திருவள்ளூர்

தனியார் பங்களிப்புடன் மும்மாரி திட்டம் மூலம் தூர்வாரும் பணி: ஆட்சியர் தொடங்கி வைத்தார்

29th Jun 2019 07:55 AM

ADVERTISEMENT

திருவள்ளூர் அருகே கிராம ஊராட்சியில் மும்மாரி திட்டம் மூலம் முன்மாதிரியாக தனியார் பங்களிப்புடன் ரூ.12 லட்சத்தில் குளத்தைத் தூர்வாரும் பணியை ஆட்சியர் மகேஸ்வரி ரவிகுமார் தொடங்கி வைத்தார். 
தமிழகம் முழுவதும் தனியார் பங்களிப்புடன் ஏரி, குளங்களைத் தூர்வாரி மழை நீர் சேகரிக்க நடவடிக்கை எடுக்குமாறு ஒவ்வொரு மாவட்ட ஆட்சியருக்கும் மாநில அரசு உத்தரவிட்டிருந்தது. அதன்படி திருவள்ளூர் மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து தனியார் பங்களிப்புடன் மும்மாரி திட்டம் மூலம் முன்மாதிரியாக குளத்தைத் தூர்வாரும் பணி மேற்கொள்ளத் தீர்மானிக்கப்பட்டது. 
திருவள்ளூர் ஊராட்சி ஒன்றியத்தைச் சேர்ந்த காக்களூர் சிவன் கோயில் குளம் மேடாகி, ஆட்டிறைச்சிக் கழிவுகளை கொட்டப்பட்டு சுகாதார சீர்கேடு ஏற்படும் வகையில் இருந்தது. 12 ஏக்கர் பரப்பளவு கொண்ட நீர் சேகரிப்பு குளம், தற்போது 5.50 ஏக்கராக சுருங்கியுள்ளது. தண்ணீர் வெளியேறும் இடங்களில் உணவகங்கள் ஆக்கிரமித்துள்ளன. இவற்றை அகற்றித் தூர் வாருமாறு அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.
அதன்படி காக்களூர் தொழிற்பேட்டையில் செயல்பட்டு வரும் தனியார் நிறுவனம், மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து தூர்வாருவதற்கு முன்வந்தது. இதன்படி இக்குளத்தில் மும்மாரி திட்டம் மூலம் தூர்வாரும் பணியைத் தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. ஆட்சியர் மகேஸ்வரி ரவிகுமார் தலைமை வகித்து இப்பணியைத் தொடங்கி வைத்தார். அதன் பின் அவர் செய்தியாளர்களிடம் கூறியது: 
இந்தக் குளத்தில் மழைக்காலத்தில் அதிக அளவில் நீரைச் சேகரிக்கும் வகையில் ரூ.12 லட்சம் மதிப்பீட்டில் தூர்வார தனியார் நிறுவனம் பங்களிப்பு செய்துள்ளது. இதன் மூலம் குளத்தில் 2 அடி வரை ஆழப்படுத்தி தூர்வாருவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட இருக்கிறது. 
அதேபோல், சுற்றிலும் கரைகளைப் பலப்படுத்தும் வகையில் கற்களைப் பதித்து பாதுகாப்பதோடு, கரையில் சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் வகையில் மரக்கன்றுகள் நடப்பட்டு, பொதுமக்கள் நடைப்பயிற்சி செய்வதற்கான நடைபாதை அமைக்கப்பட உள்ளது.
குளத்தைச் சுற்றிலும் வரப்பு போல் உருவாக்கப்பட்டு அந்த இடங்களில் வெட்டிவேரை வைப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 
குளத்தின் நடுவே பருத்திப்பட்டு ஏரியில் அமைக்கப்பட்டுள்ளது போல், தூர்வாரப்படும் வண்டல் மண்ணைக்கொண்டு மணல் திட்டுகள் உருவாக்கப்பட்டு, பறவைகள் இளைப்பாறும் இடம் அமைக்கப்படும். குளத்தின் நீர் வரத்து மற்றும் வெளியேற்றப் பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு, மழைக்காலங்களில் நீர் சேகரிக்கப்பட்டு குளத்தின் நீர்த்தேக்க அளவு அதிகரிக்கப்படும். 
பல்வேறு வசதிகள் செய்து கொடுக்கப்பட இருப்பதால் பொதுமக்கள் இக்குளத்தில் சுகாதாரக்கேட்டை ஏற்படுத்தக் கூடிய குப்பைகள், இறைச்சிக் கழிவுகளை கொட்டாமல் நீர் ஆதாரத்தைப் பாதுகாக்க வேண்டும். மேலும், குறிப்பிட்ட எல்லைக்குள் ஆக்கிரமிப்பு செய்யக் கூடாது என எச்சரிக்கைப் பலகை வைக்கப்பட உள்ளது. 
இவ்வாறு தனியார் பங்களிப்புடன் நீர் ஆதாரங்களைத் தூர்வாருவதற்கு முன்வருவோர் 94445 01111 என்ற செல்லிடப்பேசி எண்ணைத் தொடர்பு கொண்டு பதிவு செய்து கொள்ளலாம் என்றார் அவர்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் க.லோகநாயகி, மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் திட்ட இயக்குநர் வை.ஜெயகுமார், மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் (மாசு கட்டுப்பாட்டு வாரியம்) பா.செந்தூர்பாண்டி, இந்திய-ஜப்பான் கூட்டு நிறுவனத் தலைவர் சாட்டோ, செயல் தலைவர் விஷ்ணுவர்தன் ராவ், வட்டார வளர்ச்சி அலுவலர் ஸ்டாலின் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT