திருவள்ளூர்

ஆழ்துளைக் கிணறுகளில் குடிநீர் எடுப்பதை கண்டித்து சாலை மறியல்

2nd Jul 2019 04:12 AM

ADVERTISEMENT

பொன்னேரி வட்டத்தில் உள்ள பெருங்காவூர் பகுதியில் சிலர் அனுமதியின்றி ஆழ்துளைக் கிணறுகளில் இருந்து குடிநீர் எடுத்துச் செல்வதைக் கண்டித்து அப்பகுதி மக்கள் அருமந்தை கூட்டு சாலையில் திங்கள்கிழமை மறியல் நடத்தினர்.
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி வட்டம், சோழவரம் ஒன்றியத்தில் உள்ள பெருங்காவூர், புதூர், அருமந்தை உள்ளிட்ட பகுதிகளில் சிலர் அனுமதி இல்லாமல் ஆழ்துளைக் கிணறு அமைத்து அதில் இருந்து  லாரிகளில் குடிநீர் எடுத்துச் சென்று விற்பனை செய்து வருகின்றனர். இதற்கு அப்பகுதியில் வசிக்கும் மக்கள் நீண்ட நாள்களாக எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனனர். 
எனினும், அனுமதியின்றி லாரிகளில் குடிநீர் எடுத்துச் சென்று விற்பனை செய்யப்படுவது தொடர்ந்து நடந்து வருகிறது. இந்த விஷயத்தில் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது.
இந்நிலையில், இந்த கிராமங்களைச் சேர்ந்த மக்கள் அருமந்தை கூட்டுச் சாலையில் மறியல் போராட்டம் நடத்தினர். இது குறித்து தகவல் அறிந்த பொன்னேரி வட்டாட்சியர் புகழேந்தி மற்றும் சோழவரம் போலீஸார் அங்கு சென்று  பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, ஆழ்துளைக் கிணறு அமைத்து, நிலத்தடி நீரை அனுமதியில்லாமல் எடுத்துச் செல்பவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் தெரிவித்ததை தொடர்ந்து பொதுமக்கள் போராட்டத்தைக் கைவிட்டனர்.  சாலை மறியல் போராட்டம் காரணமாக அப்பகுதியில் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

ADVERTISEMENT
ADVERTISEMENT