பழவேற்காடு கடற்கரையில் குவிந்து கிடந்த பிளாஸ்டிக் குப்பைகளை பஞ்செட்டி வேலம்மாள் மெட்ரிக் பள்ளி மாணவர்கள் வெள்ளிக்கிழமை அகற்றினர்.
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அருகே உள்ள பழவேற்காடு 500 ஆண்டுகள் பழைமை வாய்ந்த கடலோர நகரமாகும். இங்கு டச்சுக்காரர்களின் கல்லறைகள், புனித மகிமை மாதா ஆலயம், முகம்மதியர் மசூதியில் உள்ள சூரிய ஒளியில் இருந்து விழும் நிழல் கடிகாரம், பறவைகள் சரணாலயம் மற்றும் 15,367 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இயற்கை எழில் கொஞ்சும் ஏரியும் அமைந்துள்ளது.
இங்குள்ள கடற்கரைக்கு சுற்றுலா வரும் மக்கள் தாங்கள் கொண்டு வரும் பிளாஸ்டிக் கழிவு பொருட்களை அங்கேயே வீசிச் சென்று விடுகின்றனர். இதனால், கரையில் குப்பைகள் குவிந்து கிடந்தது.
இதையடுத்து, வேலம்மாள் கல்விக் குழும இயக்குநர் அறிவுறுத்தலின் பேரில், பஞ்செட்டி வேலம்மாள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் பழவேற்காடு கடற்கரையை தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். இந்த பணியில் சிறப்பு விருந்தினராக, ஐ.நா. சபையின் சிறுவர் நிதியம் அமைப்பின் மூலம் ,இளம் சுற்றுச்சூழல் ஆர்வலர் விருது பெற்ற மும்பை தாதர் பகுதியைச் சேர்ந்த மல்ஹார் கலாம்பே தூய்மைப் பணியை தொடங்கி வைத்தார்.
பள்ளி முதல்வர் சாந்தி தலைமையில் நடைபெற்ற தூய்மைப் பணியில், 200 மீட்டர் தூரம் குவிந்து கிடந்த பிளாஸ்டிக் குப்பைகளை மாணவர்கள் அகற்றினர்.
பள்ளி துணை முதல்வர் திலக்ராஜ் மற்றும் ஆசிரியர்களும் பங்கேற்று தூய்மை செய்யும் பணியில் ஈடுபட்டனர். முன்னதாக, மல்ஹார் கலாம்பேக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.