திருவள்ளூர்

திருத்தணியில் ஓய்வு பெற்ற ஆசிரியர் பெயரில் ரூ. 6 கோடி சொத்து மோசடி

23rd Aug 2019 04:18 AM

ADVERTISEMENT


திருத்தணியில் ஓய்வுபெற்ற ஆசிரியர் பெயரில் ரூ.6 கோடி சொத்து மோசடி செய்த உறவுக்கார பெண் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி முன்னாள் மாணவர்கள் மாவட்ட எஸ்.பியிடம் புதன்கிழமை புகார் மனு அளித்தனர். 
  திருவள்ளூர் மாவட்டம், திருத்தணியைச் சேர்ந்தவர் ஈஸ்வரன்(80). ஓய்வு பெற்ற ஆசிரியர். மனைவி இந்துமதி. இவரின் தந்தை தனது சொத்தை இந்துமதி மற்றும் அவரது சகோதரி சுஜாதா ஆகியோர் பெயரில் உயில் எழுதி வைத்தாராம். அதனை அனுபவித்து வந்த நிலையில் அந்த சொத்தை இந்துமதியின் கணவர் ஈஸ்வரன் பெயரில் விற்க அனுமதி வழங்கும் பத்திரம் (பவர் ) எழுதிக் கொடுத்தனர். 
இந்த நிலையில் யோகலட்சுமி என்ற ஈஸ்வரனின் உறவுக்காரப் பெண் இவரை அணுகி, இந்த நிலத்தை தந்தால் அதில் அடுக்குமாடி கட்டடம் அமைத்து விற்பனை செய்தால் அதிக பணம் கிடைக்கும் என ஆசை வார்த்தை கூறினாராம். இதை நம்பிய ஈஸ்வரன் தன் பெயரில் இருந்த அனுமதியை உறவுக்கார பெண் பெயருக்கு மாற்றியும் உள்ளார்.
   எனவே விற்பதற்கான அனுமதியை திருப்பித் தராமலும், பணம் தராமலும் ஏமாற்றியதை அறிந்த ஈஸ்வரன், யோகலட்சுமியிடம் கேட்டதற்கு பணம் தர மறுத்ததுடன் கொலை மிரட்டலும் விடுத்தாராம். இதனால் மன உளைச்சலுக்கு ஆளான ஈஸ்வரன் திருத்தணி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. அதையடுத்து கடந்த ஜூலை 15-ஆம் தேதி திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்து தர்னா போராட்டத்தில் ஈடுபட்டு நிலத்தை மீட்டுத் தரவும் கோரிக்கை விடுத்தார். இது குறித்து செய்தியை அறிந்த முன்னாள் மாணவர்கள் 30 ஆண்டுகளுக்கு முன்பு பயின்ற மாணவர்களை தொடர்பு கொண்டு தகவலை தெரிவித்தனர். 
அதன் பேரில் 30-க்கும் மேற்பட்ட மாணவர்கள் திரண்டு திருவள்ளூர் எஸ்.பி. அலுவலகத்திற்கு வந்து புதன்கிழமை புகார் மனு அளித்தனர். ஏற்கனவே கொடுத்த புகார் மற்றும் தற்போது முன்னாள் மாணவர்கள் கொடுத்த புகார் மீது கட்டாயம் நடவடிக்கை எடுப்பதாகவும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்தன் உறுதி அளித்தார். அதைத் தொடர்ந்து ஆசிரியர் மற்றும் முன்னாள் மாணவர்கள் ஆகியோர் கலைந்து சென்றனர். 

ADVERTISEMENT
ADVERTISEMENT