ஆரணி ஆற்றின் குறுக்கே ரூ. 28 கோடியில் மேம்பாலம்: பணிகள் தீவிரம்

திருவள்ளூர்-ஊத்துக்கோட்டை சாலையில் ஆரணி ஆற்றின் குறுக்கே மேம்பாலம் அமைக்கும் பணிகள்

திருவள்ளூர்-ஊத்துக்கோட்டை சாலையில் ஆரணி ஆற்றின் குறுக்கே மேம்பாலம் அமைக்கும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.         
திருவள்ளூர்-ஊத்துக்கோட்டை சாலையின் குறுக்கே ஆரணி ஆறு ஓடுகிறது. ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டம், பிச்சாட்டூரில் உள்ள ஆரணியார் அணை நிரம்பினால், அதன் உபரி நீரை ஆரணி ஆற்றில் திறந்து விடுவது வழக்கமாகும். இதுபோன்று திறந்து விடப்படும் நீரானது நாகலாபுரம், சுப்பாநாயுடு கண்டிகை, அச்சமநாயுடு கண்டிகை, சுருட்டப்பள்ளி, ஊத்துக்கோட்டை, பெரியபாளையம், ஆரணி, பொன்னேரி ஆகிய ஆற்று வழித்தடங்களில் பாய்ந்து, பழவேற்காடு பகுதியில் உள்ள வங்காள விரிகுடாவில் கலக்கிறது.  
இதுபோன்று பிச்சாட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட்டால் ஊத்துக்கோட்டை ஆரணி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும். 
இதனால், திருவள்ளூர்-ஊத்துக்கோட்டை சாலையில் ஆரணி ஆற்றின் குறுக்கே வாகனப் போக்குவரத்து முற்றிலும் முடங்கும் நிலை இருந்தது. இதைக் கருத்தில்கொண்டு, ஆங்கிலேயர்கள் 1937-இல் ஆரணி ஆற்றின் குறுக்கே 450 மீட்டர் தூரத்துக்கு தரைப்பாலம் அமைத்தனர்.
இந்த தரைப்பாலத்தின் வழியாகத்தான் கடந்த 70 ஆண்டுகளுக்கும் மேலாக ஊத்துக்கோட்டை- திருவள்ளூர் இடையே வாகனப் போக்குவரத்து நடைபெற்று வந்தது. இந்நிலையில். 2015-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் பெய்த கனமழையால் ஆரணி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. இதனால், இச்சாலையில் 60 நாள்களுக்கு மேல் வாகனப் போக்குவரத்து முற்றிலும் முடங்கியது. 
இதன் காரணமாக  பொதுமக்களும், பயணிகளும் கடும் அவதிக்குள்ளாகினர். இதைக் கருத்தில் கொண்டு திருவள்ளூர்-ஊத்துக்கோட்டை சாலையில் நிரந்தரமாகத் தீர்வு காணும் வகையில், ஆரணி ஆற்றின் குறுக்கே மேம்பாலம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையும் பொதுமக்களிடையே எழுந்தது.  
அதன் அடிப்படையில், கடந்த 2017-இல் இறுதியில் ரூ. 28 கோடியில் மேம்பாலம் அமைக்க அரசு அனுமதி அளித்து நிதி ஒதுக்கீடும் செய்தது. அதைத் தொடர்ந்து, கடந்த செப். 2018 -இல் முதல் கட்டமாக பணிகள் தொடங்கின. 
அதைத் தொடர்ந்து, வாகனங்கள் செல்வதற்கு தற்காலிகமாக மாற்றுப் பாதை அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது. தற்போது, மேம்பாலம் அமைப்பதற்கான தூண்கள் அமைக்கும் பணிகள் தொடங்கி மும்முரமாக நடைபெற்று வருகின்றன. 
இப்பணிகள் இந்தாண்டு இறுதிக்குள் முடிக்கத் திட்டமிட்டு, நடைபெற்று வருவதாக நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com