மக்கள் மருந்தகத்தில் கடந்த ஓராண்டில் மட்டும் ரூ. 315 கோடிக்கு மருந்துப் பொருள்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக மத்திய பெட்ரோலியம் மற்றும் உரத்துறை அமைச்சர் ஜி.வி.சதானந்த கெளடா தெரிவித்தார்.
மத்திய அரசின் பிரதான் மந்திரி பாரதிய ஜன்ஒளஷதி பரியோஜனா திட்டத்தின் கீழ், பிராந்திய மருந்தக பணியகம் இந்தியா சார்பில் குறைந்த விலையில் மருந்துகளை விற்கும் மருந்தகம் தொடங்கி நாடு முழுவதும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த மருந்தகங்களுக்கு மருந்துகளை அனுப்பும் வகையில் கும்மிடிப்பூண்டியை அடுத்த குருத்தானமேடு பகுதியில் கிடங்கு அமைக்கப்பட்டு வியாழக்கிழமை திறப்பு விழா நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு, திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிகுமார் தலைமை வகித்தார். கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ கே.எஸ்.விஜயகுமார் முன்னிலை வகித்தார். கிடங்கின் தலைமைச் செயல் அலுவலர் சச்சின் சிங் வரவேற்றார். விழாவில், கிடங்கை திறந்துவைத்து, மத்திய பெட்ரோலியம் மற்றும் உரத்துறை அமைச்சர் சதானந்த கெளடா பேசியது:
இந்தியாவில் இத்திட்டத்தின் கீழ், 5,500 மருந்தகங்கள் இயங்கி வரும் நிலையில், தமிழகத்திலும் 500-க்கும் மேற்பட்ட மோடி மருந்தகங்கள் இயங்கி வருகின்றன. இவற்றில் 900 வகையான மருந்துகளும், 154 மருத்துவ உபகரணங்களும் 50-90 சதவீத விலை குறைப்பில் விற்கப்படுகின்றன. அதுவும் இந்த மருந்துகள் அதிக விலையிலான தனியார் நிறுவன தயாரிப்புகளின் தரத்தை போல தயாரிக்கப்பட்டு, குறைந்த விலையில் விற்கப்படுகின்றன. 2018-2019-ஆம் ஆண்டில் மட்டும் ரூ. 2,000 கோடி மதிப்பிலான மருந்துகள் ரூ. 315.70 கோடிக்கு விற்கப்பட்டுள்ளன. இந்த மருந்தகங்கள் அனைத்து குக்கிராமங்களிலும் நிறுவப்படும், இதை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார்.
விழா முடிவில் தென்னிந்திய அளவில் மக்கள் மருந்தகங்களை சிறப்பாக நடத்தி வருபவர்களுக்கு மத்திய அமைச்சர் சதானந்த கெளடா பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார். மேலும், கர்நாடக மாநிலத்தில் மழை வெள்ளத்தால் பாதிப்படைந்தவர்களுக்காக மருந்துப் பொருள்கள் அடங்கிய வாகனத்தை மத்திய அமைச்சர் சதானந்த கௌடா கொடியசைத்து வழி அனுப்பி வைத்தார்.
விழாவில், தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்தரராஜன், பொன்னேரி கோட்டாட்சியர் நந்தகுமார், கும்மிடிப்பூண்டி வட்டாட்சியர் சுரேஷ்பாபு, வட்டார வளர்ச்சி அலுவலர் அருள் உள்ளிட்ட அரசு அலுவலர்களும், அதிமுக நிர்வாகிகளும் பங்கேற்றனர்.