திருவள்ளூர் மாவட்டம் திருமழிசை - ஊத்துக்கோட்டை நெடுஞ்சாலைகளில் தனியார் பங்களிப்புடன் 3 ஆயிரம் மரக்கன்றுகள் நடவு செய்யும் திட்டத்தை ஆட்சியர் மகேஸ்வரி ரவிகுமார் செவ்வாய்க்கிழமை தொடக்கி வைத்தார்.
மணவாள நகர் பகுதியில் மாவட்ட நிர்வாகம், நெடுஞ்சாலைத் துறை மற்றும் தனியார் நிறுவனம் இணைந்து மரக்கன்றுகள் நடும் திட்டத்தின் தொடக்க விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இத்திட்டத்தைத் தொடக்கி வைத்து, ஆட்சியர் மகேஸ்வரி ரவிகுமார் பேசியது: நெடுஞ்சாலைத் துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்புத் துறையின் திருவள்ளுர் கோட்டத்துக்கு உள்ளபட்ட மாநில சாலைகள் 548 கி.மீ., முக்கிய மாவட்டச் சாலைகள் 316 கி.மீ, இதர மாவட்ட சாலைகள் 880 கி.மீ. என மொத்தம் 1, 745 கி.மீ. நீளம் உள்ளது. இச்சாலையின் மத்தியில் நெடுஞ்சாலைத் துறை சார்பில் 12 ஆயிரம் மரக்கன்றுகள் நடப்பட உள்ளன. அந்த வகையில் இதுவரை 3,300 மரக்கன்றுகள் நடப்பட்டு, தொடர்ந்து பராமரிக்கப்பட்டு வருகின்றன.
தனியார் நிறுவனம் மூலம் திருமழிசை - ஊத்துக்கோட்டை சாலையில் புதுசத்திரம் கிராமம் முதல் மணவாள நகர் கிராமம் வரையில் 3 ஆயிரம் மரக்கன்றுகள் நடவு செய்யப்பட உள்ளன. அதோடு மட்டுமல்லாமல் தனியார் நிறுவனம் மூலம் தொடர்ந்து பராமரிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார். வட்டாட்சியர் சீனிவாசன், நெடுஞ்சாலை துறை கோட்டப் பொறியாளர் ஜி.தட்சிணாமூர்த்தி, உதவிக் கோட்டப் பொறியாளர்கள் ஆர்.இன்பநாதன், பாலசந்தர், உதவிப் பொறியாளர் ராஜ்கமல் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.