திருவள்ளூர்

நெகிழிப் பொருள்களைத் தவிர்க்க வேண்டும்: கிராம சபைக் கூட்டத்தில் ஆட்சியர் வலியுறுத்தல்

16th Aug 2019 04:26 AM

ADVERTISEMENT


நெகிழிப் பொருள்களை முற்றிலும் தவிர்க்க வேண்டும் என தரணிவராகபுரம் கிராமத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற சிறப்பு கிராம சபைக்கூட்டத்தில் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிகுமார் வலியுறுத்தினார். 
சுதந்திர தின விழாவையொட்டி, திருத்தணியை அடுத்த தரணிவராகபுரம்  ஊராட்சிக்கு உள்பட்ட ராகவேந்திரா நகரில் உள்ள அரசுப் பள்ளி வளாகத்தில் சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு, மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிகுமார் தலைமை வகித்தார்.
ஊராட்சிகள் உதவி இயக்குநர் ஸ்ரீதரன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் ஊராட்சி வரவு செலவு வாசிக்கப்பட்டது.
மேலும், ஊராட்சியில் செயல்படுத்திய திட்டங்கள் குறித்தும், செயல்படுத்த வேண்டிய திட்டங்கள் குறித்தும் பொதுமக்களிடையே விவாதிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, ஆட்சியர் மகேஸ்வரி ரவிகுமார் பேசியது: 
திருவள்ளூர் மாவட்டத்தில் பெண் குழந்தைகளின் பிறப்பு சதவீதம் குறைந்துள்ளது. இதற்குக் காரணம் பெரும்பாலான தாய்மார்கள் இப்பகுதியில் பெண் குழந்தைகளை விரும்பாமல் மறுத்து கருக்கலைப்பு செய்வதால் நடைபெறுகிறது. இது இயற்கை நீதிக்கு எதிரானது. இதை மாற்ற வேண்டும், மேலும் இப்பகுதியில் பிறக்கும் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து குறைபாடு உள்ளது. அதைப் போக்க கர்ப்பிணிகள் ஊட்டச்சத்தான உணவுகளை குழந்தைகளுக்குச் செய்ய வேண்டும். பெண் குழந்தைகளை கல்வி கற்கச் செய்ய வேண்டும். சுகாதாரமாக வாழ்வதற்கு கழிப்பறையைப் பயன்படுத்த வேண்டும். அதற்கு அனைத்து வீடுகளிலும் கழிப்பறைகளை ஏற்படுத்த வேண்டும், ஏரி, குளங்களை வரவு கால்வாய்களை தூர்வாரி தண்ணீரை சேமிக்க வேண்டும், நெகிழிப் பொருள்களை அறவே பயன்படுத்தக் கூடாது, அதற்கு மாற்றாக நம் முதியோர்கள் பயன்படுத்திய மஞ்சள் துணிப் பைகளை பயன்படுத்த முன்வரவேண்டும். இதனால் நெகிழியைத் தவிர்க்கலாம். சுற்றுச்சூழல் பாதிப்பிலிருந்தும் பாதுகாக்க முடியும், அதிகளவில் மரக்கன்றுகளை நட்டு அதை வளர்க்க வேண்டும் என்றார்.
  நிகழ்ச்சியில், திருத்தணி கோட்டாட்சியர் நாராயணன், வட்டாட்சியர் செங்கலா, ஒன்றிய ஆணையர்கள் லதா, கலைச்செல்வி, நகராட்சி ஆணையர் ராஜலட்சுமி, வட்டார மருத்துவ அலுவலர் தினேஷ், வட்டாரக் கல்வி அலுவலர் பாபு உள்பட பல்வேறு துறை அதிகாரிகள் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
மாதவரத்தில்...
பாடியநல்லூர் ஊராட்சியில் கிராம சபைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. 
அங்காளீஸ்வரி கோயில் மண்டபத்தில் நடைபெற்ற கூட்டத்துக்கு, பாடியநல்லூர் ஊராட்சி செயலர் கே.ஆர்.சுரேஷ் தலைமை வகித்தார். திருவள்ளூர் எம்.பி. ஜெயக்குமார் கலந்துகொண்டு, மக்களின் குறைகளைக் கேட்டறிந்தார். 
முன்னாள் மாமன்ற உறுப்பினர்கள் துளசி, என்.வி.சரவணன், கோயில் தலைவர் மனோகரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 
பாடியநல்லூர் ஊராட்சியில் நிலத்தடிநீர் குறைந்து குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது குறித்தும், ஊராட்சியின் வரவு, செலவு குறித்தும் விவாதிக்கப்பட்டது.
ஊத்துக்கோட்டையில்...
