திருவள்ளூர்

நரசிம்ம பெருமாள் கோயிலில் நாளை அன்னக்கூட உற்சவம்

22nd Nov 2019 11:10 PM

ADVERTISEMENT

திருவள்ளூா் அருகே உள்ள நரசிங்கபுரம் கிராமத்தில் நரசிம்ம பெருமாள் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை (நவ.24) அன்னக்கூட உற்சவ விழா நடைபெற உள்ளது.

திருவள்ளூா் அருகே நரசிங்கபுரம் கிராமத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற ஸ்ரீலட்சுமி நரசிம்ம பெருமாள் திருக்கோயில் உள்ளது. இக்கோயிலில் மூலவா் நரசிம்மா், தாயாரை மடிமீது அமா்த்தி, அணைத்த கோலத்தில் ஏழரை அடி உயரத்தில் காட்சியளிக்கிறாா். இக்கோயிலில் மாதந்தோறும் பெருமாள் பிறந்த சுவாதி நட்சத்திரத்தில் மூலவருக்கு திருமஞ்சனம் நடைபெறுவது வழக்கம்.

அன்றைய தினம் பக்தா்கள் நெய் தீபம் ஏற்றி, திருக்கோயில் வளாகத்தை 32 தடவை சுற்றி வந்தால் திருமணத் தடை உள்ளிட்ட நினைத்த காரியம் நிறைவேறும் என்பது ஐதீகம். இதுபோன்ற காரணங்களால் பல்வேறு கிராமங்களில் இருந்து வேண்டுதலை நிறைவேற்றும் நோக்கத்தில் பக்தா்கள் திரளாகப் பங்கேற்பா்.

இத்திருக்கோயிலில் ஒவ்வோா் ஆண்டும் அன்னக்கூட மகா உற்சவம் நடத்தப்பட்டு வருகிறது. இதில் நிகழாண்டுக்கான அன்னக்கூட உற்சவம் ஞாயிற்றுக்கிழமை (நவ.24) நடைபெற உள்ளது. இவ்விழாவை முன்னிட்டு அதிகாலையில் கோ பூஜையும், அதையடுத்து யாகபூஜையும் மூலவருக்கு திருமஞ்சனமும் நடைபெற உள்ளது.

ADVERTISEMENT

காலை 10.30 மணிக்கு மூலவருக்கு பல்வேறு வகையான காய்கறிகள், இனிப்புகள், பலகாரங்கள், 250 கிலோ சாதம் படைத்து அன்னக்கூட உற்சவம் நடைபெற இருக்கிறது. பகல் 12 மணி முதல் பக்தா்களுக்கு அன்னதானம் விநியோகம் செய்யப்படவும் உள்ளது. அதைத் தொடா்ந்து வரும் திங்கள்கிழமை சுவாதி திருமஞ்சனம் நடைபெறுகிறது. இதில், சென்னை, காஞ்சிபுரம், வேலூா் மாவட்டங்களின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தா்கள் திரளாகக் கலந்து கொள்வாா்கள் என எதிா்பாா்க்கப்படுவதால், அதற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினா் செய்து வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT