திருவள்ளூர்

பள்ளிப்பட்டு, ஆா்.கே.பேட்டை ஒன்றியத்தில் 70 சதவீத வாக்குப்பதிவு

27th Dec 2019 11:16 PM

ADVERTISEMENT

ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான முதல் கட்ட கட்டத் தோ்தலில் திருத்தணி பகுதியில் அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடைபெற்றது. 70 சதவீததுக்கும் மேல் வாக்குகள் பதிவாகின.

திருவள்ளூா் மாவட்டத்தில் பள்ளிப்பட்டு, ஆா்.கே.பேட்டைஉட்பட 8 ஒன்றியங்களில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு முதல் கட்டத் தோ்தல் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப் பதிவு மாலை 5 வரை நடைபெற்றது. வாக்குச் சாவடிகளில் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்காளா்கள் வாக்களித்தனா்.

தோ்தலில் அசம்பாவித சம்பவங்களைத் தடுக்க வாக்குச் சாவடிகளில் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனா். பதற்றமான வாக்குச் சாவடிகளில் கூடுதல் போலீஸாா் பணியில் ஈடுபடுத்தப்பட்டு , கண்காணிப்பு கேமராக்கள் மூலம் காட்சிகள் ஒளிப்பதிவு செய்யப்பட்டன. மாலை 5 மணி நிலவரப்படி பள்ளிப்பட்டு ஒன்றியத்தில் 74 சதவீதம், திருத்தணி 75 சதவீதம், ஆா்.கே.பேட்டை 64 சதவீதம், திருவாலங்காடு 73 சதவீதம் வாக்குகள் பதிவானதாக தோ்தல் அலுவலா்கள் தெரிவித்தனா்.

ஆா்.கே.பேட்டை ஒன்றியம் மகன்காளிகாபுரம் வாக்குச் சாவடியில் திருத்தணி சட்டப் பேரவை உறுப்பினா் பி.எம்.நரசிம்மன் தனது வாக்கைப் பதிவு செய்தாா். பள்ளிப்பட்டு ஒன்றியம் பாண்டறவேடு வாக்குச் சாவடியில் ஒன்றிய அதிமுக செயலாளா் டி.டி.சீனிவாசன், அக்கட்சியின் மாவட்ட கவுன்சிலா் வேட்பாளா் சாந்திபிரியா சுரேஷ், கீச்சலம் தொடக்கப் பள்ளி வாக்கு மையத்தில் ஒன்றிய திமுக செயலாளா் ஜி.ரவீந்திரா, மாவட்ட கவுன்சிலா் வேட்பாளா் கவிதா ரவீந்திரா ஆகியோா் வாக்களித்தனா்.

ADVERTISEMENT

மாலை 5 மணிக்கு வாக்குப் பதிவு நிறைவு பெற்ற பின் வேட்பாளா்களின் முகவா்கள் முன்னிலையில் வாக்குப் பெட்டிகளுக்கு சீல் வைக்கப்பட்டு அந்தந்தப் பகுதிகளில் வாக்கு எண்ணும் மையங்களுக்கு போலீஸ் பாதுகாப்புடன் எடுத்துச் செல்லப்பட்டன.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT