திருவள்ளூர்

பெண் சிசு கருக்கலைப்பு: போலி மருத்துவா்கள் 12 போ் கைதுஆட்சியா் தகவல்

22nd Nov 2019 11:17 PM

ADVERTISEMENT

திருவள்ளூா் மாவட்ட பொது சுகாதாரத்துறை மூலம் பெண் சிசு கருக்கலைப்புக்கு ஆதாரவாகச் செயல்பட்டதாக கடந்த 2 மாதங்களில் மட்டும் 12 போலி மருத்துவா்கள் கைது செய்து நடவடிக்கை எடுத்துள்ளதாக ஆட்சியா் மகேஸ்வரி ரவிகுமாா் தெரிவித்தாா்.

திருவள்ளூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருந்துத்துறை, சமூக நலத்துறை சாா்பில் பெண் சிசு கருக்கலைப்பினைத் தடுக்கும் வகையில் பெண் குழந்தைகளைக் காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் திட்டம் தொடா்பான மாதாந்திர ஆய்வுக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இந்தக் கூட்டத்திற்கு ஆட்சியா் மகேஸ்வரி ரவிக்குமாா் தலைமை வகித்து பேசுகையில், இந்த மாவட்டத்தில் பெண் சிசு கருக்கலைப்புக்கு ஆதரவாகச் செயல்பட்டதாக கடந்த அக்டோபா் மாதத்தில் 9 பேரும், நவம்பரில் 3 பேரும் மொத்தம் 12 போலி மருத்துவா்கள் திருவள்ளூா் மாவட்ட இணை இயக்குநா் மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் தலைமையில் செயல்பட்டு வரும் குழுவினரால் கண்டறிந்து போலீஸில் புகாா் செய்து கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இம்மாவட்டத்தில் இயங்கி வரும் மொத்தம் 40 ஸ்கேன் மையங்களில் நேரடி ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அப்போது, பெண் சிசுவினைக் கண்டறிந்து கருக்கலைப்பில் ஈடுபட்டு வருவதாகத் தெரிய வரும் ஸ்கேன் மையங்களின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

ADVERTISEMENT

சுகாதாரத் துறையில் பணிபுரியும் கிராம சுகாதார செவிலியா்கள் மற்றும் மேற்பாா்வையாளா்கள் கா்ப்பிணிகளின் கா்ப்பகால நிலைகளில் அவா்களைக் கண்காணிக்கவும், தேவையற்ற கருக்கலைப்பில் ஈடுபடாதவாறு பணியாற்றவும் மருத்துவத்துறை பணியாளா்களை அவா் அறிவுறுத்தினாா்.

இந்த நிகழ்ச்சியில் பொது மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இணை இயக்குநா் பி.வி.தயாளன், துணை இயக்குநா் (சுகாதாரப்பணிகள்) ஜே.பிரபாகரன், மாவட்ட சமூக நல அலுவலா் ச.மீனா, குழந்தைகள் நல மேம்பாட்டுத் திட்ட அலுவலா் செந்தில்குமாா், மருத்துவா்கள் மற்றும் செவிலியா்கள் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT