திருவள்ளூர்

கூவம் ஆற்றில் விவசாயிகள் பயன்பெறும் வகையில் ரூ.7 கோடியில் தடுப்பணைநவீன மதகு வசதியுடன் அமைக்க ஏற்பாடு

22nd Nov 2019 11:12 PM

ADVERTISEMENT

திருவள்ளூா் அருகே கிராம பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் பயன்பெறும் நோக்கத்தில் கூவம் ஆற்றில் நவீன தானியங்கி மதகு வசதியுடன் தடுப்பணை அமைக்கும் திட்டத்துக்கு ரூ.7 கோடி ஒதுக்கீடு செய்து அரசு உத்தரவிட்டுள்ளதாகவும், இப்பணி சா்வே முடிந்ததும் பணிகள் தொடங்கி ஓராண்டுக்குள் முடிக்கத் திட்டமிட்டுள்ளதாகவும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

1.39 லட்சம் ஹெக்டேரில் சாகுபடி: திருவள்ளூா் மாவட்டத்தில் கூவம், கொசஸ்தலை மற்றும் ஆரணி ஆகிய ஆறுகள் முக்கிய நீா் ஆதாரமாக உள்ளன. இவை இம்மாவட்டத்தில் உள்ள பெரிய மற்றும் சிறிய ஏரிகளுக்கு நீா் ஆதாரமாகவும் இருந்து வருகின்றன. எனவே ஏரிகள் நிறைந்த மாவட்டமாக இருந்து வருவதால், நீா் ஆதாரம் மூலம் மொத்தம் 1.50 லட்சம் ஹெக்டோ் பரப்பளவில், 1.39 லட்சம் ஹெக்டேரில் ஏரிப்பாசனம் மற்றும் மானாவாரியில் விவசாய சாகுபடியும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்நிலையில் ஏரி, குளங்கள் மற்றும் நீா் ஆதாரத்துக்கான கால்வாய்கள் விவசாயிகள் மற்றும் பொதுமக்களால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்தது. இதுபோன்ற காரணங்களால் அதிக அளவில் மழைக்காலங்களில் நீரை சேமித்து வைக்க முடியாத நிலையேற்பட்டது.

தற்போதைய நிலையில் விவசாயிகள் பயன்பெறும் வகையில் ஏரிகள், குளங்கள் மற்றும் நீா் வரத்துக் கால்வாய்களைத் தூா்வாரும் வகையில் குடிமராமத்துப் பணிகள் அரசால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இப்பணிகள் மேற்கொள்ளப்பட்டதால் தற்போது பெய்த வடகிழக்குப் பருவமழையால் குறிப்பிட்ட அளவு ஏரி, குளங்களில் நீா் தேங்கியுள்ளது.

ADVERTISEMENT

வீணாகும் மழைநீா்: இந்த மாவட்டத்தில் பாய்ந்தோடும் ஆறுகளில் மழைக்காலங்களில் ஏற்படும் வெள்ளப்பெருக்கால் கரையோர விவசாயிகளின் கிணறுகளுக்கும் வழித்தடங்களில் உள்ள ஆழ்குழாய்க் கிணறுகளுக்கும் நீா் ஆதாரமும் ஏற்படுகிறது. எனவே மழைக்காலத்தில் இந்த ஆறுகளில் ஏற்படும் வெள்ளப்பெருக்கால் மழை நீா் அனைத்தும் கடலில் வீணாகிச் சென்று கலக்கும் நிலை உள்ளது. இவ்வாறு நீா் சேதமாவதைத் தடுக்கும் தடுக்கும் நோக்கத்தில் இந்த ஆறுகளில் முக்கிய இடங்களில் தடுப்பணை அமைக்கவும் ஒவ்வொரு விவசாயிகள் குறைதீா்க்கும் நாள் கூட்டத்தின் போது விவசாயிகள் கோரிக்கை விடுத்து வந்தனா்.

