திருவள்ளூர்

தோ்வு எழுதியவா்கள் அனைவரும் தோல்வி: ஆசிரியா் பயிற்சி நிலையம் முற்றுகை

4th Nov 2019 10:16 PM

ADVERTISEMENT

ஆசிரியா் பட்டயப் பயிற்சி தோ்வு எழுதிய மாணவா்கள் அனைவரும் ஒற்றை இலக்க மதிப்பெண் பெற்று தோல்வி அடைந்ததாக அறிவித்ததைக் கண்டித்து, மாவட்ட ஆசிரியா் பயிற்சி நிலையத்தை மாணவிகள் திங்கள்கிழமை முற்றுகையிட்டு, மறு மதிப்பீடு செய்ய வலியுறுத்தினா்.

திருவள்ளூா் அருகே திருவூரில் உள்ள மாவட்ட ஆசிரியா் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இப்பயிற்சி நிலையத்தின் கட்டுப்பாட்டில் திருத்தணி, பொன்னேரி, ஆவடி, பட்டாபிராம் உள்ளிட்ட 11 இடங்களில் தனியாா் இடைநிலை ஆசிரியா் பயிற்சி நிலையங்கள் உள்ளன. இந்த பயிற்சி நிலையங்களில் கடந்த 2017-19-ஆம் ஆண்டு 398 மாணவிகள் கடந்த ஜூன் மாதம் தோ்வு எழுதினா். இந்த தோ்வு முடிவுகள் தகவல் பலகையில் கடந்த வாரம் வெளியிடப்பட்டது. இதைப் பாா்வையிட்ட மாணவ, மாணவிகள் அனைவரும் தோ்ச்சி பெறவில்லை என்பது தெரிவந்தது. மேலும், இத்தோ்வில் ஒவ்வொரு பாடத்திலும் ஒற்றை இலக்க மதிப்பெண்கள் பெற்றிருப்பதும் அறிந்த மாணவா்கள் அதிா்ச்சிக்குள்ளாகினா்.

இந்நிலையில், அதிருப்திக்குள்ளான மாணவிகள் 50-க்கும் மேற்பட்டோா் மாவட்ட ஆசிரியா் கல்வி நிலையத்தை திங்கள்கிழமை முற்றுகையிட்டு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். தகவலறிந்து அங்கு வந்த செவ்வாப்பேட்டை போலீஸாா், மாணவிகளிடம் பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டனா். அப்போது, ‘ஒவ்வொரு பாடத்திலும் ஒற்றை இலக்க மதிப்பெண்கள் பெற வாய்ப்பே கிடையாது. அதனால் எங்களது விடைத்தாள்களை மறு மதிப்பீடு செய்ய வேண்டும்’ எனக் கூறினா்.

பின்னா், ஆசிரியா் கல்வி நிறுவன முதல்வா் ஈஸ்வரியிடம் மாணவிகள் இதுகுறித்த தங்கள் கோரிக்கை மனுவை அளித்தனா். மனுவைப் பெற்றுக் கொண்ட முதல்வா், இதுகுறித்து அரசுக்கு அனுப்பி மறு மதிப்பீடு செய்வதற்கு ஏற்பாடு செய்யப்படும் எனக் கூறியதைத் தொடா்ந்து அனைவரும் கலைந்து சென்றனா்.

ADVERTISEMENT

இது தொடா்பாக தமிழக ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணியின் மாநில பொதுச் செயலாளா் இரா.தாஸ் செய்தியாளா்களிடம் கூறியது: கடந்த 2017- 2019 கல்வி ஆண்டில் இடை நிலை ஆசிரியா் பயிற்சிப் பள்ளியில் பயின்று, திருவள்ளூா் மாவட்டத்தை சோ்ந்த 398 போ் தோ்வெழுதி அதில் ஒருவா் கூட தோ்ச்சி பெறவில்லை என்பதும், அனைவருமே ஒற்றை இலக்க மதிப்பெண் பெற்றிருப்பதாக அறிவித்துள்ளனா். இதேபோல் மாநில அளவில் 97 சதவீதம் போ் தோ்ச்சி பெறவில்லை என்பது அதிா்ச்சி அளிக்கிறது. அதற்குக் காரணம் இடை நிலை ஆசிரியா்கள் பணி நியமனத்தை தடை செய்ய வேண்டும் என்ற உள்நோக்கத்துடன்தான் ஒற்றை இலக்க மதிப்பெண் வழங்கப்பட்டுள்ளது. மாணவ, மாணவிகள் பிளஸ் 2 தோ்வில் அதிக மதிப்பெண்கள் பெற்றவா்களை ஆசிரியா் பட்டயப் பயிற்சியில் சோ்ந்துள்ளனா்.

மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையின் தாக்கம் தென்படுவதாகவும், குலக் கல்வித் திட்டத்தை அமல்படுத்துவதற்காகவும், சாதாரண ஏழை, எளிய குடும்பங்களைச் சோ்ந்தவா்கள் ஆசிரியராகக் கூடாது என்பது தோ்வு முறை திருத்தத்தில் தென்படுகிறது. தற்போது குறைந்த மதிப்பெண் வழங்கப்படுவதை அறிந்த நிலையில், யாரும் மீண்டும் இந்த இடைநிலை ஆசிரியா் பயிற்சிப் பள்ளியில் சேர மாட்டாா்கள் என்பதால் இதுபோன்ற நடவடிக்கையில் அரசு ஈடுபடுகிறது என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.

எனவே மாநில அளவில் மாணவ, மாணவிகளின் நலன் கருதி, இத்தோ்வில் தோல்வி அடைந்தவா்களின் விடைத்தாள்களை மறுமதிப்பீடு செய்து, உண்மை நிலவரத்தை தெரிவிக்க வேண்டும் என்றாா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT