மக்கள் குறைதீர் கூட்டத்தில் 384 மனுக்கள் அளிப்பு

திருவள்ளூரில் நடைபெற்ற மக்கள் குறைதீர் நாள் கூட்டத்தில் ஆட்சியரிடம் 384 மனுக்கள் அளிக்கப்பட்டன. 

திருவள்ளூரில் நடைபெற்ற மக்கள் குறைதீர் நாள் கூட்டத்தில் ஆட்சியரிடம் 384 மனுக்கள் அளிக்கப்பட்டன. 
  திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகக் கூட்டரங்கில் மக்கள் குறைதீர் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு, ஆட்சியர் மகேஸ்வரி ரவிகுமார் தலைமை வகித்து, பல்வேறு பகுதிகளிலிருந்து வருகைபுரிந்த பொதுமக்கள் தங்களது தனிப்பட்ட குறைகளை நிவர்த்தி செய்யவும், உதவிகள் வழங்கிடவும் கோரி மனுக்களை அளித்தனர். 
 இதில், நிலம் சம்பந்தமாக-133, சமூகப் பாதுகாப்புத் திட்டம்-68, கடனுதவி கோரி 14 மனுக்கள், குடும்ப அட்டை கோரி 3, வேலைவாய்ப்பு கோரி 22 மனுக்கள், ஆதிதிராவிடர் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் நலம் தொடர்பாக 9, சட்டம் மற்றும் ஒழுங்கு -13, ஊரக நகர்ப்புற வளர்ச்சி தொடர்பான 82 மனுக்கள் மற்றும் இதர துறைகள் சம்பந்தமாக 40 மனுக்கள் என மொத்தம் 384 மனுக்கள் வரை பெறப்பட்டன. இந்த மனுக்களின் மீது உரிய நடவடிக்கை மேற்கொண்டு, தகுதியான பயனாளிகளுக்கு அரசு நலத் திட்ட உதவிகளை வழங்கவும் அந்தந்த துறை அலுவலர்களை அவர் வலியுறுத்தினார்.  
  அதைத் தொடர்ந்து, முன்னாள் படைவீரர் நலத்துறை சார்பில், 2017-ஆம் ஆண்டுக்கு அதிக அளவில் கொடி நாள் நிதியை வசூல் செய்து வழங்கிய மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர், வட்டாட்சியர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், நகராட்சி ஆணையர்கள், சார் பதிவாளர்கள் மற்றும் இதர துறை அரசு அலுவலர்களுக்கு ஆளுநரின் பாராட்டுச் சான்றிதழ்கள் மற்றும் பதக்கங்களையும் வழங்கினார். அதைத் தொடர்ந்து, வருவாய்த்துறை சார்பில், இலவச வீட்டுமனைப் பட்டாவை ஒரு பயனாளிக்கும், மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகம் சார்பில், 5 மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ. 2,480 மதிப்பிலான ஊன்றுகோல்களையும் அவர் வழங்கினார்.
 கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் (பொ) ராஜகோபால், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் க.லோகநாயகி, முன்னாள் படைவீரர் நலத் துறை உதவி இயக்குநர் அமிருன்னிஷா, மாவட்ட வழங்கல் அலுவலர் சாய்வர்தினி, மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர் பாலாஜி, ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) பன்னீர்செல்வம் மற்றும் பல்வேறு துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி மனு
திருவள்ளூர் அருகே இருளர் இன மக்கள் வசித்து வரும் பகுதியில் குடிநீர் உள்பட அடிப்படை செய்து தரக்கோரி, இருளர் முன்னேற்றச் சங்கத்தினர் ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.
இதுகுறித்து திருவாலங்காடு ஊராட்சி ஒன்றியத்தைச் சேர்ந்த ராஜபத்மாபுரம் இருளர் காலனி மக்களின் சார்பில் திருவள்ளூர் மாவட்ட இருளர் முன்னேற்றச் சங்கத்தின் நிறுவனர் பிரபு ஆட்சியரிடம் அளித்த மனுவில் தெரிவித்திருப்பது:
திருவாலங்காடு ஊராட்சி ஒன்றியத்தைச் சேர்ந்த ராஜபத்மாபுரத்தில் இருளர் காலனியில் 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் குடிசைகள் அமைத்து வசித்து வருகின்றனர். இவர்கள் நாள்தோறும் கூலி வேலைக்குச் சென்று பிழைப்பு நடத்தி வருகின்றனர். இந்நிலையில், இவர்களின் நிலையறிந்து, கடந்த 2010-இல் அரசு மூலம் இலவச பட்டாவும் வழங்கப்பட்டது. எனவே அப்பகுதியில் குடிதண்ணீர் வசதி, மின்சார வசதி, தெரு விளக்கு, சாலை வசதி ஆகியவை செய்து தரப்படாமல் உள்ளது. 
  அத்துடன், காலனி வீடுகள் அமைத்துத்தர வலியுறுத்தி வருகிறோம். ஆனால், இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால், இரவு நேரங்களில் விஷப் பூச்சிகளின் நடமாட்டம் உள்ளதால் நடந்து செல்ல முடியாத நிலையும், குடிநீருக்காக பம்ப் செட் தோட்டத்துக்கு சென்று எடுத்து வர வேண்டியும் உள்ளது. இதுபோன்று தண்ணீர் எடுப்பதிலேயே நேரம் சரியாகி விடுவதால், குறிப்பிட்ட நேரத்துக்குள் கூலி வேலைக்குச் செல்ல முடியாத நிலை உள்ளது. எனவே, இங்கு வசித்து வரும் இருளர் இன மக்களின் நிலையை கருத்தில் கொண்டு அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும்.      
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com