திருவள்ளூர் அருகே சேவாலயாவில் காமராஜர் பிறந்த நாள் விழாவையொட்டி, நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகளில் சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு புதன்கிழமை பரிசுகள் வழங்கப்பட்டன.
சேவாலயா சார்பில் செயல்பட்டு வரும் பாரதியார் மேல்நிலைப்பள்ளியில் காமராஜர் பிறந்த நாளையொட்டி பல்வேறு வகையான போட்டிகள் நடத்தப்பட்டன. இப்போட்டியில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு பரிசளித்து, மாவட்டக் கல்வி அலுவலர் முனிசுப்பராயன் தலைமை வகித்துப் பேசியது:
முன்னாள் முதல்வர் காமராஜர் தன்னலம் இல்லாமல் வாழ்ந்தவர். கிராமங்களில் அனைவரும் கல்வி கற்க வழியேற்படுத்தும் நோக்கில், பள்ளிகளை அமைத்துக் கொடுத்தவர். அதேபோல், சேவாலயாவும் மாணவ, மாணவிகளுக்கு இலவசக் கல்வியை அளித்து வருகிறது. கற்ற கல்வியை எப்படி மறக்கக் கூடாதோ, அதுபோல் கல்வி கற்றுத் தந்த பள்ளியை என்றும் மாணவர்கள் மறக்கவே கூடாது என்றார்.
அதைத்தொடர்ந்து, காமராஜர் பிறந்த நாள் விழா போட்டியில் சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை அவர் வழங்கினார். விழாவில், மாணவர்களின் மாதாந்திர படைப்பான விடியல் இதழ் வெளியிடப்பட்டது. இதில் மாணவ, மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
முன்னதாக சேவாலயா நிறுவனர் முரளிதரன் வாழ்த்துரை வழங்கினார். ஆலோசகர் அமர்சந்த் ஜெயின் நன்றி கூறினார்.