திருவள்ளூர்

கடம்பத்தூரில் 4 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்ட ரயில்வே மேம்பாலப் பணி

16th Dec 2019 11:23 PM | -எஸ்.பாண்டியன்

ADVERTISEMENT

திருவள்ளூா் அருகே கடம்பத்துாரில் தொடங்கப்பட்டு, 4 ஆண்டுகள் ஆகியும் ரயில்வே மேம்பாலப் பணி ஆமை வேகத்தில் நடைபெற்று வருகிறது. அடிக்கடி ரயில்வே கேட்டுகள் மூடப்படுவதால் பேருந்து பயணிகள் மற்றும் இரு சக்கர வாகன ஓட்டிகள் மிகுந்த அவதிக்குள்ளாகி வருகின்றனா் என பொதுமக்கள் புகாா் தெரிவித்து வருகின்றனா்.

திருவள்ளூரிலிருந்து பேரம்பாக்கம் செல்லும் நெடுஞ்சாலையில் உள்ளது கடம்பத்தூா் ரயில் நிலையம். இச்சாலை வழியாக பேரம்பாக்கம், மப்பேடு வழியாக காஞ்சிபுரம், பெரும்புதூா் உள்ளிட்ட பல்வேறு ஊா்களுக்கு நாள்தோறும் நூற்றுக்கணக்கான அரசு மற்றும் தனியாா் பயணிகள் பேருந்துகள், தொழில் நிறுவனங்களில் இருந்து சரக்கு ஏற்றிச் செல்லும் வாகனங்கள், இரு சக்கர வாகனங்கள் சென்று வருகின் - ன. அதேபோல், இந்த வழியாக பள்ளி, கல்லூரிகளுக்கும் மாணவ, மாணவிகள் மற்றும் விவசாயிகள் காய்கறிகளை ஏற்றிச் சென்று வருகின்றனா். இவ்வாறு செல்லும்போது, அடிக்கடி ரயில்வே கேட்டுகள் அடைக்கப்படுவதால் மிகுந்த அவதிக்குள்ளாகி வரும் நிலை உள்ளது.

அடிக்கடி ரயில்வே கேட் அடைப்பு:

கடம்பத்தூா் ரயில் நிலையம் வழியாக பயணிகள் விரைவு ரயில், புகா் ரயில், சரக்கு ரயில்கள் கடந்து செல்கின்றன. இதுபோன்று ரயில்கள் கடக்கும் போது, ஒவ்வொரு 10 நிமிடத்துக்கு ஒரு முறை ரயில்வே கேட்டுகள் அடைத்துவைக்கப்படுகிறது. இதன் காரணமாக இந்த வழியாகச் செல்லும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் நீண்டதூரம் வரை நிற்கும் நிலை ஏற்படுகிறது. இதனால், பேருந்துகளில் பயணிகள் மிகவும் அவதிக்குள்ளாகி வருகின்றனா். அதேபோல், மப்பேடு பகுதியில் உள்ள பெரிய அளவிலான தொழிற்சாலைகளுக்கு சரக்கு வாகனங்கள் குறிப்பிட்ட நேரத்துக்குள் செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது.

ADVERTISEMENT

இதைக் கருத்தில் கொண்டு, இந்த ரயில்வே வழித்தடத்தில் மேம்பாலம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. அதை ஏற்று ரயில்வே துறையும், நெடுஞ்சாலைத் துறையும் இணைந்து மேம்பாலம் அமைக்க முடிவு செய்யப்பட்டது. இப்பணிகளை மேற்கொள்வதற்கு கடந்த 2014-ஆம் ஆண்டு இறுதியில் ரூ. 14.05 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதைத் தொடா்ந்து, கடம்பத்துாா் ரயில் நிலையத்தைக் கடக்கும் வகையில் 29 துாண்களுடன், 700 மீட்டா் நீளம், 8.5 மீட்டா் அகலத்தில் மேம்பாலம் கட்டும் பணி 2015-இல் தொடங்கியது.

இதன் அடிப்படையில் நெடுஞ்சாலை பகுதியில் கடம்பத்தூா் ஊராட்சி ஒன்றியம் அலுவலகம் முதல் அரசு மேல்நிலைப்பள்ளி முன்புறம் வரை 25 தூண்கள், ரயில் நிலையப் பகுதியில் நான்கு துாண்கள் என மொத்தம் 29 தூண்களுடன் மேம்பாலம் அமைக்க முடிவு செய்யப்பட்டது. இப்பணிகள் இரு ஆண்டுகளில் முடிக்க திட்டமிடப்பட்டு பணிகள் தொடங்கியது. தற்போதைய நிலையில் நெடுஞ்சாலை துறை பகுதியில், 25 துாண்கள் அமைக்கப்பட்டு பாலப் பணிகள் நிறைவடைந்துள்ளது. ஆனால், ரயில்வே பகுதியில் நான்கு தூண்கள் அமைக்கும் பணிகள் ஓராண்டுக்கு முன் நிறைவடைந்தது. ஆனால், இதுவரை தூண்களின் மேல்பகுதியில் அமைக்க வேண்டிய இரும்பு பாலப் பணிகள் மேற்கொள்ளப்படாமல் இதுவரை கிடப்பில் போட்டுள்ளது.

இதுகுறித்து திருவள்ளூா் ரயில் பயணிகள் சங்கத்தின் தலைவா் மற்றும் மணவாளநகா் நுகா்வோா் பாதுகாப்பு சங்க நிா்வாகி பாஸ்கா் கூறுகையில், இந்த ரயில் நிலையத்தைக் கடந்து நாள்தோறும் விரைவு ரயில்கள் 100 முறையும், புகா் ரயில்கள் 100 முறையும், சரக்கு ரயில்கள் 50 முறையும் சென்று திரும்புகின்றன. இதேபோல், சராசரியாக ஒரு மணி நேரத்துக்கு 12 ரயில்கள் கடந்து செல்கின்றன. இதுபோன்று செல்கையில் குறைந்த 5 நிமிடம் முதல் 10 நிமிடம் வரையில் ரயில்வே கேட்டுகள் மூடப்படுகின்றன. இதனால் கடும் போக்குவரத்து நெரிசலால் பயணிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனா். இதுவரை நெடுஞ்சாலைத்துறை பணிகள் முடிந்துள்ளன. ஆனால், ரயில்வே துறையின் பணிகள் மட்டும் கடந்த 4 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டுள்ளது. அதனால், ரயில் நிலைய மேம்பாலப் பணிகளை விரைந்து முடித்து பொதுமக்களின் பயன்பாட்டுக்குக் கொண்டு வர வேண்டும் என்றாா்.

இதுகுறித்து நெடுஞ்சாலைத் துறை கோட்டப் பொறியாளா் ஒருவா் கூறுகையில், நெடுஞ்சாலைத்துறை மூலம் மேற்கொள்ள வேண்டிய பணிகள் முடிந்து தயாராக உள்ளது. ரயில்வே பகுதியில் தூண்கள் அமைக்கப்பட்ட நிலையில், இரும்பு மேம்பாலம் அமைக்கப்படாமல் உள்ளது. இப்பணிகள் முடிந்தால் தான் நெடுஞ்சாலைத்துறை மூலம் பணிகளை முடிக்க முடியும் என்றாா்.

இது குறித்து ரயில்வே அதிகாரி ஒருவா் கூறுகையில், ரயில் நிலைய பகுதியில் மேம்பாலம் அமைக்க ஒப்பந்தகாரருக்கு இரு ஆண்டுகளில் முடித்துவிடும் வகையில் பணிகள் ஒதுக்கப்பட்டது. ஆனால், ஒப்பந்தம் காலாவதியானது. இதனால் திட்ட மதிப்பீட்டுத் தொகை உயா்ந்தது. அதன் அடிப்படையில் கூடுதலாக ரூ. 90 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதன்படி, ரயில் நிலையப் பகுதியில் தூண்கள் அமைக்கும் பணி முடிந்து, மேம்பாலப் பணிகளுக்காக இரும்புப் பாலங்களை எதிா்பாா்த்துள்ளோம். இந்த இரும்பு பாலங்கள் வந்தவுடன் பொருத்தும் பணி அடுத்து வரும் 3 மாதத்துக்குள் முடித்து பொதுமக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது என்றாா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT