சென்னை மாதவரம் பகுதியில் வியாபாரிகளை மிரட்டிப் பணம் வசூலித்த குமரன் என்ற ரௌடியை போலீஸார் கைது செய்தனர்.
மாதவரம் அருகே உள்ள பஜாரில் இளைஞர் ஒருவர் வியாபாரிகளிடம் கத்தியைக் காட்டி மிரட்டிப் பணம் வசூலிப்பதாக, காவல் ஆய்வாளர் ஜவஹர் பீட்டருக்கு வியாழக்கிழமை ரகசியத் தகவல் கிடைத்தது. அதன் பேரில் அவர் அங்கு சென்று பார்த்தபோது கத்தியுடன் ஒரு கடையில் நின்றிருந்த இளைஞரைப் பிடித்து விசாரணை நடத்தினர்.
இதில், அவர் காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரம் பகுதியை சேர்ந்த குமார் என்கிற குமரன்(35) என்று தெரிய வந்தது. அவர் மீது மாதவரம், புழல், வியாசர்பாடி உள்ளிட்ட காவல் நிலையங்களில் கொலை, கொலை முயற்சி வழக்குகள் உள்ளதும் ரௌடி என்பதும் தெரிய வந்தது. அவரை காவல் ஆய்வாளர் ஜவஹர்பீட்டர் கைது செய்து, வழக்குப் பதிவு செய்து புழல் சிறைக்கு அனுப்பினார்.