கோடைக்கால பாதிப்புகளைத் தவிர்க்க...

கோடைக்காலத்தில் ஏற்படும் அதிக வெப்ப பாதிப்புகளைத் தடுக்க கட்டாயம் குறிப்பிட்ட வழிமுறைகளை பொதுமக்கள்

கோடைக்காலத்தில் ஏற்படும் அதிக வெப்ப பாதிப்புகளைத் தடுக்க கட்டாயம் குறிப்பிட்ட வழிமுறைகளை பொதுமக்கள் பின்பற்ற வேண்டும் என ஆட்சியர் மகேஸ்வரி ரவிகுமார் வலியுறுத்தியுள்ளார். 
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: 
 கோடைக்காலத்தில் வெப்பத்தின் அளவு அதிகமாக இருக்கும். அந்த வகையில் பொது மக்கள் வெப்பத்திலிருந்து தங்களை காத்துக் கொள்ள குறிப்பிட்ட வழிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும். அதிக வெப்பம் தொடர்பான விவரங்களை நாள்தோறும் அறிந்து கொள்ள வேண்டும். மேலும்,கோடைக்காலத்தில் சாறு நிறைந்த பழங்களை அதிக அளவில் உட்கொள்ளவும், தாகம் வரும் வரை காத்திருக்காமல் அடிக்கடி குடிநீர் பருகவும் வேண்டும். அத்துடன், அடிக்கடி  குளிர்ந்த நீரில் குளிக்க வேண்டும். 
அதேபோல், நல்ல காற்றோட்டமான பருத்தி ஆடைகளை அணிவதன் மூலம் வெப்பத்தில் இருந்து விடுபட முடியும். வீட்டிலிருந்து வெளியில் செல்லும்போது, கண்ணாடி, குடை, காலணி ஆகியவை அணிந்து செல்ல வேண்டும். அதேபோல், வெளியில் செல்லும்போது அவசியம் குடிநீர் எடுத்துச் செல்வதுடன் தலை, கழுத்து மற்றும் கைகளை சிறிது ஈரமான துணியினால் மூடியபடி செல்ல வேண்டும். 
பெரும்பாலும் வீட்டில் தயார் செய்யப்படும் மோர், எலுமிச்சம் பழச்சாறு போன்ற குளிர்பானங்களையும், அரிசிக் கஞ்சி போன்ற பானங்களையும் அருந்த வேண்டும். மேலும், கோடைக்கால வெப்பத்தின் காரணமாக ஏற்படும் உடல் பாதிப்புகள் (பக்கவாதம், சொறி, சிரங்கு, உடல் தளர்ச்சி, தலைவலி ஆகியவை ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுகி சிகிச்சை மேற்கொள்ள வேண்டும்.
அதேபோல், கால்நடைகளை நல்ல நிழற்பகுதிகளில் தங்க வைப்பதுடன், அவற்றுக்குத் தேவையான அளவு நீரை குடிப்பதற்கு வழங்க வேண்டும்.
 பொதுமக்கள் அவசியத் தேவையின்றி வெயிலில் எங்கும் செல்ல வேண்டாம். குறிப்பாக நண்பகல் 12 மணி முதல் 3 மணி வரை வெளியில் செல்வதைத் தவிர்க்க வேண்டும். சர்க்கரை அதிகமுள்ள திரவங்களைத் தவிர்க்கவும். மிகவும் குளிர்ந்த பானங்களை அருந்துவதைத் தவிர்க்கவும்  வேண்டும். 
குழந்தைகள் மற்றும் செல்லப் பிராணிகளை வாகனம் நிறுத்தும் இடங்களிலும், வாகனங்களிலும் கட்டாயம் விட்டுச் செல்லவே கூடாது. மேலும், கனமான மற்றும் இறுக்கமான ஆடைகள் அணிவதைத் தவிர்ப்பதன் மூலம் கோடைக்கால வெப்பத்தில் இருந்து பாதுகாத்துக் கொள்ள முடியும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com