மேல் திருத்தணியை அடுத்த முருகூர் கிராமத்தில் குடிநீர் கேட்டு காலிக் குடங்களுடன் பொதுமக்கள் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.
திருத்தணி நகராட்சியில் உள்ளது முருகூர் கிராமம். இக்கிராமத்தில் தேவையான குடிநீர் நகராட்சி மூலம் வழங்கப்பட்டு வந்தது. தற்போது அப்பகுதிக்கு போதிய அளவுக்கு தண்ணீர் பற்றாக்குறை நிலவி வருவதால் டிராக்டர் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டது. இருப்பினும் தற்போது விநியோகம் செய்யும் குடிநீர் போதுமானதாக இல்லை எனக்கூறி, திருத்தணி - சித்தூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள முருகூர் பேருந்து நிலையம் அருகே 50-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் காலிக் குடங்களுடன் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்து வந்த திருத்தணி நகராட்சி ஆணையர் ராஜலட்சுமி, திருத்தணி காவல் ஆய்வாளர் முருகன், உதவி ஆய்வாளர் சரவணன், கிராம நிர்வாக அலுவலர் யாசர் ஆகியோர் சம்பவ இடத்துக்குச் சென்று, பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். உடனடியாக டிராக்டர் மூலம் குடிநீர் வழங்கப்படும் எனக் கூறியதையடுத்து, அனைவரும் கலைந்து சென்றனர்.
இதனால் அப்பகுதியில் சுமார் அரைமணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கும்மிடிப்பூண்டியில்..
கும்மிடிப்பூண்டி அருகே குடிநீர் கோரி 3 பகுதிகளைச் சேர்ந்த பெண்கள் காலிக் குடங்களுடன் திங்கள்கிழமை வட்டார வளர்ச்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
கும்மிடிப்பூண்டியை அடுத்த எளாவூர் ஊராட்சிக்கு உள்பட்ட ஆலப்பிள்ளை கண்டிகை, ஆலமரத்து காலனி, மதுக்கால் கிராமம் ஆகிய பகுதிகளில் கடந்த இரண்டு ஆண்டுகளாக தண்ணீர் பிரச்னை நிலவி வருவதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து அதிகாரிகளிடம் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லையாம்.
அவசரத் தேவைக்காக இவர்கள் 2 கி.மீ. தொலைவில் உள்ள மெதிப்பாளையம் கிராமத்துக்குச் சென்று, தண்ணீர் கொண்டு வர வேண்டி உள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதனால் தங்கள் பகுதியில் தண்ணீர் பிரச்னையைத் தீர்க்க வலியுறுத்தியும், தங்கள் பகுதியில் புதிய ஆழ்துளைக் கிணறு அமைத்துத் தரக் கோரியும் இப்பகுதி மக்கள் திங்கள்கிழமை காலிக் குடங்களுடன் கும்மிடிப்பூண்டி வட்டார வளர்ச்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். வட்டார வளர்ச்சி அலுவலர் சாமிநாதன் அதிகாரிகளை அழைத்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.
இதைத்தொடர்ந்து ஆர்ப்பாட்டம் நடத்திய பெண்கள் கலைந்து சென்றனர்.