திருவள்ளூர்

"வேளாண் கருவிகளை சாகுபடிக்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும்'

30th Aug 2019 07:36 AM

ADVERTISEMENT

கூட்டுப் பண்ணையம் மூலம் உருவாக்கப்பட்டுள்ள உழவர் உற்பத்தியாளர் குழுக்களுக்கு வழங்கப்பட்டுள்ள விவசாய வேளாண்மை கருவிகளை சாகுபடி உற்பத்தியை அதிகரிப்பதற்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என விவசாயிகளுக்கு ஆட்சியர் மகேஸ்வரி ரவிகுமார் ஆலோசனை வழங்கினார். 
திருவள்ளூர் அருகே எல்லாபுரம் ஊராட்சி ஒன்றியத்தைச் சேர்ந்த வடமதுரை கிராமத்தில் கூட்டுப் பண்ணையத் திட்டத்தில் உருவாக்கப்பட்டுள்ள உழவர் உற்பத்தியாளர் குழுக்களுடனான கலந்தாய்வுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு, ஆட்சியர் மகேஸ்வரி ரவிகுமார் தலைமை வகித்தார். அதைத் தொடர்ந்து அவர்களிடம் குறைகளைக் கேட்டறிந்தார். 
பின்னர் ஆட்சியர் பேசியது: திருவள்ளூர் மாவட்ட வேளாண்மைத் துறை சார்பில் விவசாயிகள் சாகுபடியை பெருக்கும் நோக்கில், பல்வேறு வகையான நலத்திட்ட உதவிகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அதேபோல், இத்துறை சார்பில் கூட்டுப் பண்ணையத் திட்டம் மூலம் 44 உழவர் உற்பத்தியாளர் குழுக்கள் உருவாக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன. இதில் ஒவ்வொரு குழுவிலும்  100 விவசாயிகள் உறுப்பினர்களாக உள்ளனர்.  இக்குழுக்களில் உள்ள விவசாயிகள் பயன்பெறும் நோக்கில், ரூ. 5 லட்சம் முழு மானியத்தில் வைக்கோல் சுருட்டும் இயந்திரம், களைஎடுப்பு இயந்திரம், டிராக்டர் ஆகியவை வழங்கப்பட்டுள்ளன. இதுபோன்ற வேளாண் கருவிகளை  உழவர் உற்பத்தியாளர் குழுக்கள் விவசாயத்திற்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அதேபோல், இடுபொருள்கள் உரங்களுக்கான மானியமும் குழுக்களுக்கு அதிகளவில் வழங்கப்படுகிறது. இதுபோன்ற சலுகைகளையும், மானியத்தையும் பயன்படுத்தி சாகுபடியை அதிகரித்து, வருவாயை பெருக்கிக் கொள்ள வேண்டும்.  இந்த வாய்ப்புகளை விவசாயிகள் அனைவரும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார். அதைத் தொடர்ந்து உழவர் உற்பத்தியாளர் குழுவில் உறுப்பினராக உள்ள பெண்களுக்கு விவசாய அடையாள அட்டைகளை அவர் வழங்கினார். 
இதில், வேளாண்மைத் துறை இணை இயக்குநர் பாண்டியன், ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (விவசாயம்) பிரதாப் ராவ், வேளாண் துணை இயக்குநர் சுரேஷ், தோட்டக்கலைத் துறை துணை இயக்குநர் கருப்பசாமி, வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் உழவர் உற்பத்தியாளர் குழுக்களைச் சேர்ந்தோர் கலந்து கொண்டனர்.  
 

ADVERTISEMENT
ADVERTISEMENT