செங்குன்றத்தை அடுத்த பாடியநல்லூர் ஊராட்சியில் உள்ள சிவன் கோயில் வளாகத்தில் கிராம சபைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
சோழவரம் ஒன்றிய மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சுரேஷ்குமார் தலைமை வகித்தார். கிராம நிர்வாக அலுவலர் ராமலட்சுமி, ஊராட்சி செயலர் கே.ஆர்.சுரேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில், நெகிழி ஒழித்தல், குடிநீர் பிரச்னை, குப்பைகள் அகற்றுதல் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
பின்னர், சிவன் கோயில் அருகே அமைந்துள்ள குளத்தை தூர்வார வேண்டும்.
பாடியநல்லூர் பஞ்சாயத்து அளவிலான மகளிர் கூட்டமைப்பின் பழைய நிர்வாகிகள் இதுவரை வங்கி வரவு, செலவுக் கணக்கு உள்ளிட்டவற்றை தரவில்லை. எனவே, பழைய நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். அனைத்து கோரிக்கைகள் மீதும் உரிய நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். கூட்டத்தில் முன்னாள் கவுன்சிலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.