திருவள்ளூர்

ரூ.5 கோடி சொத்தை மீட்டுத்தரக் கோரி மூதாட்டிகள் மனு

16th Jul 2019 07:21 AM

ADVERTISEMENT

திருத்தணியில் ரூ. 5 கோடி மதிப்பிலான சொத்துகளை அபகரித்தவர்களிடம் இருந்து பணத்தையும், சொத்துகளையும் மீட்டுத்தரக்கோரி பாதிக்கப்பட்ட மூதாட்டிகள் மாவட்ட ஆட்சியர் வாகனம் முன் அமர்ந்து திங்கள்கிழமை தர்னாவில் ஈடுபட்டனர்.
திருத்தணியைச் சேர்ந்த இந்துமதி(79) மற்றும் சுஜாதா (75). இவர்கள் தங்களது பூர்வீக சொத்தை ஏமாற்றி முறைகேடு செய்து அபகரித்ததாகக் கூறி ஆட்சியர் வாகனம் முன்பு திடீரென தர்னாவில் ஈடுபட்டனர். அதைத் தொடர்ந்து, அங்கு பாதுகாப்புக்கு நின்றிருந்த போலீஸார் உடனே மூதாட்டி சகோதரிகளை அழைத்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு, ஆட்சியரிடம் மனு அளிக்க அனுப்பி வைத்தனர்.
மனுவில் தெரிவித்திருப்பது: திருத்தணியில் எங்களுக்குச் சொந்தமாக ரூ.5 கோடி மதிப்பிலான பூர்வீகச் சொத்து உள்ளது. இந்த சொத்தை உறவினர்களான அதே பகுதியைச் சேர்ந்த யோகலட்சுமி சந்தோஷ் மற்றும் திவாகர் ஆகியோர் கூடுதலான விலைக்கு விற்பனை செய்து தருவதாகக்கூறி, வெற்று நில ஆவணங்களில் கையெழுத்து மட்டும் பெற்றனர். அதைத் தொடர்ந்து, சொத்தை கிரையம் செய்து பணம் தராமல் ஏமாற்றினர்.
 இதுகுறித்து கேட்டால் பணம் தரமுடியாது என்கின்றனர். இதற்கிடையே மீதமுள்ள சொத்துகளை விற்பனை செய்வதற்கும் ஏற்பாடு செய்து வருகின்றனர். அதை தடுத்தபோது, மிரட்டுகின்றனர். அதனால், பூர்வீக சொத்துக்கான பணத்தை அவர்களிடம் இருந்து பெறவும், மீதமுள்ள சொத்துகளையும் விற்பனை செய்ய விடாமல் எங்களிடம் மீட்டுத் தரவும் வேண்டும் எனத் தெரிவித்துள்ளனர். மனுவைப் பரிசீலனை செய்த ஆட்சியர் மகேஸ்வரி ரவிகுமார் நடவடிக்கை எடுப்பதாகக் கூறினார்.    
 

ADVERTISEMENT
ADVERTISEMENT