திருவள்ளூர் மாவட்டத்தில் கடலோரத்தில் அமைந்துள்ள 7 கிராமங்களுக்கு இயற்கைப் பேரிடரை சமாளித்து பொதுமக்களைப் பாதுகாக்கும் நோக்கில் ரூ.1.40 லட்சம் மதிப்பிலான 13 வகையான உபகரணங்கள் வழங்கப்பட்டன.
மாநில அளவில் கடலோர குடியிருப்புப் பகுதி கிராமங்களில் வசித்து வரும் பொதுமக்கள் இயற்கைப் பேரிடர்களால் பாதிக்கப்படாமல் இருக்கும் நோக்கில் ஆண்டுதோறும் உபகரணங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
அந்த வகையில் நிகழாண்டில் தென்மேற்குப் பருவமழை தொடங்கியுள்ளதால், கடலோர கிராமங்களில் வாழும் மக்கள் பாதிக்கப்படாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.கடலோர குடியிருப்புப் பகுதி மக்களுக்கு சமுதாய அடிப்படையிலான பேரிடர் அபாய மேலாண்மைத் திட்டம் சார்பில் பேரிடர் காலங்களில் தேவையான 13 வகையான மீட்பு உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன.
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள கடலோரப் பகுதியில் ஆரம்பாக்கம், சுண்ணாம்புக்குளம், ஓவாசமுத்திரம், மெதிபாளையம், நத்தம், மேலக்கழனி மற்றும் பெரிய ஓபுளாபுரம் ஆகிய 7 கிராமங்களும், 16 குக்கிராமங்களும் உள்ளன. இக்கிராமங்களுக்கு ரூ.1.40 லட்சம் மதிப்பிலான உயிர் காக்கும் மிதவை, உயிர்க் கவசம், நைலான் கயிறு, ரம்பம், தீ அணைப்பான், மண்வாரி, கடப்பாரை, டார்ச் லைட், முதலுதவிப் பெட்டி, கத்தி, கைப்பிடியுடன் இருமுனை கூர் கொண்ட கோடரி, விசில், ஸ்ட்ரெச்சர் ஆகிய 13 உபகரணங்களை அந்தந்த பகுதி ஊராட்சி செயலாளரிடம் ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் விநியோகம் செய்தனர்.