நிலக்கடலை அறுவடைக்கு ஆள் பற்றாக்குறையால் விவசாயிகள் அவதி

நிலக்கடலை அறுவடைக்கு ஆள் பற்றாக்குறையால் விவசாயிகள் அவதி

திருவள்ளூர் பகுதியில் நன்றாக விளைந்த நிலையில் உள்ள நிலக்கடலையை அறுவடை செய்வதற்கு போதுமான ஆட்கள் கிடைக்காததால் மிகவும் அவதிக்குள்ளாகி வருவதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

திருவள்ளூர் பகுதியில் நன்றாக விளைந்த நிலையில் உள்ள நிலக்கடலையை அறுவடை செய்வதற்கு போதுமான ஆட்கள் கிடைக்காததால் மிகவும் அவதிக்குள்ளாகி வருவதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
 திருவள்ளூர் மாவட்டத்தில் மொத்தம் 1.50 லட்சம் ஹெக்டேர் விளைநிலங்கள் உள்ளன. இதில் கிணறு, ஏரி பாசனம் மூலம் 1.42 லட்சம் ஹெக்டேர் பரப்பளவில் நெல், கரும்பு, மாம்பழம் உள்ளிட்ட பழவகைகள், மலர், எண்ணெய் வித்துப் பயிர்களான எள் மற்றும் நிலக்கடலை ஆகியவற்றை விவசாயிகள் பயிரிட்டு வருகின்றனர்.
 திருவள்ளூர், தண்ணீர்குளம், அயத்தூர், புலியூர், புலியூர் கண்டிகை, கோயம்பாக்கம், சிவன்வாயல், சிறுகளத்தூர், கசுவா, ஒதப்பை, குஞ்சலம், நெல்வாய், வெள்ளாத்துக்கோட்டை, பென்னனூர்பேட்டை, பூண்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மார்கழி மாத பட்டத்தில் 20 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் நிலக்கடலை சாகுபடியை விவசாயிகள் மேற்கொண்டு வருகின்றனர். எண்ணெய் வித்துப் பயிர்களில் முக்கிய இடத்தை வகிக்கும் நிலக் கடலையின் தேவை அதிகரித்துள்ளது.
 நிலக்கடலையில் இருந்து எண்ணெய் எடுக்கப்படுவதோடு, பிண்ணாக்கும் தயாரிக்கப்படுகிறது. நிலக்கடலைச் செடியின் இலைகள் கால்நடைகளுக்கு சிறந்த தீவனமாகப் பயன்படுகின்றன. இப்பயிரை விளைவிப்பதற்கு பராமரிப்புச் செலவு கூடுதலாக இருந்தாலும், உற்பத்தி செய்வதற்கு ஏற்ப நிலக்கடலைக்கு சந்தையில் நல்ல விலை கிடைக்கிறது. மேலும், உடனே விற்றுப் பணமாக்க முடியும் என்பதால் விவசாயிகளின் விருப்பப் பயிராக நிலக்கடலை விளங்குகிறது.
 பருவ காலங்களில் பெய்யும் மழை நீரை ஆதாரமாகக் கொண்டே நிலக்கடலை விளைவிக்கப்படுகிறது. மானாவாரி நிலங்களிலும், கிணற்று நீர் மற்றும் ஆழ்குழாய் நீர் மூலம் உழவு செய்து, நிலக்கடலை விதைப்பு செய்கின்றனர். இது 3 மாதங்களில் விளையும் பயிர் என்பதால் ஓர் ஏக்கரில் பயிர் செய்வதற்கு களை எடுத்தல், இடுபொருள்கள், தெளிப்பு மருந்து என ரூ.20 ஆயிரம் முதல் ரூ.22 ஆயிரம் வரை செலவாகும். தற்போதைய நிலையில் போதுமான பருவமழை பெய்யாத நிலையில் கோடை வெப்பமும் அதிகரித்துள்ளது. இதுபோன்ற காரணங்களால் நிலக்கடலை செடி வாடி வதங்கியும், கருகியும் காணப்படுகிறது.
 எனினும், நன்றாக விளைந்த பகுதிகளில் சாகுபடி செய்யப்பட்ட நிலக்கடலை பயிர் அறுவடை நடைபெற்று வருகிறது. நீர் ஆதாரம் உள்ள விளைநிலங்களில் ஓர் ஏக்கரில் நன்றாக விளைந்தால் 35 முதல் 40 மூட்டைகள் வரை நிலக்கடலை கிடைக்கும். சுமாராக விளைந்தால் 30 மூட்டைகள் வரை மகசூல் கிடைக்கும். தற்போது, பச்சைக் கடலையாகவே ஒரு மூட்டை ரூ.2 ஆயிரத்திற்கும், காய்ந்த கடலை ஒரு மூட்டை ரூ.1800-க்கும் விற்பனையாகிறது. நல்ல விலை கிடைக்கும் போதே அறுவடை செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் விவசாய வேலைக்கு போதுமான ஆட்கள் கிடைக்காததால் மிகவும் அவதிக்குள்ளாகி வருவதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
 இதுகுறித்து புலியூர் கண்டிகையைச் சேர்ந்த விவசாயி ரங்கன் கூறியது:
 நிலக்கடலை பயிர் 90 நாள்களைக் கடந்த நிலையில் உள்ளதால் அறுவடை செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. அறுவடை செய்யா விட்டால் நிலக்கடலை காய்ந்து நிலப் பகுதியில் சிக்கி விடும். இலை தழைகளும் வீணாகும்.
 தற்போது, மக்களவைத் தேர்தலை முன்னிட்டு உள்ளூர் கிராமங்களைச் சேர்ந்தவர்களை தேர்தல் பிரசாரக் கூட்டங்களுக்காக பணம் கொடுத்து அழைத்துச் செல்கின்றனர்.
 அதேபோல் பலர் தேசிய ஊரக வேலை உறுதித் திட்டப் பணிக்குச் சென்று விடுவதால், கடலை அறுவடை செய்ய முடியாமல் ஆள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
 எனவே, வெளிமாவட்டமான வேலூர் மற்றும் வடமாநிலங்களைச் சேர்ந்த தொழிலாளர்களுக்கு ஓர் ஏக்கருக்கு நிலக்கடலை அறுவடை செய்து, கடலையை தனியாக பிரித்துக் கொடுப்பதற்கு ரூ.6 ஆயிரம் கூடுதலாக கூலி கொடுத்து பணியில் ஈடுபடுத்தி வருகிறோம் என்றார் அவர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com