திருவள்ளூர்

பணிபுரியும் மகளிருக்கு ரூ.1 கோடியில் அரசு விடுதி: ஆட்சியர்

23rd Aug 2019 07:36 AM

ADVERTISEMENT

திருவள்ளூர் அருகே பணிபுரிந்து வரும் மகளிர் தங்கும் வகையில் நவீன வசதியுடன் கூடிய அரசு விடுதி ரூ. 1 கோடியில் அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக ஆட்சியர் மகேஸ்வரி ரவிகுமார் தெரிவித்தார். 
திருவள்ளூர் அருகே சிறுவானூர் ஊராட்சியில் சமூக நலம் மற்றும் சத்துணவு திட்டம் சார்பில் பணிபுரியும் மகளிருக்கான அரசு விடுதி அனைத்து நவீன வசதியுடன் அமைப்பதற்கு ரூ. 1 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் இந்த விடுதி அமைப்பதற்கான பூமிபூஜை வியாழக்கிழமை நடைபெற்றது. ஆட்சியர் மகேஸ்வரி ரவிகுமார் தலைமை வகித்து அடிக்கல் நாட்டினார்.
அதைத் தொடர்ந்து அவர் கூறியது: 
பெண்கள்  கிராமங்களில் இருந்து நகரத்துக்கு வந்து தனியார் விடுதியில் தங்கிப் பணியாற்றுகின்றனர். இதுபோன்று தங்குவோர் தனியார் விடுதிகளில் கூடுதலாக வாடகைக் கட்டணம் செலுத்தி தங்க வேண்டிய சூழ்நிலை இருந்து வந்தது. இதைக் கருத்தில்கொண்டு, பணிபுரிந்து வரும் பெண்கள் பயன்பெறும் வகையில் விடுதி அமைக்கப்படும் என கடந்த 2013-இல் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவால் அறிவிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் திருவள்ளூர் நகரில் கடந்த 3 ஆண்டுகளாக வாடகைக் கட்டட வளாகத்தில் இந்த விடுதி செயல்பட்டு வருகிறது. இதில், 40 பேர் தங்கி பணியாற்றி  வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போதைய நிலையில் அனைத்து நவீன வசதியுடன் கூடிய அரசு விடுதி கட்டடம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 
அதன்பேரில், திருவள்ளூர் அருகே சிறுவானூர் ஊராட்சியில் சமூக நலம் மற்றும் சத்துணவுத் திட்டத்துறை சார்பில் விடுதி அமைப்பதற்கு இடம் தேர்வு செய்யப்பட்டது. இதற்காக 50 பேர் தங்கும் வகையில் நவீன கட்டடம் அமைப்பதற்கு ரூ. 1.10 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த நிதியில் பணிபுரியும் மகளிருக்கு நவீன வசதியுடன் அரசு விடுதி அமைப்பதற்கான பூமி பூஜை நடத்தப்பட்டுள்ளது. அதனால், 8 மாதங்களுக்குள் முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த விடுதியில் பணிபுரியும் மகளிர் தங்குவதற்கு மாதந்தோறும் ரூ. 200 வாடகையாக வசூலிக்கப்படும். அதைத் தொடர்ந்து உணவுக்கான கட்டணத்தை தங்கியுள்ளோர் அனைவரும் சமமாகப் பகிர்ந்து கொள்ள வேண்டும் எஎன்றார். 
  நிகழ்ச்சியில், மாவட்ட சமூக நல அலுவலர் ச.மீனா, பொதுப்பணித் துறை செயற்பொறியாளர் (கட்டடம் (ம) பராமரிப்பு) ஸ்ரீதர், வட்டாட்சியர் சீனிவாசன் மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 
 

ADVERTISEMENT
ADVERTISEMENT