வாக்கு எண்ணும் பணிக்கான முன்னேற்பாடுகள் தயார்: ஆட்சியர்

திருவள்ளூர் மக்களவைத் தொகுதிக்கான வாக்கு எண்ணும் மையத்தில் தேவையான அனைத்து

திருவள்ளூர் மக்களவைத் தொகுதிக்கான வாக்கு எண்ணும் மையத்தில் தேவையான அனைத்து முன்னேற்பாடுகளும் தயாராக உள்ளதாக தேர்தல் ஆணைய காணொலிக் காட்சி மூலம் நடைபெற்ற கலந்தாய்வுக் கூட்டத்தில் ஆட்சியர் மகேஸ்வரி ரவிகுமார் தெரிவித்தார். 
திருவள்ளூர் மக்களவைத் தொகுதிக்கான தேர்தல் மற்றும் பூந்தமல்லி சட்டப்பேரவை இடைத் தேர்தலில்  பயன்படுத்தப்பட்ட வாக்குப் பதிவு இயந்திரங்கள் பெருமாள்பட்டு ஸ்ரீராம் வித்யாமந்திர் மெட்ரிக் பள்ளியிலும், அதே  வளாகத்தில் உள்ள ஸ்ரீராம் தொழில்நுட்பக் கல்லூரியிலும் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.  
இந்நிலையில், திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், தேர்தல் ஆணையத்தில் இருந்து காணொலி மூலம் வாக்கு எண்ணும் பணியை மேற்கொள்வதற்கான முன்னேற்பாடுகள் குறித்து தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு மற்றும் அதிகாரிகளுடனான கலந்தாய்வுக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. 
இதில், வாக்கு எண்ணும் பணிகளுக்கான முன்னேற்பாடுகள், அலுவலர்களுக்கு அளிக்கப்பட்டுள்ள பயிற்சிகள் உள்ளிட்டவை குறித்து மாவட்டத் தேர்தல் அலுவலரிடம் அதிகாரி கேட்டறிந்தார். 
அப்போது ஆட்சியர் மகேஸ்வரி ரவிகுமார் கூறியது:
வாக்கு எண்ணும் மையங்களில் தேவையான அனைத்து ஏற்பாடுகளும் தயாராக உள்ளன. வாக்கு எண்ணும் அறைகளில் 16 மேஜைகள் அமைக்கப்பட்டுள்ளன. வாக்கு எண்ணும் அறைகளில் கூடுதலாக அலுவலர்கள் இருக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு சுற்றின் முடிவிலும் வாக்கு எண்ணிக்கை குறித்து தேர்தல் ஆணையத்துக்குத் தெரிவிக்க ஏதுவாக இணையதள வசதியுடன் கணிப்பொறியும் வைக்கப்பட்டுள்ளது. வாக்கு எண்ணும் மையத்துக்கு குறிப்பிட்ட நபர்கள் வந்து செல்லும் வகையில் அடையாள அட்டைகளும் வழங்கப்பட்டுள்ளன. அதேபோல், வாக்கு எண்ணும் மையத்தில் அதிக நபர்கள் வருவதைக் கட்டுப்படுத்தும் நோக்கில் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன.  
வாக்கு எண்ணிக்கை அறையில் அனைத்து நடவடிக்கைகளையும் கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதேபோல், ஒவ்வொரு சட்டப்பேரவைத் தொகுதியிலும் ரேண்டம் வரிசைப்படி குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்படும் விவிபேட் இயந்திரங்களில் வாக்கு எண்ணுவது தொடர்பாக வாக்கு எண்ணும் அலுவலர்களுக்கு முன்கூட்டியே பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது என்றார்.
கலந்தாய்வுக் கூட்டத்தில் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் இரா.பொன்னி, மாவட்ட வருவாய் அலுவலர்(பொறுப்பு) ராஜகோபால், பூந்தமல்லி சட்டப் பேரவைத் தொகுதியின் தேர்தல் நடத்தும் அலுவலரும், திருவள்ளூர் சார்-ஆட்சியருமான ரத்னா, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் லோகநாயகி, நேர்முக உதவியாளர் (பொது) பன்னீர்செல்வம், வாக்கு எண்ணும் அலுவலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
 


"அடையாள அட்டைகள் இருந்தால் மட்டுமே அனுமதி'
திருவள்ளூர் மக்களவைத் தொகுதி வாக்கு எண்ணும் மையத்துக்குள், அங்கீகரித்த அதிகாரியால் வழங்கப்பட்ட அடையாள அட்டைகள் இருந்தால் மட்டுமே வேட்பாளர், முகவர் உள்ளிட்டோர் அனுமதிக்கப்படுவார்கள் என மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் இரா.பொன்னி தெரிவித்துள்ளார்.    
இதுகுறித்து அவர் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: திருவள்ளூர் மக்களவைத் தொகுதிக்கான வாக்குப் பதிவு கடந்த மாதம் 18-ஆம் தேதி நடைபெற்றது. இத்தொகுதியில் ஒவ்வொரு வாக்குச்சாவடிகளில் பயன்படுத்தப்பட்ட வாக்குப் பதிவு இயந்திரங்கள் அனைத்தும் பெருமாள்பட்டு ராம் வித்யாலயா பள்ளி வளாகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், திருவள்ளூர் மக்களவைத் தொகுதி மற்றும் பூந்தமல்லி சட்டப்பேரவை இடைத்தேர்தல் தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை வியாழக்கிழமை (மே 23) நடைபெற உள்ளது. 
இதையொட்டி, வாக்கு எண்ணிக்கை நாளில் இந்த மையத்துக்கு வரும் வேட்பாளர்கள், முகவர்கள் மற்றும் நபர்கள் அங்கீகாரம் பெற்ற அதிகாரியால் வழங்கப்பட்ட அடையாள அட்டைகளை கட்டாயம் வைத்திருக்க வேண்டும். அந்த அட்டைகளை தவறாமல் எடுத்து வந்தால் மட்டுமே வாக்கு எண்ணும் மையத்துக்குள் அனுமதிக்கப்படுவார்கள். அதேபோல், அப்போது கொண்டு வரப்படும் வாகனங்களை இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுரைப்படி, வாக்கு எண்ணும் மையத்திலிருந்து 100 மீட்டர் தொலைவில் ஸ்ரீராம் கல்லூரி கேட்டுக்கு வெளியே வாகனங்களை நிறுத்துவதற்கு ஒதுக்கியுள்ள இடத்தில் மட்டுமே நிறுத்த வேண்டும்.
 அதேபோல், எவ்விதமான   எலக்ட்ரானிக் சாதனங்கள், கால்குலேட்டர், செல்லிடப்பேசி, படப்பதிவு கருவி மற்றும் கேமரா உள்ளிட்ட சாதனங்களை எக்காரணம் கொண்டும் வாக்கு எண்ணும் மையத்துக்கு எடுத்துச் செல்ல அனுமதி கிடையாது. வாக்கு எண்ணும் மையத்துக்குள் வரும் நபர்கள் பந்துமுனைப் பேனா மற்றும் குறிப்பு எடுக்கும் தாள் மட்டும் எடுத்து வர அனுமதிக்கப்படும். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com