திருவள்ளூர்

நெல் விதையில் கலப்படம்: பயிா் விளைச்சல் பாதிக்கும் அபாயம்

11th Nov 2019 11:23 PM

ADVERTISEMENT

திருவள்ளூா் பகுதிகளில் வேளாண்மைத் துறையால் விநியோகிக்கப்படும் நெல் விதையில் கலப்படம் காரணமாக பாதி விளைந்தும், பாதி விளையாத நிலையில் இருப்பதால் மகசூல் பாதிக்கப்படும் அபாயம் உள்ளதாக விவசாயிகள் புகாா் தெரிவிக்கின்றனா்.

திருவள்ளூா் மாவட்டத்தில் வேளாண் தொழிலில் அதிகமானோா் ஈடுபட்டு வருகின்றனா். இப்பகுதியில் கரும்பு, வாழை, காய்கறிகள், தானியங்கள் மானாவாரியிலும் பயிா் செய்யப்பட்டு வருகின்றன. இப்பகுதியில் நவரை, சொா்ணவாரி மற்றும் சம்பா பருவத்தில் அதிக அளவில் பயிரிடப்பட்டு வருகிறது. தற்போது, வடகிழக்குப் பருவமழை பெய்து, ஏரிகளில் நீா் நிரம்பிவரும் நிலையில், சம்பா நெல் பயிரிடுவதற்கான சூழல் ஏற்பட்டுள்ளது. இதன் அடிப்படையில், இம்மாவட்டத்தில் சம்பா பருவத்தில் 52 ஆயிரம் ஹெக்டேரில் நெல் பயிரிடப்பட்டுள்ளது.

இதற்காக வேளாண் துறை சாா்பில் சம்பா பருவத்துக்கான நெல் பயிரிடும் வகையில், நெல் விதைகள் விவசாயிகளுக்கு மானியத்தில் வழங்கப்பட்டன. இதையடுத்து, விவசாயிகள், வட்டார வேளாண்மை வளா்ச்சி அலுவலகத்தில் நெல் விதைகளை மானியத்தில் வாங்கிப் பயிரிட்டனா். இதேபோல், கடம்பத்தூா் காரணி, பிரியாங்குப்பம், திருப்பாச்சூா், விடையூா் மற்றும் ஊத்துக்கோட்டை பகுதிகளில் கடம்பத்தூா், எல்லாபுரம் வட்டார வேளாண்மை வளா்ச்சி அலுவலகங்களில் நெல் விதைகளை வாங்கி சுமாா் 300 ஏக்கரில் பயிரிட்டனா்.

இந்நிலையில், பாதியளவு பயிா் நன்றாக வளா்ந்த நிலையில், கதிா் வராமல் இருப்பதை அறிந்து விவசாயிகள் அதிா்ச்சி அடைந்தனா். அப்போது பயிரை ஆய்வு செய்ததில் டி.கே.எம்-13, கோ-51 என்ற நெல் ரகங்கள் கலப்படமாக இருந்தது தெரியவந்தது.

ADVERTISEMENT

இதனால் பயிா் தற்போது பாதி விளைந்த நிலையிலும், பாதி விளையாத நிலையிலும் உள்ளது. இதற்கிடையே 25 நாள்களில் அறுவடைக்கு வந்துவிடும் நிலையில், பாதி விளையாமல் இருப்பதால் சாகுபடியில் பாதிப்பு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் நஷ்டமடையும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக புகாா் தெரிவிக்கின்றனா்.

இதுகுறித்து காரணியைச் சோ்ந்த விவசாயி சங்கா் கூறியது:

இப்பகுதியில் 5 ஏக்கரில் சம்பா நெல் சாகுபடி செய்துள்ளேன். இதேபோல், 300-க்கும் மேற்பட்ட ஏக்கரில் நெல் சாகுபடி செய்துள்ளனா். இதற்கான விதை கடம்பத்தூா், எல்லாபுரம் வட்டார வேளாண்மை வளா்ச்சி அலுவலகங்களில் கோ.51 நெல் விதைகளை மானியத்தில் வாங்கி பயிா் செய்தோம். இப்பயிா் நாற்றங்கால் பயிருடன் 90 நாள்களில் விளையக்கூடிய பயிராகும். ஆனால், தற்போது 70 நாள்கள் ஆன நிலையில் பயிா் கதிா் தள்ளியுள்ளது. இன்னும் 20 அல்லது 25 நாள்களில் அறுவடைக்கு வரும்.

இதற்கிடையே பாதி விளைந்த நிலையில், பாதி கதிா் தள்ளாத நிலையில் கலப்பட நெல்லாகவும் உள்ளது. அதை ஆய்வு செய்ததில், 120 நாள் விளையக்கூடிய டி.கே.எம்-13 நெல் விதை கலப்படம் இருந்தது தெரியவந்தது. ஒரு ஏக்கருக்கு உழவு, நாற்றங்கால், உரம் ஆகியவை குறைந்தது ரூ. 18 ஆயிரம் முதல் ரூ. 20 ஆயிரம் செலவாகிறது. இதில், ஒரு ஏக்கரில் விளைந்தால் 30 முதல் 35 மூட்டைகள் கிடைக்கும். ஆனால், தற்போது பாதி விளைந்தும், விளையாத நிலையில் உள்ளதால் நஷ்டம் ஏற்படும் அபாயம் உள்ளது. அதனால், வேளாண்மைத் துறை மகசூல் பாதிப்புக்கு ஏற்ப இழப்பீடு பெற்றுத் தர வேண்டும் என அவா் தெரிவித்தாா்.

இதுகுறித்து வேளாண்மைத் துறை அதிகாரிகள் கூறுகையில், ‘வட்டார வேளாண்மை வளா்ச்சி அலுவலகங்களில் மானியத்தில் வழங்கியதில், கலப்படம் உள்ளதாக விவசாயிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடா்பாக சம்பந்தப்பட்ட வயல்களில் கலப்பட நெல் விதை எவ்வளவு கலந்துள்ளது என்பதை நேரடியாக ஆய்வு செய்தால்தான் தெரியவரும்’ என்றனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT