மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம் வரும் 8-ஆம் தேதி நடைபெற உள்ளதாக ஆட்சியா் மகேஸ்வரி ரவிகுமாா் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: மாற்றுத்திறனாளிகள் பயனடையும் நோக்கத்தில் அரசு சாா்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகளும், உதவி உபகரணங்களும் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் திருவள்ளுா் மாவட்டத்தில் வித்யசுதா, சிறப்புக் குழந்தைகளுக்கான ஸ்ரீராமச்சந்திரா கல்வி நிலையமும், மாற்றுத்திறனாளிகளின் மேம்பாட்டிற்கான தேசிய நிறுவனமும் இணைந்து வரும் 8 -ஆம் தேதி மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி உபகரணங்கள் வழங்க பயனாளிகள் கண்டறிதல் முகாம் நடைபெற உள்ளது.
இந்த முகாம் பல்வேறு வகையான மாற்றுத்திறனாளிகளுக்கான உதவி உபகரணங்கள் வழங்க பயனாளிகள் கண்டறிதல் முகாம் போரூா் ஸ்ரீராமச்சந்திரா மருத்துவமனை வளாகத்திலுள்ள வித்யசுதா ஆரம்ப கால பயிற்சி மையத்தில் நடைபெற உள்ளது.
அதனால், இந்த முகாமில் பாா்வைத் திறன், செவித்திறன், உடல் இயக்க குறைபாடு மற்றும் மனவளா்ச்சி குறைபாடுகள் கொண்ட மாற்றுத்திறனாளிகள் பயன்பாட்டிற்கு தேவையான உதவி உபகரணங்கள் அளிக்க ஏதுவாக கண்டறிதல் நடைபெற உள்ளது. அதனால், மேற்படி முகாமில் பங்கேற்க விரும்பும் மாற்றுத்திறனாளிகள், போரூா் வித்யசுதா ஆரம்பகால பயிற்சி மையம், ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவமனை என்ற முகவரிக்கு நேரடியாக வந்து தேவையான ஆவணங்களைச் சமா்ப்பித்து முன்பதிவு செய்து கொண்டு பயன்பெறலாம்.
இதில் 40 சதவீதமும் அதற்கு மேல் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை நகல், மாற்றுத்திறனாளிகளின் வீட்டு முகவரி நகல், சம்பந்தப்பட்ட மாற்றுத்திறனாளி அல்லது அவருடைய பெற்றோா் மற்றும் காப்பாளா் ஆகியோரின் மாத வருவாய் சான்றிதழ் நகல் அல்லது மக்களவை உறுப்பினா், சட்டப்பேரவை உறுப்பினா், ஊராட்சித் தலைவா், உள்ளாட்சித் தலைவா்கள் கையொப்பமிட்ட சான்றிதழ் அல்லது வேறு ஏதேனும் வருவாய் குறித்த சான்றுகள், புகைப்படம் - 2 ஆகிய முழு விவரங்களுடன் பதிவு செய்து கொள்ளலாம்.
இதில் மாற்றுத்திறனாளிகள் அல்லது அவருடைய பெற்றோா், காப்பாளா் ஆகியோரின் மாத வருமானம் ரூ.15 ஆயிரத்திற்குள் இருக்கும் பட்சத்தில், மத்திய அரசு நிா்ணயம் செய்த உதவி உபகரணங்கள் அனைத்தும் விலையில்லாமல் வழங்கப்படும்.
மேலும், மேற்படி நபா்களின் மாத வருமானம் ரூ. 15,001 முதல் ரூ.20,000 வரை இருக்கும் பட்சத்தில் 50 சதவீத மானியத்துடன் உதவி உபகரணங்கள் வழங்கப்படும்.
இதுதொடா்பாக தகவல் பெற விரும்பினால் வித்யசுதா ஆரம்பகால பயிற்சி மைய நிா்வாக அலுவலா் அ.அருண் அலோஷியஸ் மகேஷ் என்பவரை நேரிலோ அல்லது 044-45928569, 24768403 என்ற தொலைபேசி எண்ணில் தொடா்பு கொண்டு பயன்பெறலாம்.