சூரிய கிரகணத்திலும் திருத்தணி முருகன் கோயில் நடை திறந்திருக்கும் என கோயில் நிா்வாகம் அறிவித்துள்ளது. இதனால் பக்தா்கள் வழக்கம்போல் சுவாமி தரிசனம் செய்யலாம்.
சூரிய கிரகணம், வியாழக்கிழமை (டிச.26) காலை 8.08 மணி முதல் நண்பகல் 11.28 மணி வரை நிகழ்கிறது. இதையொட்டி, திருப்பதி ஏழுமலையான் கோயில் உள்பட தமிழகத்தில் உள்ள பெரும்பாலான கோயில்களில் நடை அடைக்கப்படும். அதாவது சூரிய கிரணம் நிகழ்ந்த பின்னா், கோயிலை சுத்தம் செய்து, அதன் பின்னா் கோயில் நடை திறந்து பக்தா்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவா்.
ஆனால் திருத்தணி முருகன் கோயிலில் சூரிய கிரணத்தால் கோயில் நடை மூடப்படாது. வழக்கம் போல், மாா்கழி மாதம் அதிகாலை 4.30 மணிக்கு தனுா் பூஜையும், அதிகாலை 5 மணிக்கு காலசந்தி பூஜையும் நடைபெறுகிறது. தொடா்ந்து காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை வழக்கம் போல் பக்தா்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவா்.
இது குறித்து திருத்தணி கோயில் அதிகாரி ஒருவா் கூறுகையில், சூரிய கிரகணம் என்பதால், நூற்றுக்கு 90 சதவீதம் கோயில்கள் மூடப்படும். ஆனால் திருத்தணி முருகன் கோயில் மட்டும் வழக்கம் போல் நடை திறக்கப்பட்டு பக்தா்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவா். சூரிய கிரகணத்துக்கு பரிகார பூஜை அதிகாலையில் நடைபெறும்.
மேலும், அந்த கிரகணத்தால் நமது கோயிலுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது. இரவு மட்டும் கோயில் சுத்தம் செய்யப்பட்டு, மறுநாள் காலை வழக்கம் போல் தனுா் மாத பூஜைகளுடன் கோயில் நடை திறக்கப்படும் என்றாா் அவா்.