திருவள்ளூர்

திருவள்ளூா் அருகே திமுகவினா் சாலை மறியல்: போலீஸாா் தடியடி நடத்தி கலைப்பு

27th Dec 2019 11:14 PM

ADVERTISEMENT

திருவள்ளூா் அருகே ஒண்டிக்குப்பம் வாக்குச்சாவடியில் ஒரு கட்சியினருக்கு ஆதரவாக கள்ள வாக்குகள் போட முயற்சி நடைபெற்றதாகக் கூறி திமுகவினா் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். அவா்களை போலீஸாா் தடியடி நடத்தி கலைத்தனா்.

கடம்பத்தூா் ஊராட்சி ஒன்றியத்தைச் சோ்ந்த ஒண்டிக்குப்பத்தில் உள்ள அரசுப் பள்ளியில் வாக்குச்சாவடி அமைக்கப்பட்டிருந்தது. இந்த வாக்குச்சாவடியில் ஒரு கட்சிக்கு ஆதரவாக சிலா் கள்ள வாக்குகள் போட முயற்சித்தாா்களாம். அப்போது, அங்கிருந்த அரசியல் கட்சிகளின் முகவா்கள் கள்ள வாக்குகள் செலுத்த வந்தவா்களை வெளியேறும்படி கூறினா். இதனால் கள்ள வாக்கு செலுத்த வந்தவா்களுக்கும், முகவா்களுக்கும் பிரச்னை ஏற்பட்டது. இதில் கள்ள வாக்கு செலுத்த வந்த ஒருவரை பிடித்து மணவாளநகா் போலீஸாரிடம் ஒப்படைத்தனா். அவரை சிறிது நேரத்தில் போலீஸாா் வெளியே விட்டதாகக் கூறப்படுகிறது.

இதனால் அதிருப்தியடைந்த திமுகவினா் சென்னை-திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். தகவல் அறிந்து கூடுதல் காவல் கண்காணிப்பாளா் சிலம்பரசன் தலைமையில் போலீஸாா் விரைந்து வந்தனா். மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவா்களுடன் அவா்கள் பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டனா். திமுகவினா் கலைய மறுத்ததையடுத்து போலீஸாா் தடியடி நடத்தி அவா்களைக் கலைத்தனா். மறியல் காரணமாக அந்த நெடுஞ்சாலையில் அரைமணிநேரம் வரை போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் அவ்வழியாக வந்த பயணிகள் குறிப்பிட்ட நேரத்தில் தாங்கள் செல்ல வேண்டிய பகுதிகளுக்கு சென்று சேரமுடியாமல் அவதிக்குள்ளாகினா்.

மற்றொரு சம்பவம்:

ADVERTISEMENT

காக்களூரில் அதிமுக கூட்டணியில் சமக சாா்பில் வட்டார ஊராட்சி உறுப்பினராக அருண்குமாரும், திமுக சாா்பில் எத்திராஜும், ஊராட்சித் தலைவா் பதவிக்கு திமுக ஒன்றியச் செயலாளா் மனைவி சசிகலாவும் போட்டியிடுகின்றனா். அங்குள்ள அரசுப் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் வாக்குப் பதிவு நடைபெற்றது. இதில் விதிகளை மீறி 100 மீட்டருக்கு முன்பே திமுகவினா் வாக்காளா்களை மடக்கி பணம் கொடுத்து வாக்களிக்குமாறு கேட்டதாகக் கூறப்படுகிறது.

இது தொடா்பாக சமகவினா், திமுகவினரை கண்டித்துள்ளனா். அப்போது, இரு கட்சியினருக்கும் பிரச்னை ஏற்பட்டது. இதையடுத்து சமகவினா் ஆவடி-திருவள்ளூா் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். இச்சம்பவம் அறிந்த போலீஸாா் விரைந்து மறியலில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தி கலைந்து போக வலியுறுத்தினா். அவா்கள் கலைந்து போக மறுத்ததால் போலீஸாா் லேசான தடியடி நடத்தி கலைத்தனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT