குழந்தைகள் பராமரிப்பு மற்றும் பாதுகாப்புச் சட்டம்-2015 -விதிமுறைப்படி அமைக்கப்பட்ட இளைஞர் நீதி குழுமத்துக்கு சமூக நல உறுப்பினர்களாக நியமிக்கத் தகுதியானவர்கள் வரும் 25-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் மகேஸ்வரி ரவிகுமார் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக ஆட்சியர் மகேஸ்வரி ரவிகுமார் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
இளைஞர் நீதி (குழந்தைகள் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு) சட்டம் 2015-ஆம் ஆண்டு மற்றும் விதிமுறைப்படி இளைஞர் நீதி குழுமம் அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுமத்துக்கு சமூக நல உறுப்பினர்களாக நியமிக்க குறிப்பிட்டுள்ள தகுதிகளைக் கொண்டவர்கள் விண்ணப்பிக்கலாம். இந்த இளைஞர் நீதி குழுமத்துக்கு ஒரு பெண் உள்பட 2 சமூக நல உறுப்பினர்கள் மதிப்பூதிய அடிப்படையில் நியமிக்கப்பட உள்ளனர்.
குழந்தைகள் தொடர்பான உடல் நலம், கல்வி அல்லது குழந்தைகளுக்கான நற்பணிகளில் குறைந்தது 7 ஆண்டுகள் முனைப்புடன் ஈடுபாடு கொண்டவர் அல்லது குழந்தை உளவியல், மனநல மருத்துவம், சமூகவியல் அல்லது சட்டம் ஆகியவற்றில் ஏதேனும் பட்டம் பெற்ற தொழில் புரிந்து வருவோராக இருக்க வேண்டும். இதற்கு விண்ணப்பிப்போர் 35 வயதுக்கு குறையாமலும், 65 வயதுக்குள்ளும் இருப்பது அவசியம். ஒரு குழுமத்தில் அதிகபட்சமாக ஒரு நபர் இருமுறை மட்டுமே பதவி வகிக்க தகுதி உடையவர். ஆனால், தொடர்ந்து இருமுறை பதவி வகிக்க இயலாது.
இதற்கான விண்ணப்பப் படிவத்தை அந்தந்த மாவட்டக் குழந்தைகள் பாதுகாப்பு அலகிலிருந்து பெற்றுக் கொள்ளலாம். தகுதிவாய்ந்த நபர்கள் மேற்கண்ட பதவிக்கு அதற்கான படிவத்தை 25-ஆம் தேதிக்குள் மாவட்டக் குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், மாவட்டக் குழந்தைகள் பாதுகாப்பு அலகு, எண். 48, ஜே.என் சாலை (சாந்தி மண்டபம் அருகில்), திருவள்ளூர்-602 001 என்ற முகவரியில் குறிப்பிட்ட நாள்களுக்குள் விண்ணப்பிக்கலாம்.
இதில், தகுதி மற்றும் அனுபவத்தின் அடிப்படையில் மட்டும் நியமிக்கப்பட உள்ளனர். மேலும், அரசின் முடிவே இறுதியானது. இதுதொடர்பாக எண்: 044 -27665595 என்ற தொலைபேசி எண்ணில் அறிந்து கொள்ளலாம்.