முதல் தலைமுறை தொழில் முனைவோர்களை உருவாக்கும் திட்டத்தில் பயன்பெற பட்டதாரிகள் மற்றும் பட்டயம் முடித்தோர் விண்ணப்பங்களை திருவள்ளூர் மாவட்ட தொழில் மையத்துக்கு அனுப்பி வைக்கலாம் ஆட்சியர் மகேஸ்வரி ரவிகுமார் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
திருவள்ளூர் மாவட்டத் தொழில் மையம் சார்பில் பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் புதிய தொழில் முனைவோர், தொழில் நிறுவனங்கள் மேம்பாட்டுத் திட்டம் மூலம் பட்டதாரிகள் மற்றும் பட்டயம் பெற்றவர்கள் பயன்பெறும் வகையில் முதல் தலைமுறை தொழில் முனைவோர்களை உருவாக்கும் திட்டம் மூலம் கடனுதவி வழங்கும் திட்டம் கடந்த 2012-13-இல் இருந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் பயன்பெற விரும்புவோர் பட்டப்படிப்பு, பட்டயம், தொழில் பயிற்சி (ஐடிஐ) ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருப்பது அவசியம் ஆகும்.
வயது வரம்பு: மேலும், இதற்கு விண்ணப்பிக்கும் நாளில் பெண்கள் பட்டியல் இனத்தவர், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்.
திருநங்கையர், மாற்றுத் திறனாளிகள், முன்னாள் ராணுவத்தினர் ஆகிய சிறப்புப் பிரிவினர் 45 வயதுக்குள்பட்டவராகவும், பொதுப் பிரிவினர் 35 வயதுக்குள்பட்டவராகவும் இருக்க வேண்டும். மேலும், குறைந்தது கடந்த மூன்று ஆண்டுகளாக தமிழகத்தில் வசித்து வருபவராகவும் இருத்தல் வேண்டும். அதில், கட்டாயம் முதல் தலைமுறை தொழில் முனைவோராக இருப்பது அவசியம்.
இத்திட்டம் மூலம் தொழில் தொடங்குவதற்கு ரூ. 10 லட்சத்துக்கு குறையாமலும், ரூ. 5 கோடிக்கு மிகாமலும், திட்ட மதிப்பீடு கொண்ட உற்பத்தி சேவை நிறுவனங்களுக்கு இத்திட்டம் மூலம் கடனுதவி பெறலாம். இதில், திட்ட மதிப்பீட்டில் அதிகபட்சமாக ரூ.30 லட்சத்தை உள்ளடக்கிய 25 சதவீத மானியமும், வங்கியிடமிருந்து பெற்ற கடனுக்கென செலுத்தப்படும் வட்டித்தொகையில் 3 சதவீத பின்முனை வட்டி மானியமும் இத்திட்டம் மூலம் வழங்கப்பட்டு வருகிறது. இக்கடனுதவிக்கென நேர்காணலில் தேர்வு செய்யப்பட்டு வங்கிக்குப் பரிந்துரைக்கப்பட்டு, வங்கியிடமிருந்து ஒப்புதல் பெற்ற நபர்கள் இத்திட்டத்தில் பயன்பெற 15 நாள்கள் தொழில்முனைவோர் பயிற்சியில் தவறாமல் பங்கேற்கவும் வேண்டும்.
இத்திட்டம் மூலம் நடப்பு நிதியாண்டில் 2019-20-இல் 48 பேருக்கு ரூ. 4.70 கோடி மானியம் வழங்க திருவள்ளூர் மாவட்டத்துக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
எனவே, மேற்குறிப்பிட்ட தகுதிகளை உடைய ஆர்வமுடைய முதல் தலை முறை தொழில் முனைவோர் இருபாலரும் w.msmeonline.tn.gov.in/needs என்ற இணையதளத்தின் வாயிலாக விண்ணப்பத்தை பதிவு செய்யலாம். இதுகுறித்து, மாவட்ட ஆட்சியரின் தலைமையில் நடைபெறும் நேர்காணலுக்கு அழைக்கப் பெறும்போது மேற்கண்ட இணையதளத்தில் பதியப்பட்ட விண்ணப்பத்தின் இரு நகல்களை உரிய அனைத்து இணைப்புகளுடனும் நேர்காணலில் ஒப்படைத்துப் பயன்பெறலாம்.
மேலும், பொது மேலாளர், மாவட்ட தொழில் மையம், காக்களூர், திருவள்ளூர் - 602003, என்ற முகவரியில் நேரிலோ அல்லது 044-27666787, 27663796, 9842480424 என்ற எண்களில் தொடர்பு கொண்டு விவரங்களை அறிந்து கொள்ளலாம்.