திருவள்ளூர்

அரசு தலைமை மருத்துவமனையில் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி பிறந்த நாள் விழா

31st Jul 2019 08:33 AM

ADVERTISEMENT

திருவள்ளூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி பிறந்த நாள் விழாவையொட்டி, சிறப்பாகப் பணிபுரிந்த செவிலியர் மற்றும் பணியாளர்கள் 36 பேருக்கு பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. 
இந்தியாவின் முதல் பெண் மருத்துவர் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டியின் பிறந்த நாள் விழா மருத்துவமனை தினமாகக் கொண்டாடப்படுகிறது. 
இதையொட்டி, திருவள்ளூர் மாவட்டத் தலைமை அரசு மருத்துவமனை வளாகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, அரசு மருத்துவமனையின் கண்காணிப்பாளர் ராஜ்குமார் தலைமை வகித்தார். இதில், சுகாதார துணை இயக்குநர் இளங்கோ முன்னிலை வகித்தார். 
 இதில், சுகாதாரத் துறை இணை இயக்குநர் தயாளன் பேசியது: 
மாநில அளவில் ஒவ்வொரு மாவட்ட மற்றும் வட்டார அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்களில்  டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி பிறந்த நாளை மருத்துவமனை தினமாகக் கொண்டாட அரசு உத்தரவிட்டுள்ளது. அதற்குக் காரணம், முதன் முதலில் மருத்துவக் கல்வி பயின்று பெண் மருத்துவராகி, பெண்கள் விடுதலை மற்றும் அடையாறு புற்றுநோய் மருத்துவமனையைத் தொடங்கி பல்வேறு சேவைப் பணிகளை ஆற்றியவர் டாக்டர் முத்துலட்சுமி  ரெட்டி. 
அதனால் அவரது சேவையை நினைவு கூறும் வகையில், பிறந்த நாள் விழாவை மருத்துவமனைகள் தின நாளாக நிகழாண்டு முதல் கொண்டாட அரசு உத்தரவிட்டுள்ளது. அதன் அடிப்படையில் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் நிகழாண்டு முதல் கொண்டாடப்பட உள்ளது என்றார். அதைத் தொடர்ந்து, மருத்துவமனையில் சிறப்பாகப் பணியாற்றிய செவிலியர் மற்றும் பணியாளர்கள் என 36 பேருக்கு மாவட்டத் தலைமை அரசு மருத்துவமனை சார்பில், பாராட்டுச் சான்றிதழ்களை அவர் வழங்கினார். 
 நிகழ்ச்சியில் குழந்தைகள் நலப்பிரிவு மருத்துவர் ஜெகதீசன், மருத்துவர் சேகர், செவிலியர்கள், பணியாளர்கள் கலந்து கொண்டனர்.               
திருத்தணியில்...
திருத்தணி அரசு மருத்துவமனையில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, தலைமை மருத்துவர் ஹேமாவதி தலைமை வகித்தார். இயல் சிகிச்சை மருத்துவர் (பிசியோதெரபி) சிவகுமார் வரவேற்றார். இதில், ஓய்வுபெற்ற மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணி இயக்குநர் டாக்டர் மோகனன் பேசுகையில், அரசு மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளிடம், மருத்துவர்கள் கனிவாகப் பேசி, அவர்களது குறைகளைக் கேட்க வேண்டும். திருவள்ளூர் மாவட்டத்திலேயே திருத்தணி அரசு மருத்துவமனைதான் தேசிய அளவிலான தரத்துக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளது என்றார். 
நிகழ்ச்சியில் பட்டதாரி ஆசிரியர் உமாசங்கர் கலந்து கொண்டு மருத்துவர்களைப் பாராட்டினார். தொடர்ந்து, மருத்துவமனையில் சிறப்பாகப் பணியாற்றிய மருத்துவர், செவிலியர், துப்புரவுப் பணியாளர் ஆகியோருக்கு பரிசுகள் வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டது. இதில் 75-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
பெரியபாளையத்தில்...
எல்லாபுரம் ஒன்றியத்தில் அமைந்துள்ள பெரியபாளையம்  மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், நடைபெற்ற நிகழ்ச்சியில், வட்டார மருத்துவ அலுவலர் பிரபாகர் கலந்து கொண்டு, ஒன்றியத்துக்கு உள்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிறப்பாகப் பணிபுரிந்த 20-க்கும் மேற்பட்ட  செவிலியர்களுக்கு சான்றிதழ்களை வழங்கினார்.
மேற்பார்வையாளர் ஜெகன்நாதலு, மருத்துவர்கள் பானுப்பிரியா, தீபக், அன்னசுப்புலட்சுமி, மகிதா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT