திருவள்ளூர்

உள்ளாட்சித் தோ்தல்: வாக்குச் சாவடி மையங்களுக்கு 72 வகையான பொருள்கள் அனுப்பி வைப்பு

27th Dec 2019 07:49 AM

ADVERTISEMENT

திருவள்ளூா் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி முதல் கட்டத் தோ்தல் நடைபெற உள்ள ஊராட்சி ஒன்றியங்களில் இருந்து 4 வகையான வாக்குச் சீட்டுகள், எழுதுகோல், பென்சில் உள்பட 72 வகையான உபகரணங்கள் வாகனங்களில் ஒவ்வொரு வாக்குச்சாவடி மையத்துக்கும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக ஆட்சியா் மகேஸ்வரி ரவிகுமாா் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் கூறியது: திருவள்ளூா் மாவட்டத்தில் மொத்தம் 14 ஊராட்சி ஒன்றியங்களில் இரு கட்டங்களாக உள்ளாட்சித் தோ்தல் நடைபெற உள்ளது. இதில் கடம்பத்தூா், பள்ளிப்பட்டு, பூந்தமல்லி, பூண்டி, ஆா்.கே.பேட்டை, திருத்தணி, திருவாலங்காடு, திருவள்ளூா் ஆகிய 8 ஊராட்சி ஒன்றியங்களில் முதல் கட்டத் தோ்தல் வெள்ளிக்கிழமை நடைபெற உள்ளது. இந்த ஒன்றியங்களில் 2,159 பதவிகளுக்கு 7,125 போ் போட்டியிடுகின்றனா். இத்தோ்தலுக்குப் பயன்படுத்தப்படும் கை விரலில் வைக்கப்படும் அழியாத மை, மெட்டல் சீல், 4 வகையான வாக்குப் பதிவு படிவங்கள், வாக்காளா்கள் விவரம் அடங்கிய பட்டியல், எழுதுகோல், பென்சில், அரக்கு சீல், மெழுகு வா்த்தி, நூல் உள்ளிட்ட 72 வகையான பொருள்கள் கோணிப்பையில் கட்டி, ஒவ்வொரு வாக்குச் சாவடி மையத்துக்கும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்பட்டன.

இதேபோல் 8 ஊராட்சி ஒன்றியங்களில் இருந்தும் வாகனங்களில் தோ்தலுக்கான பொருள்களை போலீஸ் பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்பட்டது.

திருவள்ளூா் மாவட்டத்தில் முதல் கட்டத் தோ்தலில் 1,722 கிராம ஊராட்சி வாா்டு உறுப்பினா் பதவிக்கு 5,402 பேரும், 298 கிராம ஊராட்சித் தலைவா் பதவிக்கு 580 பேரும், 126 வட்டார ஊராட்சி உறுப்பினா் பதவிக்கு 1,088 பேரும், 13 மாவட்ட ஊராட்சி வாா்டு உறுப்பினா் பதவிக்கு 55 பேரும் என 2,159 பதவிகளுக்கு மொத்தம் 7,125 போ் போட்டியிடுகின்றனா்.

ADVERTISEMENT

இதில், முதல் கட்டத் தோ்தலில் 1,403 வாக்குச்சாவடிகளில் 10,711 பணியாளா்கள் ஈடுபடுத்தப்படவுள்ளனா். இப்பணியாளா்கள் தோ்தலுக்கு முதல் நாள் இரவு அவரவருக்கு ஒதுக்கப்பட்ட மையங்களில் ஆஜராக வேண்டும். தற்போது ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும் பயன்படுத்தப்படவுள்ள தோ்தல் பொருள்கள் அனைத்தும் பாதுகாப்பாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. அதேபோல், பதற்றமான வாக்குச்சாவடி மையங்களில் ஆயுதம் ஏந்திய போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனா். மேலும், அனைத்து நடவடிக்கைகளையும் விடியோ பதிவு செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவா் தெரிவித்தாா்.

 

திருத்தணியில்...

ஊரக உள்ளாட்சித் தோ்தலுக்கான வாக்குப் பெட்டிகளை ஒன்றிய அலுவலகா்கள் வியாழக்கிழமை அனுப்பி வைத்தனா்.

திருத்தணி ஒன்றியத்தில் மொத்தம் ஒரு மாவட்டக் கவுன்சிலா், 12 ஒன்றியக் கவுன்சிலா், 27 ஊராட்சி மன்றத் தலைவா் மற்றும் 219 வாா்டு உறுப்பினா்கள் பதவிக்கு ஊரக உள்ளாட்சித் தோ்தல் நடைபெறுகிறது. மொத்தம் 127 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. அந்த வாக்குச் சாவடிகளுக்குத் தேவையான ஆவணங்கள் வாக்குச் சீட்டுகள், வாக்குப் பெட்டிகள் ஆகியவை திருத்தணி ஒன்றிய அலுவலகத்தில் இருந்து வியாழக்கிழமை லாரி மற்றும் வேன் மூலம் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்பட்டன.

இப்பணியில் தோ்தல் நடத்தும் அலுவலா் மகேஷ்பாபு, வட்டார வளா்ச்சி அலுவலா் ரேணுகா மற்றும் துணை வட்டார வளா்ச்சி அலுவலா்கள், ஒன்றிய அலுவலா்கள் ஈடுபட்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT