பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நல விடுதிகளில் காலியாக உள்ள சமையலர் பணிக்கு செப்டம்பர் 20-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் மகேஸ்வரி ரவிகுமார் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள செய்திக் குறிப்பு:
திருவள்ளூர் மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலத் துறை சார்பில் மாணவ, மாணவிகள் பயன்பெறும் நோக்கில் பள்ளி, கல்லூரி விடுதிகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த விடுதிகளில் சமையலர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இப்பணிக்கு புதிய ஊதிய அடிப்படையில் மாதந்தோறும் ரூ. 15,700 மற்றும் இதர படிகள் என்ற அடிப்படை நிரப்பப்பட உள்ளன.
இதில், பொதுப் போட்டி (முன்னுரிமையற்றவர்) - 3 இல் முன்னாள் ராணுவத்தினர், தமிழ்வழி மூலம் கல்வி கற்றவர்-1, பிற்படுத்தப்பட்டோர் (முஸ்லிம்கள் தவிர) (முன்னுரிமையற்றவர்)-2, அருந்ததியினர் (முன்னுரிமையற்றவர்)-1, மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் (முன்னுரிமை பெற்றவர்) - 1, மிகவும் பிற்படுத்தப்பட்டோர் சீர்மரபினர் (முன்னுரிமையற்றவர்) - 2 மற்றும் 7 பெண் சமையலர்கள் பணியிடங்களுக்கு பிற்படுத்தப்பட்டோர் (முஸ்லிம்கள் தவிர) முன்னுரிமையற்றவர்) - 3, இதில் 1 பணியிடம் ஆதரவற்ற விதவை, மிக பிற்படுத்தப்பட்டோர் சீர்மரபினர் (முன்னுரிமையற்றவர்) - 1, பொதுப் போட்டி (முன்னுரிமையற்றவர்) - 2, அட்டவணை வகுப்பினர் ஆதரவற்ற விதவை (முன்னுரிமையற்றவர்) - 1 என இனச்சுழற்சியின் அடிப்படையில் சமையலர் பணியிடங்கள் நேர்காணல் மூலம் நிரப்பப்பட உள்ளன.
இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் தமிழில் எழுத படிக்கவும், சைவ மற்றும் அசைவ உணவு சமைக்கத் தெரிந்திருப்பதும் அவசியம். மேலும், வயது வரம்பு 1.7.2019-இல் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் 18 முதல் 35 வயதுக்குள்ளும், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் (முஸ்லிம்), மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபினருக்கு 18 முதல் 32 வயதுக்குள்ளும், இதர பிரிவினருக்கு 18 முதல் 30 வயதுக்குள்ளும் இருக்க வேண்டும். இதில், கல்வித் தகுதி அடிப்படையில் அரசு விதிமுறைப்படி அனைத்து இனத்தைச் சேர்ந்த ஆதரவற்ற விதவைகளுக்கு வயது வரம்பு கிடையாது.
இதற்கான விண்ணப்பங்களை மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலத் துறை அலுவலகத்தில் இலவசமாக பெற்றுக் கொள்ளலாம். விண்ணப்பிக்க விரும்புவோர் விண்ணப்பப் படிவத்தில் புகைப்படம் மற்றும் முழு விவரங்களை பூர்த்தி செய்து அதற்கான ஆவணங்களை இணைத்து மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம், மாவட்ட ஆட்சியர் வளாகம், திருவள்ளுர்- 602001 என்ற முகவரிக்கு செப்டம்பர் 20-ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும்.
அதற்குப் பின்னர் வரும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது. நேர்காணல் விவரம் விண்ணப்பதாரர்களுக்கு தனியே தெரிவிக்கப்படும். மேலும் விவரங்களுக்கு மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத் துறை அலுவலகத்தை அணுகலாம்.