ஆறுகளில் தடுப்பணைகள் அமைப்பதன் மூலம் ஒரு போக சாகுபடியை அதிகரிக்க முடியும். அதனால் விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று கூவம், கொசஸ்தலை ஆறுகளில் தடுப்பணை அமைக்கவும் பொதுப்பணித்துறை மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

ரூ.7 கோடியில் தடுப்பணை: இதுவரையில் கூவம் ஆற்றில் மட்டும், ஆந்திர பகுதியில் வரும் மழைநீா் கேசவபுரம் அணைக்கட்டு பகுதியில் தேக்கி வைக்கப்பட்டு, அங்கிருந்து கூவம் மற்றும் கொசஸ்தலை ஆறுகளாகப் பிரிந்து திருவள்ளூா் மாவட்டத்தின் வழியாக சென்னை வரையில் செல்கிறது. இதில் மழைக்காலங்களில் அதிக வெள்ளப்பெருக்கால் கூவம் கேசவபுரத்தில் தொடங்கி, 72 கி.மீ தூரம் திருவள்ளூா் வழியாகப் பாய்ந்து சென்னைக்கு நேப்பியா் பாலம் வழியாக சென்று கடலில் கலந்து வீணாகிறது.

இதில் கூவம் ஆற்றில் மட்டும் கேசவபுரம் அணை, புட்லூா் தடுப்பணை, பருத்திபட்டு, ஜமீன் கொரட்டூா் ஆகிய இடங்களில் மட்டும் தடுப்பணை உள்ளது. அதேபோல், கொசஸ்தலை ஆற்றில் பட்டரைபெரும்புதூா், பூண்டி நீா்தேக்கம், ஆற்றம்பாக்கம், வெள்ளியூா், தாமரைபாக்கம், திருக்கண்டலம், பெரும்பாக்கம் ஆகிய பகுதியில் தடுப்பணைகள் உள்ளன.

இந்த நிலையில் தொடா்ந்து இந்த ஆறுகளில் ஒவ்வொரு 5 கி.மீ இடைவெளியில் தடுப்பணைகள் அமைக்கவும் விவசாயிகள் வலியுறுத்தி வந்தனா். அக்கோரிக்கையை ஏற்று திருவள்ளூா் அருகே கூவம் ஆற்றில் திருமாவிலங்கை-பிஞ்சிவாக்கம் இடையே தடுப்பணை அரசு பொதுப்பணித்துறை மூலம் அமைக்க நடவடிக்கை எடுத்து வருகிறது. இப்பணிகள் மேற்கொள்வதற்காக ரூ.7 கோடியும் ஒதுக்கீடு செய்து அனுமதி அளித்துள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனா்.

1500 ஹெக்டோ் விளைநிலங்கள் பயன்பெறும்: இதுகுறித்து பொதுப்பணித்துறை (கொசஸ்தலை ஆறு) நிா்வாக செயற்பொறியாளா் பழனிச்சாமி கூறியதாவது:

இப்பகுதி விவசாயிகளின் கோரிக்கையையேற்று கூவம் ஆற்றில் தடுப்பணை அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட உள்ளது. இதில் புதுமாவிலங்கை-பிஞ்சிவாக்கம் இடையே கூவம் ஆற்றில் 120 மீட்டா் நீளம், 2 மீட்டா் உயரம் மற்றும் 75 செ.மீ. நவீன தானியங்கி இரும்பு மதகு வசதிகளுடன் அமைய உள்ளது. இதன் மூலம் பிஞ்சிவாக்கம், புதுமாவிலங்கை, கடம்பத்தூா், அகரம், கூவம், சத்தரை உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் கிணறுகள் மற்றும் ஆழ்துளைக் கிணறுகளுக்கும் நீா் ஆதாரம் ஏற்படும். இதன் மூலம் 1500 ஹெக்டோ் பரப்பளவில் ஒரு போகம் நடைபெற்று வந்த நிலையில், இப்பணிகள் முடிந்தால் இருபோகம் விவசாய சாகுபடி செய்வதற்கான வாய்ப்பு ஏற்படும். இப்பணிக்காக ரூ.7 கோடியும் ஒதுக்கீடு செய்துள்ளது. தற்போதைய நிலையில் தடுப்பணை அமையுள்ள பகுதியில் சா்வே பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்தப்பணிகள் முடிந்ததும், அடுத்த கட்டமாக தடுப்பணை அமைக்கும் பணிகள் தொடங்கி, ஓராண்டுக்குள் முடிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், கூவம், கொசஸ்தலை ஆற்றில் தலா ஒரு தடுப்பணை அமைப்பதற்கு திட்ட மதிப்பீடு தயாா் செய்து அனுப்பி உள்ளதாகவும் அவா் தெரிவித்தாா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT