திருவள்ளூரில் கடந்த 13 ஆண்டுகளுக்கும் மேலாக நிர்வாகக் காரணங்களால் பூட்டிக் கிடக்கும் டான்சி தொழில் பட்டறையை மீண்டும் இயக்க வேண்டும் என கோரிக்கை தொடர்ந்து எழுந்து வருகிறது.
தமிழகம் முழுவதும் டான்சி நிறுவனத்துக்கு சொந்தமான 41 தொழிற்சாலைகளும், தயார் செய்த பொருள்களை வைக்க சென்னை, மதுரை, திருச்சி ஆகிய 3 இடங்களில் விற்பனை காட்சியகங்களும் செயல்பட்டு வருகின்றன.
இந்த தொழிற்சாலைகள் மூலம் தமிழக அரசு சார்ந்த நிறுவனங்களின் பயன்பாட்டுக்குத் தேவையான மின்வாரிய கோபுரங்கள், விவசாயக் கருவிகள், குடிநீர் வாரியம், போக்குவரத்துத் துறை, கல்விக்கூடங்கள் மற்றும் மருத்துவத் துறைக்கு வேண்டிய உபகரணங்களை உற்பத்தி செய்யும் பணிகளை டான்சி நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. இதுதவிர, பல்வேறு உற்பத்திக் கூட கட்டுமானப் பணிகளையும், மின்வாரிய துணை மின் நிலையங்களுக்குத் தேவையான உபகரணங்களையும், ரயில்வே நடைமேடை கட்டுமானம், துறைமுக கட்டுமானப்பணிகளையும் மேற்கொண்டு வருகிறது.
53 ஆண்டுகளுக்கு முன்பு: மாவட்ட மக்களுக்கு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி அளிக்கும் வகையில் திருவள்ளூர் அருகே பூண்டி ஊராட்சி ஒன்றியம் திருப்பாச்சூர் கிராமத்தில் டான்சி தொழிற்கூடம் கடந்த 53 ஆண்டுகளுக்கு முன்பு 2.45 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டது. இந்த தொழிற்சாலையில் சிட்கோ தொழிற்பேட்டைக்குத் தேவையான இரும்பு கம்பிகள் உற்பத்தி செய்யப்பட்டு வந்தது.
அரசுத் துறைகளுக்குத் தேவைப்படும் இரும்புக்கம்பிகள் மற்றும் உதிரி பாகங்களைத் தயார் செய்வதற்கான ஆர்டர்களைப் பெற்று அதனை உற்பத்தி செய்து தரும் பணிகளை இந்த டான்சி நிறுவனம் மேற்கொண்டு வந்தது.
மேலும், அரசுப் பள்ளிகளுக்குத் தேவையான இரும்பு டெஸ்க் மற்றும் இருக்கைகளைத் தயார் செய்து அளித்து வந்தது. இதற்குத் தேவையான உதிரி பாகங்களான இரும்பு ராடுகள், தகர சீட்டுகளும் இங்கேயே தயாரிக்கப்பட்டன. டான்சி தொழிற்கூடத்தின் மூலம் 40-க்கும் மேற்பட்டவர்கள் நேரடியாகவும், 100-க்கும் மேற்பட்டோர் மறைமுகமாகவும் வேலைவாய்ப்புப் பெற்று வந்தனர்.
மூடப்பட்ட பரிதாபம்: தொடர்ந்து 40 ஆண்டுகளாக சிறந்த முறையில் இயங்கி வந்த டான்சிக்கு, அரசு அலுவலகங்கள் மற்றும் பள்ளி கல்லூரிகளில் இருந்து வரும் ஆர்டர்கள் குறைந்ததாகக் கூறப்படுகிறது. பல்வேறு நிர்வாகக் காரணங்களால், தொடர்ந்து நடத்த முடியாத நிலை ஏற்பட்டு, கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்பு எவ்வித முன்னறிவிப்பும் இன்றி திடீரென டான்சி தொழிற்கூடம் மூடப்பட்டது. இதன் காரணமாக, இந்த நிறுவனத்தை நம்பியிருந்த தொழிலாளர்கள் வேலைவாய்ப்பு இழந்தனர்; மறைமுகமாக வேலைவாய்ப்புப் பெற்று வந்தவர்களும் பாதிக்கப்பட்டனர்.
மக்களுக்கும், அரசுக்கும் பயனளித்து வந்த இந்த அரசு நிறுவனம் யாருக்கும் பயனின்றி மூடப்பட்டுள்ளது.
சமூக விரோதிகளின் புகலிடம்: பயன்படுத்தப்படாமல் உள்ள இந்த கட்டடம் கடந்த 13 ஆண்டுகளாக மூடிக் கிடப்பதால் பாழடைந்து விட்டது. புதர் மண்டியும், அலுவலக அறைகள் இடிந்து போய் பயனின்றியும் கிடக்கிறது. தற்போது மூடப்பட்டுள்ள இந்நிறுவனம் சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி விட்டது. இதுகுறித்து திருப்பாச்சூரை சேர்ந்த சமூக ஆர்வலர் சத்தியநாதன் கூறுகையில், முன்பு டான்சி தொழிற்கூடம் சுற்றுச்சுவர், வாகனம் நிறுத்தம், இரண்டு அலுவலக வளாக கட்டட வசதியுடன் 2.45 ஏக்கர் பரப்பளவில் செயல்பட்டு வந்தது.
தற்போது, வளாகம் முழுவதும் முள்புதர் மண்டி காணப்படுகிறது. டான்சி தொழிற்கூடம் மூடப்பட்டதால் கட்டடங்களில் உள்ள இரும்பு தூண்கள், சிமெண்ட் ஓடுகள், மின்சாதனப் பொருள்களை மர்ம நபர்கள் திருடிச் சென்று விட்டனர்.
மேலும், இந்த வளாகத்தில் வளர்ந்து காணப்பட்ட பல்வேறு வகை மரங்களையும் சமூக விரோதிகள் வெட்டிக் கடத்துகின்றனர். சுற்றுச்சுவர் இல்லாததால் இந்த இடத்தை ஆக்கிரமிக்கவும் முயற்சிக்கின்றனர். தொடர்ந்து, சமூக விரோதச் செயல் அரங்கேறும் இடமாக மாறி வருகிறது. எனவே, இந்த தொழிற்கூடத்தை சீரமைத்து, டான்சி நிறுவனம் மீண்டும் இயங்குவதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.
இதுகுறித்து, டான்சி தொழில் நிறுவனத்தைச் சேர்ந்த பெயர் கூற விரும்பாத அதிகாரி ஒருவர் கூறுகையில், இந்த தொழிற்சாலைக்கு போதுமான ஆர்டர் கிடைக்காத காரணத்தால்தான் கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்பு மூடப்பட்டது. மீண்டும், நிறுவனத்தை இயக்குவது குறித்து அரசுதான் முடிவு செய்ய வேண்டும் என்றார்.