திருவள்ளூர்

கிராமச் சாலையை சீரமைக்கக் கோரிக்கை

15th Jul 2019 12:57 AM

ADVERTISEMENT

பூந்தமல்லி அருகே ஜல்லிக்கற்கள் பெயர்ந்து குண்டும், குழியுமாகக் காட்சியளிக்கும் கிராம சாலையை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 திருவள்ளூர் அருகே திருநின்றவூர் }பூந்தமல்லி சாலையில் உள்ள கொசவன்பாளையம் ஊராட்சிக்கு உள்பட்டது ராஜாங்குப்பம் கிராமம். இக்கிராமத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இக்கிராமத்துக்கு சென்று வர திருநின்றவூர் ஈஸ்வரன் கோயில் முதல் ராஜாங்குப்பம் வரை 1.5 கி.மீ. தூரத்துக்கு சாலை அமைக்கப்பட்டுள்ளது. இச்சாலை பழுதடைந்து, குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. மேலும், தற்போது பெய்த மழையால் சாலைகளில் இருந்த பள்ளங்களில் மழை நீர் தேங்கி குட்டைகளாக உள்ளதாகவும், அதனால், இரு சக்கர வாகனங்களில் செல்வோர் இடறி கீழே விழும் நிலை உள்ளதாகவும் இப்பகுதியினர் கூறுகின்றனர். இச்சாலையை பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்கள்உள்ளிட்ட பலர் பயன்படுத்தி வருகின்றனர். பெரிய பள்ளங்கள் ஏற்பட்டுள்ளதால் வாகனப் போக்குவரத்துக்கு பயனற்றதாக இச் சாலை மாறி வருவதாகவும் கூறுகின்றனர். தற்போதைய நிலையில், அவசரத்துக்கு மருத்துவமனைக்கு செல்ல முடியாத அளவுக்கு சாலை உள்ளதாகவும், ராஜாங்குப்பம் அருகில் உள்ள என்.எஸ்.கே. நகர் முதல் அன்னம்பேடு வரை 3 கி.மீ-க்கு ஒன்றியச் சாலை தரமற்ற நிலையில் உள்ளதாகவும் கூறுகின்றனர்.
 இச்சாலையை சீரமைக்க வலியுறுத்தி, பூந்தமல்லி வட்டார வளர்ச்சி அலுவலரிடம் அப்பகுதி மக்கள் பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லையாம். அதனால், விரைவில் இச்சாலையை சீரமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 
 
 

ADVERTISEMENT
ADVERTISEMENT