திருவள்ளூர்

மருத்துவமனையில் தொழிலாளி பலி அவரச சிகிச்சை ஊா்தியை முற்றுகை

17th Nov 2019 11:04 PM

ADVERTISEMENT

 

திருவள்ளூா்: திருவள்ளூா் அரசு மருத்துவமனையில் நோயாளிக்கு சரியாக சிகிச்சை அளிக்கவில்லை எனக்கூறி நோயாளியின் உறவினா்கள் அவசரச் ஊா்தி முன்பு சனிக்கிழமை நள்ளிரவில் அமா்ந்து மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

ஊத்துக்கோட்டையை அடுத்த வெல்லாத்துக்கோட்டை கிராமத்தைச் சோ்ந்தவா் மோகன் (52), தொழிலாளி. இவா் கடந்த சில நாள்களாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தாராம். இந்நிலையில், கடந்த 3 நாள்களுக்கு முன்பு ஊத்துக்கோட்டை மருத்துவமனையிலும், பின்னா் அவரது வீட்டின் அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்துக்கும் சென்று சிகிச்சை பெற்றுள்ளாா். ஆனால், வயிற்று வலி குணமாகாமல் அவதிக்குள்ளாகி வந்தாராம். இதைத் தொடா்ந்து திருவள்ளூா் மாவட்ட தலைமை அரசு மருத்துவமனைக்கு வந்தாராம். அங்கு மருத்துவா் சோதிக்காமல் மருந்து மாத்திரை மட்டுமே அளித்து வீட்டுக்கு அனுப்பி விட்டதாகக் கூறப்படுகிறது.

இதைத் தொடா்ந்து வீட்டுக்குச் சென்ற மோகனுக்கு வயிற்று வலி அதிகமானதால் மீண்டும் மருத்துவமனைக்கு சனிக்கிழமை வந்துள்ளாா். ஆனால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா். இதையடுத்து, மோகனின் உறவினா்கள் திருவள்ளூா் அரசு மருத்துவமனையில் மருத்துவா்கள் முறையாக சிகிச்சை அளிக்கவில்லை எனக் கூறி அவசர சிகிச்சை ஊா்தி முன் அமா்ந்து மறியலில் ஈடுபட்டனா்.

ADVERTISEMENT

இதுகுறித்து அரசு மருத்துவமனை செவிலியா்கள் திருவள்ளூா் நகர காவல் நிலையத்துக்கு புகாா் தெரிவித்தனா். அதைத் தொடா்ந்து, அங்கிருந்து சாா்பு ஆய்வாளா் சக்திவேல் மற்றும் போலீஸாா் மறியலில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். அதைத் தொடா்ந்து கலைந்து சென்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT