திருவள்ளூரில் மணல் கடத்தியதாக 2 லாரிகளை போலீஸார் பறிமுதல் செய்தனர்.
திருவள்ளூர் பகுதியில் இரவு நேரங்களில் வாகனங்களில் மணல் கடத்திச் செல்வதாக மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அரவிந்தனுக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. அதன்அடிப்படையில், சம்பந்தப்பட்ட போலீஸார் திருவள்ளூர்-பூந்தமல்லி சாலையில் சனிக்கிழமை அதிகாலை திடீர் ரோந்து சென்றனர். அப்போது, அந்த வழியாக எதிரே லாரியில் வந்தவர்கள் போலீஸாரின் வாகனத்தைப் பார்த்ததும் நிறுத்தி விட்டு தப்பியோடினர். இதையடுத்து, லாரியை சோதனையிட்டதில், மணல் இருந்தது தெரியவந்தது.
அரண்வாயல் குப்பம் கூவம் ஆறு பகுதியில் போலீஸார் வாகனத்தை பார்த்ததும் லாரியை நிறுத்திவிட்டு சிலர் தப்பியோடினர். அந்த வாகனத்திலும் மணல் இருந்தது. திருவள்ளூர் நகர போலீஸார் 2 லாரிகளையும் பறிமுதல் செய்தனர்.
திருத்தணியில்...
திருவாலங்காடு உதவி ஆய்வாளர் சந்திரசேகரன் மற்றும் போலீஸார் கொற்றலை ஆற்றில் சோதனை செய்தபோது, ஆற்றில் மணல் ஏற்றப்பட்ட 2 மாட்டு வண்டிகளை பறிமுதல் செய்தனர்.
இதில், தொழுதாவூர் பகுதியைச் சேர்ந்த சந்திரன் (60) என்பவரை போலீஸார் கைது செய்தனர். அதே போல், கனகம்மாசத்திரத்தை அடுத்த ராமலிங்காபுரம் கொற்றலை ஆற்றில் இருந்து மணல் அள்ளிக் கொண்டிருந்த நான்கு மாட்டு வண்டிகளை பறக்கும் படை போலீஸார் பறிமுதல் செய்தனர்.