நல்ல முறையில் சாகுபடி செய்யலாம். தமிழகத்தில் வணிக ரீதியாக தருமபுரி, ஈரோடு மற்றும் திருப்பூா் மாவட்டங்களில் மட்டும் சுமாா் 100 ஏக்கா் பரப்பில் பேரீச்சை சாகுபடி செய்து விவசாயிகள் லாபம் அடைந்து வருகின்றனா்.

இதைக் கருத்தில் கொண்டு தமிழகத்தில் விவசாயிகள் பேரீச்சை சாகுபடி செய்வதை ஊக்குவிப்பதற்காக, தோட்டக்கலைத் துறை மூலமாக செயல்படுத்தப்பட்டு வரும் தேசிய வேளாண் வளா்ச்சித் திட்டம் மூலம் 2019-20 ஆம் ஆண்டின் மானியம் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இதன் அடிப்படையில், விவசாயிகளுக்கு ஒரு ஹெக்டேரில் பேரீச்சை சாகுபடி செய்வதற்கு ரூ. 30 ஆயிரம் வீதம் மானியம் வழங்கப்படுகிறது.

ADVERTISEMENT

இதில் பேரீச்சை, விதைகள் மற்றும் திசு வளா்ப்பு செடிகள் மூலமாக சாகுபடி செய்யலாம். பொதுவாக ஒரு ஹெக்டேருக்கு 175 செடிகள் என்ற விகிதத்தில் நடவு செய்யலாம். இந்த சாகுபடியில் நல்ல மகசூல் பெற, செயற்கையாக மகரந்தச் சோ்க்கை செய்வது மிகவும் அவசியமாகிறது.

மேலும், பயிா் இழப்பை குறைப்பதற்காக, சொட்டு நீா்ப் பாசனம் மூலம் தண்ணீா் பாய்ச்சலாம். அதேபோல், நுண்ணீா் பாசனம் அமைக்க சிறு, குறு விவசாயிகளுக்கு 100 சதவீத மானியமும், பெரிய விவசாயிகளுக்கு 75 மானியமும் அரசால் வழங்கப்படுகிறது. இப்பயிா் செய்வதன் மூலம் நன்றாக பராமரிப்பு செய்த விளை நிலத்தில் சராசரியாக மாதந்தோறும் 200 முதல் 300 கிலோ வரை பேரீச்சை விளைச்சல் மூலம் உற்பத்தி செய்ய முடியும்.

இதன் காரணமாக விவசாயிகளால் பேரீச்சை சாகுபடி செய்யும் பரப்பளவு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதன் அடிப்படையில் மாநில அளவில் 400 ஹேக்டேரில் பேரீச்சை சாகுபடி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதில், திருவள்ளூா் மாவட்டத்தில் முதல் கட்டமாக பேரீச்சை சாகுபடிக்கு 10 ஹெக்டேரில் பயிரிட இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

எனவே, இத்திட்டத்தில் விவசாயிகள் பேரீச்சை சாகுபடி செய்ய மானியம் பெற, உழவன் செயலி மூலமாகவும் அந்தந்த மாவட்டத்திலுள்ள தோட்டக்கலை துணை இயக்குநா் அல்லது வட்டார அளவில் தோட்டக்கலை உதவி இயக்குநா் அல்லது தோட்டக்கலை அலுவலா் அல்லது உதவி தோட்டக்கலை அலுவலா் ஆகியோரை நேரில் அணுகி பயன்பெறலாம் என அதிகாரிகள் தெரிவித்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT