மறுவாக்குப் பதிவுக்கு காரணமான அதிகாரிகள் மீது நடவடிக்கை: ஆட்சியர் மகேஸ்வரி ரவிகுமார்

திருவள்ளூர் மக்களவைத் தொகுதியில் உள்ள பூந்தமல்லி சட்டப்பேரவை தொகுதிக்குள்பட்ட வாக்குச் சாவடியில்

திருவள்ளூர் மக்களவைத் தொகுதியில் உள்ள பூந்தமல்லி சட்டப்பேரவை தொகுதிக்குள்பட்ட வாக்குச் சாவடியில் நடைபெற்ற முறைகேடுகளால் மறுவாக்குப் பதிவு நடைபெறுவதாகவும், அதற்குக் காரணமான அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ஆட்சியர் மகேஸ்வரி ரவிகுமார் தெரிவித்தார்.
திருவள்ளூர் மக்களவைத் தொகுதிக்கான பொதுத் தேர்தலும், பூந்தமல்லி சட்டப் பேரவைத் தொகுதிக்கான இடைத் தேர்தலும் கடந்த மாதம் 18-ஆம் தேதி நடத்தப்பட்டது. அப்போது, இந்த மக்களவைத் தொகுதிக்குள்பட்ட பூந்தமல்லி சட்டப் பேரவைத் தொகுதியில் உள்ள  மேட்டுப்பாளையம் தொடக்கப் பள்ளி வாக்குச் சாவடி எண் 195-இல் மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 1,049 பேர் ஆகும். இதில், அன்றைய நாளில் 858 வாக்குகள் பதிவானது. 
வாக்குப்பதிவின்போது, ஒரு குறிப்பிட்ட கட்சியைச் சேர்ந்த நபர் முறைகேடு செய்து மக்களவைத் தொகுதிக்கு 27 வாக்குகளும், இடைத்தேர்தல் தொகுதிக்கு 37 வாக்குகளும் பதிவு செய்ததால் குளறுபடி ஏற்பட்டதாம். இது தொடர்பாக அரசியல் கட்சியினரிடையே புகார் எழுந்தது. அதைத் தொடர்ந்து, அக்குறிப்பிட்ட வாக்குச் சாவடியில் மட்டும் மறு வாக்குப் பதிவு நடத்த அரசியல் கட்சியினர் தேர்தல் ஆணையத்தை வலியுறுத்தினர். இதன் அடிப்படையில் அந்த வாக்குச் சாவடியில் மறு வாக்குப் பதிவு நடத்த தேர்தல் ஆணையம் உத்தரவிட்டிருந்தது.
இதன் அடிப்படையில் அந்த வாக்குச்சாவடியில் ஞாயிற்றுக்கிழமை மறுவாக்குப் பதிவு நடைபெற்றது. வழக்கம்போல் காலை 7 மணிக்கு முன்னதாக அரசியல் கட்சியினர் முன்னிலையில் வாக்குப் பதிவு இயந்திரம் செயல்பாட்டுக்குக் கொண்டு வரப்பட்டது.  
அதையடுத்து, பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து  ஆர்வத்துடன் தங்கள் வாக்குகளை பதிவு செய்தனர். அப்போது, மறுவாக்குப் பதிவு நடைபெறும் வாக்குச்சாவடி மையத்தை ஆட்சியர் மகேஸ்வரி ரவிகுமார், தேர்தல் பார்வையாளர் சுரேந்திரகுமார் ஆகியோர் பார்வையிட்டு, அங்குள்ள அதிகாரிகளிடம் வாக்குப் பதிவு விவரங்களைக் கேட்டறிந்தனர். 
பின்னர், செய்தியாளர்களிடம் ஆட்சியர் கூறியது:  சில முறைகேடு மற்றும் தவறு காரணமாக தேர்தல் ஆணையம் மறுவாக்கு பதிவுக்கு உத்தரவிட்டிருந்தது. இதற்குக் காரணமான அதிகாரிகள் மீது கட்டாயம் நடவடிக்கை எடுக்கப்படும். தற்போதைய நிலையில், எவ்வித முறைகேடுகளுக்கும் இடம் அளிக்காமல் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. 
இதுபோன்ற காரணங்களால் அமைதியான முறையில் தேர்தல் நடைபெற்று வருகிறது. தற்போது, மறுவாக்குப் பதிவு நடைபெறும் வாக்குச் சாவடியில் நடுவிரலில் மை வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், இந்த வாக்குச்சாவடியின் அனைத்து நடவடிக்கைகளையும் கண்காணிக்கும் வகையில், வாக்குச் சாவடி மையத்துக்குள் 2 கண்காணிப்பு கேமராக்களும், வெளிப்பகுதியில் 4 கேமராக்களும் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. 
மேலும், வாக்காளர்களுக்கு பணம், பொருளோ, மது வகைகளோ கொடுப்பதைத் தடுக்கும் வகையில் 9 பறக்கும் படை அலுவலர்கள் குழுக்கள் மற்றும் 9 நிலையான குழுக்கள் அமைத்து தீவிர ஆய்வுப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது என்றார்.

82.07 சதவீதம் வாக்குப் பதிவு
மறுவாக்குப் பதிவு நடைபெற்ற மேட்டுப்பாளையம் 195 வாக்குச்சாவடியில் மட்டும் மொத்தம் 1,049 வாக்காளர்கள் உள்ளனர். இதில், மாலை 6 மணி வரை ஆண்கள்-406, பெண்கள்-462 பேரும் என மொத்தம்-868 என 82.07 சதவீதம் வாக்குப் பதிவு செய்துள்ளனர். அதைத் தொடர்ந்து, பலத்த போலீஸார் பாதுகாப்புடன் வாக்குப் பதிவு இயந்திரங்கள் வாக்கு எண்ணும் மையத்துக்குக் கொண்டு செல்லப்பட்டன. அங்கு ஸ்ரீராம் வித்யாலயா பள்ளி வளாகத்தில் உள்ள ஸ்ரீராம் பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் பூந்தமல்லி சட்டப்பேரவைத் தொகுதிக்கான வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளன.
 இதை மாவட்டத் தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான மகேஸ்வரி ரவிகுமார், தேர்தல் பொதுப் பார்வையாளர் சுரேந்திரகுமார் மற்றும் பூந்தமல்லி சட்டப்பேரவைத் தொகுதிக்கான தேர்தல் நடத்தும் அலுவலர் ரத்னா மற்றும் அரசியல் கட்சிகளின் முகவர்கள் முன்னிலையில் பாதுகாப்பு அறையின் சீலை பிரித்து, பூட்டைத் திறந்து மறுவாக்குப் பதிவு நடைபெற்ற வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டன. அதைத்தொடர்ந்து, ஏற்கெனவே கடந்த 18-ஆம் தேதி வாக்குப் பதிவான 195-ஆவது வாக்குச்சாவடியின் வாக்குப் பதிவு இயந்திரத்தில் ஒட்டு வில்லைகளும் ஒட்டப்பட்டன. பின்னர், அனைவரின் முன்னிலையில் அறை பூட்டி "சீல்' வைக்கப்பட்டது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com