அகரம் ஊராட்சி சார்பில் பாளையத்தம்மன் கோயில் வளாகம் அருகே வியாழக்கிழமை கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது.
சோழவரம் ஒன்றிய அலுவலர் சத்தியவாணி தலைமை வகித்தார். கிராம நிர்வாக அலுவலர்கள் மணி, பாலாஜி, பாரதி, ஊராட்சி செயலர் பரசுராமன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 
எல்லாபுரம் ஒன்றியம் தாமரைபாக்கம் அருகே வெங்கல் ஊராட்சி மன்ற கட்டடத்தில் கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது. இதில், ஊராட்சி செயலர் உமாநாத் தலைமை வகித்தார். கிராம நிர்வாக அலுவலர்கள், மகளிர் சுய உதவிக் குழுவினர் கலந்து கொண்டனர்.
கும்மிடிப்பூண்டியில்...
கும்மிடிப்பூண்டி ஒன்றியத்தில் உள்ள 61 ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது.
கும்மிடிப்பூண்டியை அடுத்த கவரப்பேட்டையில் நடைபெற்ற கீழ்முதலம்பேடு ஊராட்சி கிராம சபைக் கூட்டத்துக்கு ஊராட்சி செயலர் சாமுவேல் தலைமை வகித்தார். கூட்டத்தில் ஊராட்சியில் சாலை சீரமைத்தல், மரம் நடுதல் குறித்து பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்.
புதுகும்மிடிப்பூண்டியில் ஊராட்சி செயலர் சிட்டிபாபு தலைமையில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் அப்பகுதியில் தொழிற்சாலைகள் ஏற்படுத்தும் பாதிப்புகளை குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும், வண்ணான் ஏரியைத் தூர் வார வேண்டும், அரசு தொடக்கப் பள்ளிக்கு 3 வகுப்பறைக் கட்டடம் கட்ட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டது.
 அதேபோல சிறுபுழல்பேட்டையில் ஊராட்சி செயலர் மூர்த்தி தலைமையிலும், சித்தராஜகண்டிகையில்  ஊராட்சி செயலர் கர்ணன் தலைமையிலும், பெத்திக்குப்பத்தில் ஊராட்சி செயலர் செல்வம் தலைமையிலும், பெரிய ஓபுளாபுரத்தில் ஊராட்சி செயலர் நாராயணன் தலைமையிலும், புதுவாயலில் ஊராட்சி செயலர் பாண்டியன் தலைமையிலும், ஆரம்பாக்கத்தில் ஊராட்சி செயலர் முரளி தலைமையிலும், எகுமதுரையில் ஊராட்சி செயலர் சோபன்பாபு தலைமையிலும், ரெட்டம்பேட்டில் ஊராட்சி செயலர் குருமூர்த்தி தலைமையிலும் கிராம சபைக் கூட்டங்கள் நடைபெற்றன.
கும்மிடிப்பூண்டியை அடுத்த பூவலையில் அப்பகுதி மக்களின் நீண்ட கால பிரச்னையான சுடுகாட்டுப் பாதை  வசதியை அரசு செய்து தராததைக் கண்டித்து பொதுமக்கள் கிராம சபைக் கூட்டத்தை புறக்கணித்தனர்.
அதேபோல், கும்மிடிப்பூண்டியை அடுத்த ஏடூர் ஊராட்சியில் கணக்கு வழக்கு சரியில்லை, நிரந்தர ஊராட்சி செயலரை பணியமர்த்த வேண்டும் என வலியுறுத்தி பொதுமக்கள் கிராம சபைக் கூட்டத்தை புறக்கணித்து, ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
திருவள்ளூரில்...
திருவள்ளூர் அருகே திருப்பாச்சூர் கிராமத்தில் உள்ள சமுதாயக் கூடத்தில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்துக்கு, மாவட்ட வருவாய் அலுவலர் முத்துசாமி தலைமை வகித்தார். பின்னர், அக்கிராமத்தில் நடந்து வரும் வளர்ச்சிப் பணிகள் குறித்து  எடுத்துரைக்கப்பட்டது. 
  கடம்பத்தூர் ஊராட்சி ஒன்றியத்தைச் சேர்ந்த வெங்கத்தூர் ஊராட்சி கிராம சபைக் கூட்டம் அக்கிராம அலுவலக வளாகத்தில் நடைபெற்றது. கூட்டத்தில் பற்றாளராக கடம்பத்தூர் ஊராட்சி ஒன்றிய கணக்காளர் காயத்ரி கலந்து கொண்டார். 
இதில் கிராம ஊராட்சியில் டெங்கு பரவாமல் தடுக்கும் வகையில் நாள்தோறும் குப்பைகளை அகற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

ADVERTISEMENT
ADVERTISEMENT