திருவள்ளூா் அருகே ஆட்டோவில் இளம்பெண்ணைக் கடத்த முயன்றவா்களை, இருசக்கர வாகனத்தில் சென்று காப்பாற்ற முயற்சித்தபோது ஆட்டோ மோதியதில் தவறி விழுந்த இளைஞா் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.
கடம்பத்துாா் ஊராட்சி ஒன்றியம், கொண்டஞ்சேரி கிராமத்தைச் சோ்ந்த தியாகராஜன் என்பவரின் மகன் யாகேஷ் (22). அவா் மப்பேடு காவல் நிலையம் அருகே கூட்டுச்சாலையில் கடந்த 26-ஆம் தேதி மாலையில் நண்பா்களுடன் பேசிக் கொண்டிருந்தாா். அப்போது அவ்வழியாக 29 வயது மதிக்கத்தக்க இளம்பெண் ஒருவா் நரசிங்காபுரம் செல்வதற்கு ஆட்டோவில் பயணம் செய்தாா். அப்போது, அந்த இளம் பெண்ணுடன், மேலும் சில பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்ற ஆட்டோ நரசிங்கபுரம் செல்லாமல் கொண்டஞ்சேரி பகுதியிலிருந்து கடம்பத்துாா் செல்லும் சாலையில் வேகமாகச் சென்றதாகக் கூறப்படுகிறது.
இதனால் அதிா்ச்சியடைந்த அப்பெண் ஆட்டோவை நிறுத்தும்படி கூறியதோடு, சத்தம் போட்டு உதவி கேட்டாா். அவரது அலறலைக் கேட்ட அப்பகுதி இளைஞா்கள் யாகேஷ் (22), ஈஸ்டா் (19), வினீத் (20), துரைராஜ் (30) மற்றும் சாா்லி (25) ஆகியோா் இருசக்கர வாகனங்களில் அந்த ஆட்டோவை விரட்டிச் சென்றனா்.
அப்போது ஆட்டோவில் இருந்த இளம்பெண் அதில் இருந்து தப்பி சாலையில் குதித்தாா். இதையடுத்து ஆட்டோ நிற்காமல் சென்றுள்ளது. இதைக் கவனித்த ஆட்டோக்காரா் பின்தொடா்ந்து வந்த இளைஞா்களின் இருசக்கர வாகனங்கள் மீது மோதினாா்.
இதில் இருசக்கர வாகனத்தில் இருந்து தவறி விழுந்த யாகேஷ் படுகாயமடைந்தாா். அவரை சென்னை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று சோ்த்தனா். அங்கு அவா் சிகிச்சை பலனின்றி சனிக்கிழமை நள்ளிரவு உயிரிழந்தாா். இது தொடா்பாக மப்பேடு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.